தமிழ்நாட்டின் உரிமைகளை பறிக்கும் சதிகளை இனி அனுமதிக்க முடியாது – சீமான்.!

Advertisements

தமிழ்நாட்டின் உரிமைகளை பறிக்கும் சதிகளை இனி அனுமதிக்க முடியாது என்றும்,  மூன்று மாநில தேர்தல் முடிவுகள் வெளிவந்து, புதிய அரசுகள் அமைந்த பிறகே காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தை கூட்ட வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார்.

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தனது எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் நாளை நடைபெறும் என்று அறிவித்திருப்பது பெரும் அதிர்ச்சியளிக்கிறது. தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா ஆகிய மூன்று மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல்கள் நடைபெற்று, தேர்தல் முடிவுகள் இன்னும் வெளிவராத நிலையில், கூட்டத்தை நடத்த காவிரி மேலாண்மை ஆணையம் முயல்வது வன்மையான கண்டனத்துக்குரியது என்று சீமான் தெரிவித்துள்ளார்.

மேலும், காவிரி ஆற்றினை பங்குகொள்ளும் மூன்று முக்கிய மாநிலங்களிலும், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகள் இன்னும் அமையாத நிர்வாக சூழலில், காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தை அவசர அவசரமாக கூட்ட வேண்டிய அவசியம் என்ன வந்தது என்றும், முழுமையான அதிகாரம் பெறாத அரசுகளால் எப்படி முக்கிய முடிவுகளை எடுக்க முடியும் என்றும், மாநிலங்களின் உயர் அதிகாரிகள் வேற்று மாநிலங்களை சேர்ந்தவர்களாக இருக்கும் சூழலில், மண்ணின் உரிமைகளையும், மக்களின் உணர்வுகளையும் எப்படி உரத்து எழுப்புவார்கள் என்றும் நாம் தமிழர் சீமான் கேள்வி எழுப்பினார்.

மேலும், நடைபெறவுள்ள கூட்டத்தில், மேகதாது அணை கட்டுமானம் குறித்த முக்கிய விவாதங்கள் நடைபெறவுள்ள நிலையில், இதர மூன்று மாநிலங்களில் அதிகாரம் படைத்த அரசுகள் இல்லாத நிலையில், கூட்டம் முழுக்க முழுக்க ஒருபக்க சார்பாக மாறி, கர்நாடகாவிற்கு சாதகமாகிவிடாதா எனவும் கேள்வி எழுப்பிய அவர், தமிழ்நாட்டு மக்களை வஞ்சிக்க, கர்நாடக மாநிலத்தை ஆளும் காங்கிரசு அரசு மற்றும் இந்திய ஒன்றியத்தை ஆளும் பாஜக அரசின் கூட்டுச் சூழ்ச்சியாகவே இக்கூட்டம் நடத்தப்படுவதாக தோன்றுகிறது என்றும் சீமான் தெரிவித்தார்.

மேலும், கச்சத்தீவு போன்று, தமிழ்நாட்டின் உரிமைகளை பறிக்கும் இத்தகைய வரலாற்றுச் சதிகளை இனியும் அனுமதிக்க முடியாது. என்றும், தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா ஆகிய மூன்று மாநிலத் தேர்தல் முடிவுகள் வெளிவந்து, புதிய அரசுகள் அமைந்த பிறகே, காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தை கூட்ட வேண்டுமென்று நாம் தமிழர் சீமான் வலியுறுத்தியுள்ளார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *