10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் மே 20-ல் வெளியாகிறது : அமைச்சர் ராஜ்மோகன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு…!

தமிழகத்தில் கடந்த மார்ச் 11-ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 6-ஆம் தேதி வரை நடைபெற்ற 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள், திட்டமிட்டபடி நாளை மறுநாள் (மே 20) வெளியிடப்படும் எனப் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

இத்தேர்வை 8 லட்சத்து 82 ஆயிரத்து 806 பள்ளி மாணவர்களும், 13 ஆயிரத்து 744 தனித்தேர்வர்களும் என மொத்தம் சுமார் 9 லட்சம் பேர் எழுதியிருந்தனர்.

தமிழகம் முழுவதும் விடைத்தாள்கள் திருத்தப்பட்டு, மதிப்பெண்கள் கணினியில் பதிவேற்றும் பணிகள் முழுவீச்சில் நிறைவடைந்துள்ள நிலையில், மாணவர்கள் நாளை மறுநாள் தங்களது பதிவு எண் (Roll Number) மற்றும் பிறந்த தேதி (Date of Birth) ஆகிய விவரங்களை உள்ளிட்டு, பின்வரும் அரசு அதிகாரப்பூர்வ இணையதளங்கள் வாயிலாகத் தங்களின் முடிவுகளை உடனுக்குடன் அறிந்து கொள்ளலாம்: www.tnresults.nic.in, www.dge.tn.gov.in, results.digilocker.gov.in.

பின்னர், செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் ராஜ்மோகன், கோடை விடுமுறை முடிந்து திட்டமிட்டபடி ஜூன் 1-ஆம் தேதி பள்ளிகள் அனைத்தும் திறக்கப்படும் என்று உறுதிபடத் தெரிவித்தார். மேலும், 1-ஆம் வகுப்பு முதல் 3-ஆம் வகுப்பு வரையிலான புதிய பாடப்புத்தகங்களை அவர் இன்று வெளியிட்டார். இந்த புதிய பாடத்திட்டங்கள் மற்றும் புத்தகங்கள் தொடர்பாக, ஜூன் 1 முதல் ஜூன் 3-ஆம் தேதி வரை ஆசிரியர்களுக்குச் சிறப்புப் பயிற்சிகள் வழங்கப்படும் என்றும் அமைச்சர் அப்போது குறிப்பிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *