காங்கிரஸ் ஆட்சி நடந்து வரும் சத்தீஷ்கார் மாநிலத்தில், இன்னும் சில மாதங்களில் சட்டசபை தேர்தல் நடக்கிறது. இந்நிலையில், பிரதமர் மோடி நேற்று அங்கு சென்றார். தலைநகர் ராய்ப்பூரில் 7 ஆயிரத்து 600 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியும், தொடங்கியும் வைத்தார். இவற்றில், 4 வழிச்சாலை திட்டம், புதிய ரெயில் பாதை, இந்திய எண்ணெய் கழகத்தின் எரிபொருள் நிரப்பு நிலையம் உள்ளிட்டவையும் அடங்கும்.
ஒரு புதிய ரெயிலை காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார். மத்திய மந்திரிகள் நிதின் கட்காரி, மன்சுக் மாண்டவியா, ரேணுகா சிங் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பின்னர், பா.ஜனதா பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பேசினார். அதில், கடந்த 2018-ம் ஆண்டு சட்டசபை தேர்தலின்போது, மாநிலத்தில் மதுபானத்துக்கு தடை விதிப்பதாக காங்கிரஸ் கட்சி உறுதி அளித்தது. ஆனால், அதற்கு மாறாக, மதுபானத்தில் கோடிக்கணக்கான ரூபாய் பணத்தை காங்கிரஸ் கட்சி கொள்ளையடித்ததாக தெரிவித்தார்.
சத்தீஷ்கார் மாநிலம், காங்கிரஸ் கட்சிக்கு ஏ.டி.எம்.மாக இருக்கிறது என்றும், ஊழல்தான், காங்கிரஸ் கட்சியின் மிகப்பெரிய சித்தாந்தமாக உள்ளதாக தெரிவித்த அவர், ஊழல் இல்லாமல், காங்கிரசால் சுவாசிக்க முடியாது என்றும், மோசமான ஆட்சிக்கு முன்னுதாரணமாக சத்தீஷ்கார் அரசு திகழ்ந்து வருவதாகவும், வரும் தேர்தலில், இந்த அரசை வீட்டுக்கு அனுப்ப மக்கள் முடிவு செய்து விட்டதாக தெரிவித்தார்.