
மத்திய அரசின் உணவுத்துறையின் சார்பில் அமைக்கப்பட்ட குழுவினர், கொள்முதல் செய்யும் நெல்லின் ஈரப்பதத்தை 17 விழுக்காட்டில் இருந்து 22 விழுக்காடாக உயர்த்துவது குறித்துப் புதுக்கோட்டை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் ஆய்வு நடத்தினர்.
காவிரிப் பாசன மாவட்டங்களில் அரசின் கொள்முதலுக்காக மூட்டைகளில் வைக்கப்பட்டிருந்த நெல் உரிய காலத்தில் அரசால் கொள்முதல் செய்யப்படாததால், மழையில் நனைந்து மூட்டைகளிலேயே முளைத்து விட்டது.
இதையடுத்துக் கொள்முதல் செய்யும் நெல்லின் ஈரப்பதத்தை 17இல் இருந்து 22 விழுக்காடாக உயர்த்த வேண்டும் என்று விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.
அதன்படி புதுக்கோட்டை மாவட்டத்தில் கந்தர்வக்கோட்டை, இரகநாதபுரம், தட்டாமனைப்பட்டி, குளத்தூர், நாயக்கர்பட்டி ஆகிய ஊர்களில் கொள்முதல் நிலையங்களில் உள்ள நெல்லின் ஈரப்பதம் குறித்து மத்தியக் குழுவினர் ஆய்வு நடத்தினர்.
கல்லாக்கோட்டை, பந்துவாக்கோட்டை ஆகிய ஊர்களில் மத்தியக் குழுவினர் ஆய்வுக்கு வந்தபோது இருட்டிவிட்டது. இதனால் ஆய்வைப் பாதியில் முடித்துக் கொண்டு, மீதமுள்ள மூன்று கொள்முதல் நிலையங்களில் ஆய்வு செய்யாமல் திரும்பிச் சென்றனர். இந்நிகழ்வு மத்தியக் குழுவின் வருகைக்காகக் காத்திருந்த விவசாயிகளுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது.
திருவாரூர் மாவட்டத்தில் இதுவரை நேரடி கொள்முதல் செய்யப்பட்ட 40 ஆயிரம் டன் நெல் மூட்டைகளை அரவைக்கு அனுப்பியுள்ளதாக மாவட்ட ஆட்சியர் மோகனச்சந்திரன் தெரிவித்துள்ளார். திருவாரூர் மாவட்டத்தில் உள்ள கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்பட்ட நெல் உடனுக்குடன் அரவை ஆலைகளுக்கும், கிடங்குகளுக்கும் அனுப்பிவைக்கும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.
உள்ளிக்கோட்டை, கண்ணாரப்பேட்டை கொள்முதல் நிலையங்களில் இருந்து லாரிகள் மூலம் ஆயிரக்கணக்கான நெல்மூட்டைகள் மன்னார்குடி நீடாமங்கலம் இரயில் நிலையங்களுக்குக் கொண்டுசெல்லப்பட்டு அங்கிருந்து சரக்கு இரயில் மூலமாக அரவை ஆலைகளுக்கு அனுப்பப்படுகின்றன.
திருத்துறைப்பூண்டி, மன்னார்குடி, நீடாமங்கலம் ஆகிய ஊர்களில் இருந்து கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகளை வெளிமாவட்டங்களுக்கு அரவைக்கு அனுப்பி வைக்கும் பணியை மாவட்ட ஆட்சியர் மோகனச்சந்திரன் பார்வையிட்டார்.


