மாணவர் பாரதிதாசன் வெளியிட்டுள்ள காணொளியில் உண்மைக்கு மாறான தகவல்களைப் பதிவு செய்துள்ளதாகத் தமிழ்நாடு சமூகநீதித் துறை விளக்கம் அளித்துள்ளது.
மலேசியாவில் முனைவர் பட்டம் படிக்கும் மாணவர் பாரதிதாசன், தனது இரண்டாம் ஆண்டு படிப்பிற்குக் கல்வி உதவித்தொகையை அரசு வழங்கவில்லை என்று சமூகவலைதளத்தில் காணொளி வெளியிட்டார்.
இதுதொடர்பாக, தமிழ்நாடு சமூகநீதி துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், பாரதிதாசனின் செலவின கோரிக்கை 19 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் தொடர்பாக, பரிந்துரைத்து அனுப்பும்படி தெரிவித்து, அவர் படிக்கும் பல்கலைக்கழகத்திற்கு மின்னஞ்சல் கடிதம் 17ஆம் தேதி அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது. அதன் நகல் அந்த மாணவருக்கும் அனுப்பி வைக்கப்பட்டதாகவும் கூறியுள்ளது. தொடர்ந்து பல்கலைக்கழகத்திடம் இருந்து பதில் கிடைத்ததும் கல்வி உதவித் தொகை விடுவிக்கப்படும் என்ற தகவலும் மின்னஞ்சலில் தெரிவிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது.
ஆனால் மாணவர் பாரதிதாசன் சமூகவலைதளத்தில் காணொளி ஒன்றை பதிவுசெய்து, உண்மைக்கு மாறான தகவல்களை பதிவு செய்துள்ளதாகத் தெரிவித்துள்ளது. மாணவருக்கு இதுவரையில் முதலாமாண்டு படிப்பிற்கு 36 இலட்சம் ரூபாய் மற்றும் இரண்டாம் ஆண்டிற்கு 12 இலட்சம் ரூபாய் என மொத்தம் 48 இலட்சம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது. இந்தநிலையில், மாணவரின் காணொளியில் குறிப்பிட்டுள்ள கருத்துக்கள் முற்றிலும் உண்மைக்கு புறம்பானதாகவும், அவப்பெயர் ஏற்படுத்தும் நோக்கத்துடனும் உள்ளதாகத் தெரிவித்துள்ளது.
கல்வி உதவித்தொகை திட்டங்களை பொறுத்தவரை, சமூக நீதி துறை இதுவரை இல்லாத அளவில் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளது. எனவே மாணவரின் இந்த காணொளியானது உண்மைக்கு மாறான தகவல்களுடன் பல்வேறு மாணவர்கள் பயன்பெற்று வரும் இத்திட்டத்திற்கு அவப்பெயர் ஏற்படுத்தும் நோக்கத்துடன் உள்ளதாகக் கூறியுள்ளது.

