
http://pic.twitter.com/45qCXgdXmi
டாஸ்மாக் மது விற்பனையில் அமைச்சர் மாறியபோதும் அவலம் மாறவில்லை என வீடியோ வெளியிட்டு பத்து ரூபாய் பரிதாபத்தை அம்பலடுத்துகிறார் பாஜக தமிழகத் தலைவர் அண்ணாமலை.
மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி, மத்திய விசாரணை அமைப்பான அமலாக்கத்துறையின் விசாரணை மற்றும் கைது நடவடிக்கைகளுக்கு ஆளானதில், உடல்நிலை பாதிக்கப்பட்டு இலாகா இல்லாத மந்திரியாக சிகிச்சை பெற்று வருகிறார். அவரது மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் முத்துசாமி வசம் ஒப்படைக்கப்பட்டது.
இதனையடுத்து, அதிமுக – திமுக என அனுபவம் மிக்க மூத்த அமைச்சரான முத்துசாமி நிர்வாகத்தில் பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்ற எதிர்பார்ப்பும் நிலவியது. அதற்கேற்ப 500 டாஸ்மாக் கடைகள் மூடல் தொடர்பான அறிவிப்பும் வெளியானது.
மேலும், செந்தில் பாலாஜிக்கு எதிராக குடி மக்கள் கிளந்தெழக் காரணமான, பாட்டிலுக்கு பத்து ரூபாய் வசூலுக்கு எதிராகவும் அமைச்சர் முத்துசாமி அதிரடி உத்தரவிட்டார். இந்த உத்தரவு குடிப்பிரியர்களின் வயிற்றில் மது வார்த்தது. ஆனால் நடைமுறையில் இந்த உத்தரவு எந்தளவுக்கு செல்லுபடியாகிறது என்பதை விளக்க, பாஜக தமிழகத் தலைவர் அண்ணாமலை இன்று ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார்.
அதில், டாஸ்மாக் கடை ஒன்றின் முன்பாக, பத்து ரூபாய் வசூலால் பாதிக்கப்பட்ட சாமானியர் ஒருவர் கடைக்கு வரும் சக குடிப்பிரியர்களிடம் குமுறலாக முறையிடுகிறார். இதற்கிடையே அங்கே ஆஜரான போலீஸ்காரர் ஒருவர், பத்து ரூபாய் புகார் புலம்பல் நபரை கையால் கடுமையாக தாக்கி அங்கிருந்து விரட்டியடிக்கிறார்.
இந்த காட்சிகளை உள்ளடக்கிய வீடியோவை வெளியிட்டிருக்கும் அண்ணாமலை, ஆட்சியாளர்கள் தவறு செய்தால், தண்டனை மக்களுக்கு. அமைச்சர் மாறினாலும் அவலம் மாறவில்லை என்று பதிவிட்டுள்ளார். அந்த பதிவின் கீழ் பதில் தெரிவிக்கும் பலரும் அண்ணாமலையின் குரலை வழிமொழிந்து வருகின்றனர்.
