செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்கை சிபிஐக்கு மாற்றி உத்தரவிட்ட உயர்நீதிமன்றம்.!

Advertisements

தமிழ்நாடு மின்சார வாரியத்துக்கு மின்மாற்றி கொள்முதல் செய்த முறைகேட்டில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்கை சிபிஐக்கு மாற்றிச் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாடு மின்னுற்பத்தி பகிர்மானக் கழகத்துக்கு 2021 முதல் 2023ஆம் ஆண்டு வரையிலான காலக்கட்டத்தில் சுமார் 45 ஆயிரம் மின்மாற்றிகள் கொள்முதல் செய்யப்பட்டன.

இதற்கான டெண்டரில் 397 கோடி ரூபாய் ஊழல் நடந்துள்ளதாகக் கூறி, இது தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக் கோரி அ.தி.மு.க., வழக்கறிஞர் அணித் துணைச்செயலாளர் சரவணன் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்குத் தொடுத்தார். அதேபோல அறப்போர் இயக்கம் சார்பில் இந்த முறைகேடு குறித்து ஊழல் கண்காணிப்புத் துறையில் புகார் அளிக்கப்பட்டது. அந்தப் புகாரின் அடிப்படையில் வழக்குப் பதியக் கோரிச் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்குகளின் இறுதிக்கட்ட விசாரணை தலைமை நீதிபதி தர்மாதிகாரி, நீதிபதி அருள்முருகன் ஆகியோர் முன் நடந்தது. அப்போது முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், “இந்த டெண்டர் முறைகேடு வழக்கிற்கும், செந்தில் பாலாஜிக்கும் எந்தத் தொடர்பும் இல்லை” என்று வாதிட்டார். அதையடுத்து ஏப்ரல் 15ஆம் நாள் வழக்கு விசாரணைக்கு வந்தபோது அரசு சார்பிலும், மனுதாரர்கள் சார்பிலும் வழக்கறிஞர்கள் நேர்நின்று தங்கள் இறுதிக்கட்ட வாதங்களை முன்வைத்தனர்.

இந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்த நீதிபதிகள் மின்மாற்றி கொள்முதல் முறைகேட்டில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்கை சிபிஐக்கு மாற்றி உத்தரவிட்டனர். மேலும் 2 வாரங்களில் அனைத்து ஆவணங்களையும் சிபிஐ-யிடம் ஒப்படைக்க ஊழல் கண்காணிப்புத்துறைக்கு உத்தரவிட்டனர். சிபிஐ விசாரணைக்குத் தமிழக அரசும், ஊழல் கண்காணிப்புத் துறையும், தமிழ்நாடு மின்னுற்பத்தி பகிர்மானக் கழகம் ஆகியன முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் நீதிபதிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *