பிரான்ஸ் தலைநகர் பாரீசில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள சுவாமிநாராயண் கோவில் திறப்பு விழா காணொலி வாயிலாக நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய பிரதமர் நரேந்திர மோடி, நீண்டகால கலாசார மற்றும் அரசியல் உறவுகளின் வலுவான அடித்தளத்தில் இந்தியா-பிரான்ஸ் கூட்டாண்மை அமைந்துள்ளதாகவும், இவ்வுறவு தற்போது புதிய உச்சத்தை எட்டியுள்ளதாகவும் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், “இந்தப் பிரமாண்ட கோவில் இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பு மற்றும் புதிய வாய்ப்புகளின் அடையாளமாகப் பல நூற்றாண்டுகளுக்கு நிலைத்திருக்கும். எனது நண்பர் இம்மானுவேல் மேக்ரானுடன் இணைந்து சிறப்பு உலகளாவிய உத்திசார் கூட்டாண்மையை நாங்கள் உருவாக்கி வருகிறோம். தொழில்நுட்பம், செயற்கை நுண்ணறிவு, பாதுகாப்பு, விண்வெளி மற்றும் பருவநிலை நடவடிக்கைகள் உள்ளிட்ட துறைகளில் இரு நாடுகளும் இணைந்து புதிய வேகத்துடன் செயல்படுகின்றன.
பிரான்சில் உயிர்நீத்த இந்திய வீரர்களின் தியாகம் இன்றளவும் நினைவுகூரப்படுகிறது. சமஸ்கிருதத்தை பிரபலப்படுத்துவதில் பிரெஞ்சு அறிஞர்கள் முக்கிய பங்காற்றியுள்ளனர். பாரீஸ் சுவாமிநாராயண் கோவில், இந்தியாவின் பாரம்பரிய கைவினைத்திறனையும் பிரான்சின் நவீன பொறியியல் தொழில்நுட்பத்தையும் இணைக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இது பிரான்சின் கலாசார பன்முகத்தன்மையை வளப்படுத்துவதுடன், இரு நாடுகளின் கலாசார உறவுகளுக்கும் புதிய உத்வேகம் அளிக்கும்” என்று குறிப்பிட்டார்.


