Annamalai:பிரதமர்மீது பழி சுமத்துவதை மு.க.ஸ்டாலின் நிறுத்திக்கொள்ள வேண்டும்!

Advertisements

பிரதமர் மோடிக்கு தமிழர்கள்மீது அளவற்ற அன்பு, மதிப்பு இருக்கிறது என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

சென்னை:ஒடிசா ஜெகநாதர் கோவிலில் தொலைந்து போன சாவிகள் தமிழ்நாட்டில் இருப்பதாகப் பிரதமர் மோடி பேசிய பேச்சு சர்ச்சையாகி உள்ளது. இதற்குக் கண்டனம் தெரிவித்துள்ள முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழர்கள்மீது திருட்டுப்பழி சுமத்துவதா? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

இதற்குப் பதிலடி கொடுத்துத் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வீடியோ வெளியிட்டுப் பேசியதாவது:-

பொய் சொல்வதையே முழு நேர வேலையாக வைத்துள்ள முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒடிசா தேர்தல் பிரச்சாரத்தில் தமிழர்களை அவமதித்துப் பிரதமர் பேசியதாக மற்றொரு பொய்யைச் சொல்லியிருக்கிறார்.

ஒடிசா முதல்-மந்திரி நவீன் பட்நாயக்கை யாராலும் சந்திக்க முடியாது. தலைமைச் செயலாளர், டிஜிபி, அமைச்சர்கள் என யாராக இருந்தாலும் முதல்-அமைச்சரை சந்திக்க தமிழகத்தை சேர்ந்த வி.கே.பாண்டியன்தான் அனுமதி கொடுப்பார். ஒடிசாவின் அரசியல் ஒடிசாவை சாராத ஒருவர் அம்மாநில அரசை இயக்குவதா? என்று பிரதமர் பேசினார். அது தவறுதானே. அந்தந்த மாநிலத்தின் அரசியல் தன்மையை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

புரி ஜெகநாதர் கோவில் கருவூலத்தின் சாவி காணாமல் போய்விட்டது. அதை யாரோ திட்டமிட்டு மறைத்துள்ளனர். அதற்குப் பொறுப்பு யார்?. சொல்லப் போனால் அங்கு முதல்-மந்திரியே வி.கே.பாண்டியன்தானே. தமிழகத்தில் மண்ணின் மைந்தர் எனப் பேசும் நிலையில், ஒடிசாவில் மட்டும் தனிநியாயமா?. ஒடிசா மக்களுக்கு முன்னுரிமை தராமல் வேறு மாநிலத்திலிருந்து ஒருவர் உள்ளார். நாங்கள் ஒடிசாவில் பிறந்த ஒருவரை ஒடிசா முதல்-மந்திரி ஆக்குவோம்’ எனப் பிரதமர் பேசியுள்ளார். இது எப்படி தவறாகும்?. இதை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் புரிந்து கொள்ள வேண்டும்.

பிரதமருக்குத் தமிழர்கள்மீது அளவற்ற அன்பு, மதிப்பு இருக்கிறது. அதற்காகத் தமிழர்களை அனைத்து மாநிலங்களுக்கும் கொண்டு சென்று முதல்-அமைச்சராக்க முடியுமா?. எனவே முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பொய் கூறுவதை நிறுத்திக்கொள்ள வேண்டும். பிரதமர்மீது பழி சுமத்துவது கண்டிக்கத்தக்கது. இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *