பெண்கள் வரும் தேர்தலில் பா.ஜ.க,வை தூக்கி எறிவார்கள்!முதல்வர் மம்தா பானர்ஜி ஆவேசம் !

கோல்கட்டா: ‘வரும் தேர்தலில் இந்த நாட்டு பெண்கள் பா.ஜ.,வை அரசியலில் இருந்து தூக்கி எறிவார்கள்’ என மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.

மணிப்பூரில் ஏற்பட்ட கலவரம் ஓய்ந்து அமைதி திரும்பும் நிலையில், 2 பழங்குடியின பெண்கள், நிர்வாணமாக அழைத்து செல்லப்பட்ட வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதனைத்தொடர்ந்து பா.ஜ.,வுக்கு எதிராக ‘இந்தியா’ என்ற பெயரில் ஒன்று சேர்ந்துள்ள எதிர்க்கட்சி தலைவர்கள் குழு, நாளை (ஜூலை 22) மணிப்பூர் சென்று ஆய்வு செய்ய உள்ளதாகவும், பாதிக்கப்பட்டவர்களை சந்திக்க உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் ‘இந்தியா’ கூட்டணியில் இடம்பெற்ற திரிணமுல் காங்., தலைவரும், மேற்குவங்க முதல்வருமான மம்தா பானர்ஜி கூறியதாவது:

எங்கள் மகள்களை காப்பாற்றுங்கள்’ என்ற கோஷத்தை நீங்கள்தான் (பா.ஜ.,) கொடுத்தீர்கள். இப்போது உங்கள் கோஷம் எங்கே போனது?. இன்று மணிப்பூர் மட்டுமல்லாமல் நாடு முழுவதும் எரிகிறது. பில்கிஸ் பானு வழக்கில், குற்றம் சாட்டப்பட்டவர்கள் ஜாமினில் விடுவிக்கப்பட்டனர்.மல்யுத்த வீராங்கனை வழக்கில் பிரிஜ் பூஷன் சிங் ஜாமினும் பெற்றுள்ளார். வரும் தேர்தலில் இந்த நாட்டு பெண்கள் உங்களை அரசியலில் இருந்து தூக்கி எறிவார்கள்.

மணிப்பூரில் நடந்த சம்பவம் உங்களை கொஞ்சம் கூட காயப்படுத்தவில்லையா என்று பிரதமர் மோடியிடம் கேட்க விரும்புகிறேன். நீங்கள் மேற்குவங்கத்தை நோக்கி விரல் காட்டுகிறீர்கள் ஆனால் சகோதரிகள் மற்றும் தாய்மார்கள் மீது உங்களுக்கு அன்பு இல்லையா? வடகிழக்கு சகோதரிகள் எங்கள் சகோதரிகள்; நாங்கள் மணிப்பூரை விட்டு வெளியேற மாட்டோம். இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *