
2025 ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தான் ஆடிய முதல் ஆறு போட்டிகளில் ஒரு வெற்றி மட்டுமே பெற்று ஐந்து தோல்விகளை சந்தித்துள்ளது. இந்த நிலையில் அந்த அணியால் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற முடியுமா? அதற்கு எத்தனை வெற்றிகளை பெற வேண்டும்? சிஎஸ்கே அணிக்கு இன்னும் எத்தனை லீக் போட்டிகள் மீதம் உள்ளன? என்பது பற்றி பார்க்கலாம்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஐபிஎல் வரலாற்றிலேயே தொடர்ந்து 5 போட்டிகளில் தோல்வி அடைந்ததில்லை. இந்த ஆண்டு சிஎஸ்கே அணி மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக விளையாடிய முதல் போட்டியில் வெற்றி பெற்றிருந்தது. அதன் பிறகு ஆடிய ஐந்து போட்டிகளில் ஐந்து வெவ்வேறு அணிகளுக்கு எதிராக படுதோல்விகளை சந்தித்து இருக்கிறது.
இதை அடுத்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இரண்டு புள்ளிகளுடன் -1.554 என்ற நெட் ரன் ரேட் உடன் ஒன்பதாவது இடத்தில் உள்ளது. இந்த நிலையில் இருந்து பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற வேண்டும் என்றால் சிஎஸ்கே அணி இன்னும் ஏழு வெற்றிகளை பெற வேண்டும். ஆனால், நிச்சயமாக ஆறு அல்லது ஏழு வெற்றிகள் தேவை. இன்னும் எட்டு போட்டிகள் மட்டுமே மீதம் உள்ளன. அந்த வகையில் பார்த்தால் இனி சிஎஸ்கே அணி எந்த ஒரு போட்டியிலும் தோல்வி அடையக் கூடாது.
தொடர்ந்து வெற்றிகளை மட்டுமே பெற்றுக் கொண்டு செல்ல வேண்டும். ஆனால், அந்த அணி தற்போது இருக்கும் நிலையில் அது சாத்தியமே இல்லை என்று அடித்துக் கூறலாம். பவுலிங், பேட்டிங், அணி தேர்வு, கேப்டன்சி, அணியின் திட்டம், சொந்த மைதானமான சேப்பாக்கத்தை பயன்படுத்தும் விதம் என அனைத்துமே சொதப்பலாக உள்ளது. இதிலிருந்து அந்த அணி மீண்டு வரும் என யாராலும் சொல்ல முடியாது. அடுத்து உள்ள எட்டு போட்டிகளில் சிஎஸ்கே அணி நான்கு அல்லது ஐந்து வெற்றிகளை பெற்றால் அது வியக்கத்தக்க விஷயமாகத்தான் இருக்கும்.
