West Bengal : நீண்ட வரிசையில் காத்திருந்து மக்கள் வாக்களிப்பு.!

Advertisements

மேற்கு வங்கச் சட்டமன்றத் தேர்தலில் இரண்டாம் கட்டமாக 142 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. மக்கள் ஆர்வத்துடன் வாக்குச்சாவடிகளில் வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர். அதேநேரத்தில் திரிணாமூல் தொண்டர்கள் பாஜகவினர் மீது பல இடங்களில் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

மேற்கு வங்கத்தில் முதற்கட்டமாக ஏப்ரல் 23ஆம் நாள் 152 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது. எஞ்சியுள்ள 142 தொகுதிகளுக்கு இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு இன்று காலையில் தொடங்கி நடைபெற்று வருகிறது. காலை முதலே பொதுமக்கள் ஆர்வத்துடன் வாக்குச்சாவடிகளுக்குச் சென்று வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர்.

வாக்காளர்கள் வெயிலால் பாதிக்கப்படாமல் இருக்க வாக்குச்சாவடிகளின் முன் பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. அனைத்து வாக்குச் சாவடிகளிலும் மேற்கு வங்கக் காவல்துறையினருடன் மத்தியத் துணை இராணுவப் படையினரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

மத்திய இணையமைச்சரும் பாங்கான் மக்களவை உறுப்பினருமான சாந்தனு தாக்கூர் வடக்கு 24 பர்காணா மாவட்டத்தின் தாக்கூர் நகர் வாக்குச்சாவடியில் வாக்களித்தார்.கொல்கத்தாவின் எண்டள்ளி தொகுதி பாஜக வேட்பாளர் பிரியங்கா திப்ரிவால் தனது வாக்குச்சாவடியில் வாக்களித்தார்.

மேற்கு வங்க முதலமைச்சரும், திரிணாமூல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி தான் போட்டியிடும் பவானிப்பூர் தொகுதியின் பல்வேறு வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவைப் பார்வையிட்டார்.இதேபோல் மேற்கு வங்க எதிர்க்கட்சித் தலைவரும் பவானிப்பூரில் அவரை எதிர்த்துப் பாஜக சார்பில் போட்டியிடும் வேட்பாளருமான சுவேந்து அதிகாரி பல்வேறு வாக்குச்சாவடிகளுக்குச் சென்று பார்வையிட்டார்.

மேற்கு வங்க பாஜக தலைவர் சமிக் பட்டாச்சார்யா பிதன்நகரில் உள்ள வாக்குச்சாவடியில் குடும்பத்துடன் சென்று வாக்களித்தார். திரிணாமூல் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் சவுகதா ராய் கொல்கத்தாவில் உள்ள இங்கிலீஷ் அகாடமி வாக்குச்சாவடியில் வாக்களித்தார்.

மாநில அமைச்சரும் டம்டம் தொகுதி திரிணாமூல் வேட்பாளருமான சந்திரிமா பட்டாச்சார்யா தெற்குக் கல்கத்தா ஆரிய வித்யாலயாவில் வாக்களித்தார். பசந்தி தொகுதி பாஜக வேட்பாளர் விகாஸ் சர்தாரின் கார் பின்புறக் கண்ணாடியைத் திரிணாமூல் காங்கிரஸ் தொண்டர்கள் அடித்து நொறுக்கி விட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

அவர்கள் தன் ஓட்டுநரையும் தாக்கியதாக அவர் குற்றஞ்சாட்டியுள்ளள்ளார். இதேபோல நாடியா மாவட்டம் சாப்ரா தொகுதியில் பாஜக வாக்குச்சாவடி முகவரைத் திரிணாமூல் காங்கிரஸ் தொண்டர்கள் தாக்கியுள்ளனர். காயமடைந்த முகவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

பாஜக தலைவரும் நடிகருமான மிதுன் சக்கரவர்த்தி காசிப்பூர் தொகுதியில் வரிசையில் நின்று வாக்களித்தார்.
திரிணாமூல் காங்கிரஸ் தேசியப் பொதுச்செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அபிசேக் பானர்ஜி கொல்கத்தாவில் வாக்களித்தார்.

கொல்கத்தாவில் கிருஷ்ணபக்தி இயக்கத்தைச் சேர்ந்த சாமியார்கள் ஆடிப்பாடி வாக்களிக்கச் சென்றனர்.திரிணாமூல் நாடாளுமன்ற உறுப்பினர் மகுவா மொயித்ரா ஆட்டோவில் வாக்குச்சாவடிக்குச் சென்று வாக்களித்தார். கொல்கத்தாவில் மிசனரீஸ் ஆப் சாரிட்டி இயக்கத்தைச் சேர்ந்த கன்னிமார்கள் தூய மேரி ஆலயப் பள்ளியில் உள்ள வாக்குச்சாவடிக்குச் சென்று வாக்களித்தனர். முற்பகல் 11 மணி நிலவரப்படி 40 விழுக்காடு வாக்குகள் பதிவாகி இருந்தன.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *