
புதுடில்லி:
பார்லிமென்ட் குளிர்கால கூட்டத்தொடர் பலத்த எதிர்பார்ப்புடன் இன்று (நவ.,25) துவங்கியது. அதானி விவகாரம் மற்றும் மணிப்பூர் குறித்து விவாதிக்க கோரி, எதிர்க்கட்சியினர் அமளியில் ஈடுபட்டனர். லோக்சபா, ராஜ்யசபா இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டது.
பார்லிமென்ட் குளிர்கால கூட்டத்தொடர் இன்று (நவ.,25) துவங்கியது. டிசம்பர் 20ம் தேதிவரை கூட்டதொடர் நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்தொடரில், வக்பு வாரிய திருத்த மசோதா, ஒரே நாடு; ஒரே தேர்தல் உள்ளிட்ட 16 மசோதாக்களை நிறைவேற்ற, ஆளும் பா.ஜ., தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு திட்டமிட்டுள்ளது. வக்பு வாரிய திருத்த மசோதா, பார்லி., கூட்டுக்குழு விசாரணைக்கு அனுப்பப்பட்டுள்ளது.
சூரிய சக்தி மின்சாரத்தை விற்க இந்திய அதிகாரிகளுக்கு, 2,200 கோடி ரூபாய் லஞ்சம் கொடுக்கப்பட்டதாகப் பிரபல தொழிலதிபர் கவுதம் அதானி மீது அமெரிக்காவில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், இன்று (நவ.,25) லோக்சபா, ராஜ்யசபா ஆகிய இரு அவைகளும் துவங்கியதும், இந்த விவகாரத்தை விவாதிக்க கோரி, காங்., – திரிணமுல் காங்., – தி.மு.க., உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அடங்கிய ‘இண்டியா’ கூட்டணியினர் கோஷம் எழுப்பினர்.
அவை துவங்கியதும் எதிர்க்கட்சியினர் அமளியில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தமிழகத்திற்கு நிதி ஒதுக்கீடு செய்யுமாறு தமிழக எம்.பி., க்கள் கோஷம் எழுப்பினர். எதிர்க்கட்சியினர் அமளி காரணமாக, லோக்சபா, ராஜ்யசபா இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டது.



