செங்கடல் பகுதியில் ஏமனைச் சேர்ந்த ஹவுதி இயக்கத்தினரால் தாக்கி மூழ்கடிக்கப்பட்ட சரக்குக் கப்பலில் இருந்தவர்களில் மூன்று பேர் உயிரிழந்த நிலையில் ஆறுபேரை மீட்புப் படையினர் மீட்டுள்ளனர்.
லைபீரிய நாட்டின் கொடியுடன் கிரேக்க நிறுவனத்தால் இயக்கப்பட்ட எட்டர்னிட்டி சி சரக்குக் கப்பல் மாலுமிகள், பணியாளர்கள் என மொத்தம் 25 பேருடன் செங்கடல் பகுதியில் இஸ்ரேல் நோக்கிச் சென்று கொண்டிருந்தது.
அப்போது சிறிய படகுகளில் வந்து அந்தக் கப்பலைச் சூழ்ந்துகொண்ட ஏமனின் ஹவுதி இயக்கத்தினர் ஏவுகணைகள், எறிகுண்டுகள் ஆகியவற்றைக் கொண்டு கப்பலைத் தாக்கினர்.
இதில் குறிப்பிடத்தக்க சேதமடைந்த சரக்குக் கப்பல் படிப்படியாகக் கடலில் மூழ்கியது. அதிலிருந்த மாலுமிகளும் பணியாளர்களும் கடலில் குதித்தனர்.
அவர்களில் ஆறு பேர் மீட்கப்பட்டதாகவும் மூவர் உயிரிழந்ததாகவும் ஐரோப்பிய கடற்படை தெரிவித்துள்ளது. உயிர் தப்பியவர்களில் சிலரை ஹவுதிகள் பணயக் கைதியாகப் பிடித்து வைத்துள்ளதாகத் தெரிவித்துள்ள ஏமனில் உள்ள அமெரிக்கத் தூதரகம், அவர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளது.
கப்பலில் இருந்தவர்களில் 21 பேர் பிலிப்பைன்ஸ் நாட்டவர்கள் என்றும், ஒருவர் ரஷ்யர் என்றும் தெரியவந்துள்ளது.
இந்த வாரத்தில் ஹவுதி இயக்கத்தினரால் தாக்கி மூழ்கடிக்கப்பட்ட இரண்டாவது கப்பல் இது. ஏற்கெனவே ஞாயிறன்று மேஜிக் சீஸ் என்கிற கப்பலை அவர்கள் மூழ்கடிக்கப்பட்டனர்.
அதில் இருந்த மாலுமிகள், பணியாளர்கள் 22 பேரும் மற்றொரு வணிகக்கப்பலில் இருந்தவர்களால் மீட்கப்பட்டனர்.


