திரிணாமூல் காங்கிரஸ் ஆட்சியில் மேற்கு வங்கம் ஊடுருவல்காரர்களின் தொழிற்சாலையாக மாறிப்போனதாகவும், போலி ஆவணங்கள் தயாரிப்பதும், கால்நடைகளைக் களவாடுவதும் பெருகியுள்ளதாகவும் பிரதமர் நரேந்திர மோடி குற்றஞ்சாட்டியுள்ளார். மேற்கு வங்கச் சட்டமன்றத் தேர்தலையொட்டிக் கிழக்கு மேதினிப்பூரில் பாஜக பரப்புரைப் பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.
அப்போது. ஐந்தாண்டுகளுக்கு முன் நடந்த தேர்தலில் நந்திக்கிராமத்தில் மம்தா பானர்ஜி தோற்றதுபோல் இந்த முறை பவானிப்பூரிலும் ஒட்டுமொத்த மேற்கு வங்கத்திலும் தோல்வியடைவார் என்று கூறினார்.மேற்கு வங்கத்தில் இந்த முறை நடைபெறுவது வழக்கமான தேர்தல் இல்லை என்றும், வங்கத்தின் பெருமையை மீண்டும் நிலைநாட்டுவதற்கான தேர்தல் என்றும் பிரதமர் குறிப்பிட்டார்.
வங்கத்தின் வளர்ச்சிக்கான அடித்தளத்தை வலுப்படுத்தும் தேர்தல் என்றும், இது ஈவிரக்கமற்ற திரிணாமூல் ஆட்சியை அகற்றுவதற்கான முதல் மற்றும் மிக முக்கியமான படி என்றும் குறிப்பிட்டார். இந்தியா இன்று மிக வேகமாக முன்னேறி வருவதாகவும், இது உலகிலேயே அதிவேக வளர்ச்சி என்றும் குறிப்பிட்ட மோடி, திரிணாமூல் காங்கிரசின் ஈவிரக்கமற்ற ஆட்சி வங்கத்தை வீழ்ச்சியடையச் செய்துவிட்டதாகக் குற்றஞ்சாட்டினார்.
ஒரு காலத்தில் நாட்டின் பல பகுதிகளில் இருந்து மேற்கு வங்கத்தின் ஹால்டியாவுக்குப் பலர் பணியாற்ற வந்ததாகவும், இன்று இங்குள்ள இளைஞர்களே அந்தமானுக்கும் ஒடிசாவுக்கும் பிற மாநிலங்களுக்கும் வேலை தேடிச் செல்வதாகச் தெரிவித்தார்.
திரிணாமூல் ஆட்சியில் மேற்கு வங்கம் ஊடுருவல் காரர்களின் தொழிற்சாலையாக மாறிப்போனதாகவும், போலி ஆவணங்கள் தயாரிப்பதும், கால்நடைகளைக் களவாடுவதும் பெருகியுள்ளதாகவும் பிரதமர் குற்றஞ்சாட்டினார். திரிணாமூல் காங்கிரசின் அரசியல் அச்சுறுத்தலின் அடிப்படையில் அமைந்தது என்றும் குறைகூறினார்.
வங்கத்து இளைஞர்களுக்குத் திரிணாமூல் செய்த பாவங்களை அடுத்த நூறாண்டுகளில் கூடக் கழுவ முடியாது என்றும் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.


