
மேற்கு வங்காளத்தில் வாக்குப்பதிவு ரத்து செய்யப்பட்ட 15 வாக்குச்சாவடிகளுக்கு இன்று மறுவாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.
294 தொகுதிகளை கொண்ட மேற்கு வங்காள சட்டசபைக்கு 2 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. முதற்கட்ட தேர்தல் கடந்த 23 ஆம் தேதியும், 2ம் கட்ட தேர்தல் கடந்த 29 ஆம் தேதியும் நடைபெற்றது.
இதனிடையே, 2ம் கட்ட தேர்தலில் ஒருசில வாக்குச்சாவடிகளில் முறைகேடுகள் நடைபெற்றன. பாஜக வேட்பாளருக்கு வாக்கு அளிக்க முடியாத வகையில் வாக்குப்பதிவு எந்திரத்தில் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருந்தது. இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதன் காரணமாக டைமண்ட் ஹார்பர் தொகுதியில் 4 வாக்குச்சாவடிகளிலும், மெக்ராஹட் பட்சிம் தொகுதியில் 11 வாக்குச்சாவடிகளிலும் தேர்தல் ரத்து செய்யப்பட்டு மறுதேர்தல் நடைபெறும் என்று மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்தது. இதைத் தொடர்ந்து, மேற்கு வங்காளத்தில் வாக்குப்பதிவு ரத்து செய்யப்பட்ட 15 வாக்குச்சாவடிகளுக்கு இன்று மறுவாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.
காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 வரை நடைபெற உள்ளது. இதையடுத்து, வாக்குச் சாவடிகளுக்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.




