YouTuber Irfan:தொப்புள் கொடியை வெட்டிய விவகாரம்.. யூடியூபர் இர்பானிடம் போலீஸ் விசாரணை!

Advertisements

தனியார் மருத்துவமனையில் கடந்த ஜூலை மாதம் 24-ந் தேதி யூடியூபர் இர்பான் மனைவிக்குக் குழந்தை பிறந்தது.

சென்னை:பிரபல யூடியூபர் இர்பான் சில மாதங்களுக்கு முன்பு தனது மனைவியின் கருவில் உள்ள பாலினத்தை வெளியிட்டுச் சர்ச்சையில் சிக்கினார். இதற்குக் கடும் எதிர்ப்பு கிளம்பிய நிலையில், அவர் தனது யூடியூப் சேனலில் இருந்த பாலினம் குறித்த வீடியோவை நீக்கினார். பாலினம் குறித்த வீடியோ வெளியிட்டதற்கு மன்னிப்பு கேட்டுக் கடிதம் வழங்கினார். இதையடுத்து அவர்மீதான நடவடிக்கையை மருத்துவத்துறை நிர்வாகம் நிறுத்தி வைத்தது.

சென்னையை அடுத்த சோழிங்கநல்லூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் கடந்த ஜூலை மாதம் 24-ந் தேதி யூடியூபர் இர்பான் மனைவிக்குக் குழந்தை பிறந்தது. குழந்தை பிறந்தது முதல் ஆபரேஷன் தியேட்டரில் குழந்தையின் தொப்புள் கொடியை வெட்டுவது வரை உள்ள காட்சியை அறுவை சிகிச்சையின்போது கேமராவில் பதிவு செய்து அதனைத் தனது யூடியூப் சேனலில் கடந்த 19-ந் தேதி இர்பான் பதிவு செய்தார்.

இந்த வீடியோவில் அறுவை சிகிச்சையின்போது டாக்டர் ஒருவர் கத்தரிக்கோலை எடுத்து இர்பான் கையில் கொடுக்கிறார். அவர் தனது குழந்தையின் தொப்புள் கொடியை வெட்டுகிறார். இந்தக் காட்சி சமூக வலைதளத்தில் வேகமாகப் பரவியது. ஆபரேசன் தியேட்டருக்குள் கேமராக்களுடன் சென்று, குழந்தையின் தொப்புள் கொடியை வெட்டுவது மருத்துவ சட்டத்தின் படி தவறு ஆகும். இதில், எந்தவித மருத்துவ பயிற்சியும் இல்லாமல் ஒருவர் ஆபரேஷன் தியேட்டருக்குள் சென்று குழந்தையின் தொப்புள் கொடியை வெட்டுவது கடும் கண்டனத்திற்கு உரியது என டாக்டர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்த விவகாரம் விஸ்வரூபமான நிலையில், யூடியூபில் வெளியான சர்ச்சை வீடியோவை நீக்கக்கோரி மருத்துவத்துறை சார்பில் இர்பானுக்கு கடிதம் அனுப்பப்பட்டது. மேலும், பிரசவம் நடந்த தனியார் மருத்துவமனையில் மருத்துவத்துறை அதிகாரிகள் ஆய்வு நடத்தினர். இர்பான் வீடியோ தொடர்பாக மண்டல சுகாதாரத்துறை அலுவலர்கள்மூலம் விசாரிக்கவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் யூடியூபர் இர்பானின் மனைவி தொடர்பான மருத்துவ ஆவணங்களைக் கைப்பற்றிய செம்மஞ்சேரி போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

முன்னதாக ‘பிரசவம் பார்த்த டாக்டர் நிவேதிதா மற்றும் குழந்தையின் தொப்புள் கொடியை வெட்டி வீடியோ வெளியிட்ட இர்பான் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கோரி இளங்கோவன் என்பவர் புகாரளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *