
வெயில் காலம் தொடங்கி விட்டதால் வெளியில் செல்வதற்கு கொஞ்சம் கடினமான சூழ்நிலையை பெண்கள் சந்திக்க நேரிடும். ஆரோக்கியமாக, அழகான முக சருமத்துக்காக, விளம்பரங்களில் விதவிதமாகக் காட்டப்படும் கிரீம், லோஷன் பயன்படுத்தி, தோலின் இயற்கைத் தன்மையை இழக்க வேண்டாம். பார்லர் போய் பணத்தை விரயம் செய்ய வேண்டாம். நம் சமையல் அறையில் பயன்படுத்தும் பொருட்களை வைத்தே அழகைப் பராமரிக்கலாம் என்கிறார். சூரியனின் கடுமையான தாக்கத்தால் சருமம் கறுப்பாகும்.
250 மி.லி ரோஸ் வாட்டரில் இரண்டு டீஸ்பூன் கடலை மாவு, ஒரு டீஸ்பூன் பால், ஒரு சிட்டிகை மஞ்சள் சேர்த்துப் பசை போன்று நன்கு கலக்க வேண்டும். கை, கால், முகம், கழுத்தில் பூசி, 20 நிமிடங்களுக்குப் பிறகு குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.
வாரத்தில் மூன்று நாட்கள் தூங்கும் முன்னர் செய்துவர, நல்ல பலன் கிடைக்கும்.நன்கு பழுத்த சிறிய பப்பாளிப் பழத்தைத் தோல் நீக்கி, சிறிய துண்டுகளாக்கி, நன்கு மசித்து அதில் ஒரு டேபிள்ஸ்பூன் தேன் கலந்து, இரவு தூங்கும் முன்னர் கை, கால், முகத்தில் பூசி, 30 நிமிடங்களுக்குப் பிறகு குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இதனை, வாரம் மூன்று முறை செய்யலாம்.ஒரு கப் தயிரில், ஒரு சிட்டிகை மஞ்சள்தூளை நன்கு கலக்க வேண்டும்.
அதை முகம், கை, காலில் பூசி, 20 நிமிடங்கள் கழித்துக் குளிக்கலாம். காலை குளிப்பதற்கு 20 நிமிடங்களுக்கு முன்னர் செய்துவிட்டுக் குளிக்க வேண்டும். தினமும் செய்துவந்தால், இரண்டு வாரங்களில் நல்ல பலன் கிடைக்கும்.தூங்கச் செல்லும் முன், கற்றாழையை இரண்டாக வெட்டி, கை, காலில் தேய்த்து, இரவு முழுவதும் விட்டுவிட வேண்டும். காலையில், குளிர்ந்த அல்லது வெதுவெதுப்பான நீரில் குளித்துவர, சருமத்தின் கருமை நிறம் மாறும்.தங்க நகை, கவரிங் நகை போடுவதால் சிலருக்குக் கழுத்தில் அலர்ஜி ஏற்பட்டு, கறுப்பாகும் வாய்ப்பு உண்டு.
சிலருக்கு ஹார்மோன் பிரச்னையினாலும் நிறம் மாறும். ஆரஞ்சுப் பழத்தின் தோலைக் காயவைத்து, அரைத்துப் பொடியாக்கி, அதனுடன் பால் சேர்த்து, தினமும் கழுத்தில் தடவி, காய்ந்தவுடன் கழுவி வந்தால், கழுத்தில் உள்ள கருமை நிறம் மாறும்.எலுமிச்சைச் சாற்றுடன் ரோஸ் வாட்டர் கலந்து, கழுத்தில் பூசி, இரவு முழுவதும் விட்டுவிட வேண்டும். இவ்வாறு, ஒரு மாதம் செய்வது நல்லது.வயது அதிகரித்தல், தூக்கமின்மை, ஊட்டச்சத்துக் குறைவு, மன அழுத்தம் போன்றவற்றால் கண்களைச் சுற்றிலும் கருவளையம் தோன்றும். வெள்ளரிச் சாறு இரண்டு டீஸ்பூன், எலுமிச்சைச் சாறு ஒரு டீஸ்பூன் கலந்து, அதைப் பஞ்சில் நனைத்துக் கண்களுக்கு மேல்வைத்து, 20 நிமிடங்கள் கழித்துக் கழுவ வேண்டும். தினமும் செய்துவர, ஒரு வாரத்தில் நல்ல தீர்வு கிடைக்கும்.
