கேரளா, ஆந்திரா, தெலுங்கானா, புதுச்சேரி போன்று தமிழகத்திலும் கள் இறக்குஅனுமதிக்க வேண்டும்!

Advertisements
           கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் செ.நல்லசாமி அரசுக்கு கோரிக்கை!

தமிழகத்தில் கடந்த 01.01.1987-ம் ஆண்டு முதல் கள்ளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. சுமார் 35 ஆண்டு காலமாக கள் இறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தடையை நீக்கக்கோரி பல்வேறு அமைப்புகள் கோரிக்கை விடுத்து வருகின்றன. மேலும் கள் இயக்கம் சார்பில் கள் தடை செய்யப்பட்ட போதை பொருள் என்று நிரூபித்தால் ரூ.10 கோடி வழங்கப்படும் என்றும் பரிசு அறிவிக்கப்பட்டது. தொடர்ந்து தமிழகத்தில் கள் இறக்குவதற்கான ஆதரவு குரல்கள் அதிகரித்து வந்தது. இந்த நிலையில் அமைச்சர் முத்துசாமி கள் இறக்க அனுமதி வழங்குவது குறித்து குழு நியமிக்கப்பட்டுள்ளதாகவும், எனவே அந்த குழுவின் அறிக்கையின் அடிப்படையில் கள் இறக்க அனுமதி அளிக்கப்படும் என்று அறிவித்தார்.

Advertisements

இந்த அறிவிப்பிற்கு கள் இயக்க ஆதரவாளர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். இதுகுறித்து கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் செ.நல்லசாமியிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:- ఃகள்ః தமிழ் மண்ணின் அடையாளம். சங்க காலத்தில் அரசர்களும், புலவர்களும், ஆன்றோர்களும், சான்றோர்களும், ஆண்களும், பெண்களும் உடன் அமர்ந்து உண்ட உணவின் ஒரு பகுதி கள். அதியமான், அவ்வையார் ஆகியோரும் கள் குடித்ததற்கான சான்று புறநானூற்று பாடலில் உள்ளது. அதியமான் இறந்த பின்பு அவரது நடுக்கல்லுக்கு கள் படையல் வைத்து வழிபட்டுள்ளனர். இதன் மூலம் கள் உணவுப் பொருளாகவும், படையல் பொருளாகவும் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. பாரி வள்ளல் பரம்பு மலை மீது புலவர்களுக்கு அதிக அளவில் கள் கொடுத்துள்ளார்.

அந்த கள் பரம்பு மலை பாறைகள் மீது வழிந்தோடியதாக கூறப்படுகிறது. அரசியல் அமைப்பு சட்டப்படி கள் இறக்குவதும், பருகுவதும் உணவு தேடும் உரிமையாகும். 1950-ம் ஆண்டு ஜனவரி 26-ந்தேதி அரசியல் அமைப்பு சட்டம் நடைமுறைக்கு வந்தது. இதில் 47-வது பிரிவு மது விலக்கு மற்றும் மது கொள்கையில் கள்ளுக்கு தடை விதிக்கக் கூடாது, அரு மருந்து என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில்தான் 01.01.1987-ம் ஆண்டு கள்ளுக்கு தடை விதிக்கப்பட்டது. எம்.ஜி.ஆர் ஆட்சி காலத்தில் இந்த தடை விதிக்கப்பட்டது. ஆனால் எம்.ஜி.ஆரே கள் ஆதரவாளர்தான். அவர் எழுதிய புத்தகத்தில் நான் சிறுவனாக இருந்தபோது ஏற்பட்ட நோயிலிருந்து தப்பிக்க கள் பருகினேன். இதனால் அந்த நோயிலிருந்து மீண்டேன் என குறிப்பிட்டுள்ளார். கடந்த 18 ஆண்டுகளாக கள் இறக்க விதிக்கப்பட்ட தடையை நீக்கக்கோரி நாங்கள் போராடி வருகிறோம். கள் உணவின் ஒரு பகுதி. கள் தடை செய்யப்பட்ட போதை பொருள் என்று நிரூபித்தால் ரூ.10 கோடி தருவதாக கூறினோம். ஆனால் யாரும் எங்களிடம் விவாதம் செய்ய வரவில்லை.

இந்தியாவில் சுதந்திரத்திற்கு முன்பு 50 கோடி பனை மரங்கள் இருந்ததாக ஆங்கிலேயர் காலத்து புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. கள் தடை காரணமாக தற்போது பனை மரங்கள் எண்ணிக்கை 5 கோடியாக குறைந்து விட்டது. 45 கோடி பனை மரங்கள் செங்கல் சூளைக்கும் சுண்ணாம்பு காலவாய்க்கும் எரிபொருளாக பயன்படுத்தப்பட்டு விட்டது. தென்னை மரத்தை 3 முதல் 4 ஆண்டுகளில் வளர்த்து விடலாம். ஆனால் பனை மரத்தை நினைத்த உடன் உருவாக்க முடியாது. பனை மரம் வளர 13 முதல் 14 ஆண்டுகள் ஆகும். கள்ளில் உடலுக்கு தேவையான ஊட்ட சத்துக்கள் உள்ளன. கள் தாய்ப்பாலுக்கு நிகரானது. தாய்ப்பாலில் உள்ள லோரிக் ஆக்சிட் கள்ளில் அதிக அளவில் உள்ளன. கள்ளுக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்கினால் 10 லட்சம் பனை தொழிலாளர்கள் குடும்பங்களும், 50 லட்சம் விவசாய குடும்பங்களும் பயன் அடைவார்கள். மேலும் 8 கோடி மக்களுக்கும் சத்தான இயற்கையான மென்பானம் கிடைக்கும்.

பனை மரத்தில் கள் இறக்குவதற்கு மின்சாரம் தேவையில்லை. சுற்றுச்சூழலும் பாதிக்காது. படித்த இளைஞர்களுக்கும் வேலை வாய்ப்பு கிடைக்கும். கள் மூலம் மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களை தயாரித்து பன்னாட்டு விமான நிலையங்கள், நட்சத்திர விடுதிகள், வெளிநாடுகளுக்கு அனுப்பி வருவாய் ஈட்டலாம். இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் அதிகமான பனை மரங்கள் உள்ளன. கள்ளுக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்கினாலே தமிழகம் தலை நிமிரும். முதன்மை மாநிலமாக மாறும். மேலும் கேரளா, ஆந்திரா, தெலுங்கானா, புதுச்சேரி போன்ற மாநிலங்களில் கள்ளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ள நிலையில் தமிழகத்திலும் கள்ளுக்கான தடையை நீக்கினால் 60 லட்சம் குடும்பத்தினர் பயன் பெறுவார்கள். கள் இறக்குவதற்கான தடையை அரசு நீக்கினால் வரவேற்போம். இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *