உதயநிதி ஸ்டாலின் கைது – தெற்கு காவல் நிலையத்தில் வைத்து விசாரணை!

Advertisements

தஞ்சையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் முதலமைச்சர் விஜய் மற்றும் நடிகை திரிஷா குறித்து அவதூறாகப் பேசியதாக அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில், திமுக இளைஞரணி செயலாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான உதயநிதி ஸ்டாலின் சென்னை நீலாங்கரையில் உள்ள அவரது இல்லத்தில் இன்று காலை 11 மணியளவில் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். இவரைக் கைது செய்து தஞ்சாவூருக்கு அழைத்துச் செல்லும் தகவல் பரவியதை அடுத்து, தமிழ்நாடு முழுவதும் திமுகவினர் போராட்டத்தில் குதித்தனர். இதனிடையே, உதயநிதியை இன்றே விசாரித்து விடுதலை செய்ய வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியது.

இந்தப் பயணத்தின் போது, பகல் 2 மணியளவில் விழுப்புரம் அருகே உள்ள ஒலப்பூர் காவல் நிலையத்தில் அவர் உணவு உண்டார். தொடர்ந்து மாலை 4 மணியளவில் உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடியைக் கடந்த காவல்துறையினர், திருச்சி வழியாக தஞ்சாவூருக்கு அழைத்துச் செல்லத் திட்டமிட்டனர். பெரம்பலூர் மாவட்டம் திருமாந்துறை சுங்கச்சாவடியில் முன்னாள் அமைச்சர் சி.வி. கணேசன் பிளாஸ்க்கில் சூடான தேனீர் வழங்கி அவரைப் பார்த்துக் கொண்டார். கிட்டத்தட்ட 8 மணி நேரத்திற்கும் மேலாக வேனிலேயே பயணம் செய்து வரும் உதயநிதி ஸ்டாலின், விசாரணைக்காகத் தஞ்சை தெற்கு காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்படவுள்ளார்.

முதலில் தஞ்சை கிழக்கு சரக காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்தாலும், அப்பகுதி அதிக போக்குவரத்து நெரிசல் மிக்கது என்பதாலும், திமுகவினர் அதிக அளவில் கூடுவதைத் தடுக்கும் பொருட்டுக் கவல்துறையினர் பாதுகாப்புடன் அவரை மணிமண்டபம் அருகில் உள்ள தெற்கு காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரிக்க முடிவு செய்துள்ளனர்.

இதையொட்டி தஞ்சை தெற்கு காவல் நிலையப் பகுதியில் போக்குவரத்து தடை செய்யப்பட்டு, பெரியகோவில் மேம்பாலம் வழியாக செல்லும் வாகனங்கள் மாற்றுப் பாதையில் திருப்பி விடப்பட்டுள்ளன. சாலையின் இருபுறங்களிலும் தடுப்புகள் (பேரிகார்டுகள்) அமைக்கப்பட்டு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

மேலும், சட்டம்-ஒழுங்கைத் தீவிரமாகக் கண்காணிக்கவும், பாதுகாப்பு ஏற்பாடுகளை ஒருங்கிணைக்கவும் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், அரியலூர் மற்றும் பெரம்பலூர் ஆகிய ஐந்து மாவட்டங்களின் காவல் கண்காணிப்பாளர்களும் தற்போது தஞ்சைக்கு வருகை தந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *