தமிழகத்தில் 2 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிப்பு!

தமிழகத்தில் காலியாக உள்ள 7 சட்டமன்றத் தொகுதிகளில், மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய 2 தொகுதிகளுக்கு மட்டும் இடைத்தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதன்படி, அக்டோபர் 6-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. அக்டோபர் 9-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் செப்டம்பர் 9-ம் தேதி தொடங்கி, செப்டம்பர் 16-ம் தேதி நிறைவடைகிறது. செப்டம்பர் 17-ம் தேதி வேட்புமனுக்கள் பரிசீலனை செய்யப்படும் நிலையில், மனுக்களை திரும்பப் பெறுவதற்கான கடைசி நாள் செப்டம்பர் 19 என அறிவிக்கப்பட்டுள்ளது.

திருச்சி கிழக்கு, அம்பாசமுத்திரம், விராலிமலை, பெருந்துறை மற்றும் கரூர் ஆகிய 5 தொகுதிகளுக்கு தற்போது இடைத்தேர்தல் அறிவிக்கப்படவில்லை. இந்த தொகுதிகளைச் சேர்ந்த தேர்தல் தொடர்பான வழக்குகள் நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதே இதற்கு காரணமாக கூறப்படுகிறது.

மதுராந்தகம் தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் மரகதம் குமரவேலும், தாராபுரம் தொகுதியில் சத்யபாமாவும் எம்.எல்.ஏ.க்களாக வெற்றி பெற்றிருந்தனர். இருவரும் தங்களது பதவிகளை ராஜினாமா செய்து தவெகவில் இணைந்ததைத் தொடர்ந்து, இந்த இரு தொகுதிகளும் காலியானதாக அறிவிக்கப்பட்டன.

இதனால், நடைபெற உள்ள இடைத்தேர்தல் தவெகவுக்கு முக்கியமான அரசியல் சோதனையாக பார்க்கப்படுகிறது. மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளில் மரகதம் குமரவேல் மற்றும் சத்யபாமாவையே மீண்டும் வேட்பாளர்களாக களமிறக்க தவெக திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் தவெக அரசு அமைந்து மூன்று மாதங்களே கடந்துள்ள நிலையில், கூட்டணி கட்சிகளிடையே பல்வேறு கருத்து வேறுபாடுகள் உருவாகி வருவதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி விலைவாசி உயர்வை கண்டித்து போராட்டம் நடத்தியுள்ள நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமைச் செயலாளருக்கு எதிராக எதிர்ப்பை பதிவு செய்துள்ளது. விடுதலைச் சிறுத்தைகள் கட்சியும் அரசின் கொள்கை முடிவுகளில் தங்களது கோரிக்கைகளுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என வலியுறுத்தி வருகிறது.

இதற்கிடையே, காங்கிரஸ் கட்சியும் தனது அரசியல் கோரிக்கைகளை முன்வைத்து வருவதாக கூறப்படும் நிலையில், கூட்டணி கட்சிகளின் தொடர் அழுத்தம் தவெக அரசுக்கு புதிய அரசியல் சவாலை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே திமுக, அதிமுக, பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தவெக அரசின் செயல்பாடுகளை விமர்சித்து வரும் நிலையில், தற்போது அறிவிக்கப்பட்டுள்ள இடைத்தேர்தல் அரசியல் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

ஆட்சியின் மீதான மக்கள் ஆதரவை நிரூபிக்க வேண்டிய நிலையில் தவெக இருப்பதால், மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளில் வெற்றி பெறுவது அக்கட்சிக்கு மிகப்பெரிய பலமாக அமையும்.

அதேநேரத்தில், தவெகவை வீழ்த்த திமுக மற்றும் அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும் வியூகங்களை வகுக்கத் தொடங்கியுள்ளன. இதனால், இந்த இரண்டு தொகுதிகளிலும் நடைபெற உள்ள தேர்தல், ஆளும் தவெக அரசின் செல்வாக்கை அளவிடும் முக்கிய அரசியல் களமாக மாறியுள்ளது. இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளதால், மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளில் தேர்தல் நடத்தை விதிகளும் உடனடியாக அமலுக்கு வந்துள்ளன.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *