நடிகர் பின்னால் செல்ல வேண்டாம்…!விஜய் ரசிகர்களுக்கு ரஜினி எச்சரிக்கை..!

Advertisements

புதிதாக ஆரம்பிக்கும் கட்சித் தலைவரும், அவரது தொண்டர்களும் தொடக்க காலத்தில் விமர்சனங்களுக்கு உள்ளாவது சகஜம்தான். ஆனால்,  நடிகர் விஜயும் அவரது தொண்டர்களும் தொடர்ந்து விமர்சனங்களுக்கு உள்ளாகி வருகின்றனர்.
அணில் குஞ்சுகள், தற்குறிகள் உள்பட  பல்வேறு பட்டங்களால் அர்சனைகளுக்கு உள்ளாகி வரும் நடிகர் விஜய் ரசிகர்கள் தங்களை மாற்றிக் கொண்டதாக தெரியவில்லை.

தற்போது தொண்டர்களாக மாறியிருக்கும் விஜயின் முன்னால் ரசிகர்கள், இளம் காளைகளாகவும், துள்ளித்திரியும் வேங்கைகளாகவும் இருப்பதால் தான் அசம்பாவிதங்கள் நடப்பதாக நியாயப்படுத்துகின்றனர். ஆனால், தமிழகத்தில் அனைத்துக் கட்சிகளிலும்  தொடக்கத்தில் இளைஞர்களே ஆதிக்கம் செலுத்தியுள்ளனர். 1949ம் ஆண்டு ராயபுரம் ராபின்ஸன் பூங்காவில் தொடங்கப்பட்ட திமுகவில்  ஆயிரக்கணக்கான இளைஞர்கள் இணைத்துக் கொண்டனர்.

ராபின்சன் பூங்கா பொதுக்கூட்டத்தில் கடல் அலையா மக்கள் தலையா என்று சொல்லுமளவுக்கு நெரிசல்  காணப்பட்டது.
திமுக தொடங்கப்பட்டபோது அதிக வயதில் இருந்தவர் அதன் தலைவர் அண்ணா. அவருக்கே அப்போது 40 வயசுதான். அவரைத் தவிர மற்ற தலைவர்கள் அனைவருமே 25 வயதுக்குள் இருந்தவர்களே. மிகக் குறுகிய காலத்தில் தமிழ்நாடு முழுவதும் இருந்த இளைஞர்களால் வளர்க்கப்பட்டது கட்சிதான்  திமுக.

இந்திய விடுதலைக்குப் பிறகு திராவிட நாடு, திரைப்படங்கள், நாடகங்கள், இலக்கியக் கூட்டம், பொதுக் கூட்டம், என அனைத்தும் சமஸ்கிருதம் தவிர்த்த நல்ல தமிழில் பேசப்பட்டது இளைஞர்களை வெகுவாக கவர்ந்தது.
தொண்டர்களின் வேகத்தை அறிந்த அண்ணா, கட்சித் தொடங்கியதும் முதல் கூட்டத்திலேயே கடமை, கண்ணியம், கட்டுப்பாடு என்ற தாரக மந்திரத்தை  அறிவுறுத்தினார்.

ராணுவ வீரர்கள் போல் அண்ணாவின் மந்திரச் சொல்லுகளுக்கு கட்டுப்பட்டு அதன்படி நடக்கத் தொடங்கினர். அண்ணாவே ஆச்சரியப்படும் வகையில் கட்சியின் இளைஞர்கள் நடந்து கொண்டனர். தன்னை நாடிவந்த இளைஞர்களுக்கு அரசியல் அறிவையும் இலக்கிய அறிவையும் நாள்தோறும் ஊட்டிவந்தார். அவரது எழுத்தும், மேடைப் பேச்சும் இளைஞர்களை ஒழுக்கம் உள்ளவர்களாகவும் சுயமரியாதை உள்ளவர்களாகவும் வளர்த்தது.

இதேபோல்தான் கம்யூனிஸ்ட், காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளில் இருந்த இளைஞர்களும் கட்டுப்பாடுகள் மூலம் வார்த்தெடுக்கப்பட்டனர்.  1972ம் ஆண்டு திமுகவிலிருந்து வெளியேறிய எம்ஜிஆர் இளைஞர்களை நம்பியே புதிய கட்சி தொடங்கினார். எம்ஜிஆரால் வழிநடத்தப்பட்ட அவர்கள் ஒரு போதும் கட்டுப்பாட்டை மீறியதில்லை. இதேபோல்தான் காங்கிரஸில் காமராஜருக்கு ஆதரவாக கல்லூரி இளைஞர்கள் லட்சக்கணக்கில் திரண்டனர். அவர்களை காமராஜர் கண்டிப்புடன் நடத்தியதால் அன்றைய இளைஞர்கள் வரம்புக்குள் நடந்து கொண்டனர்.

இப்படி தமிழகத்தில் தொடங்கப்பட்ட புதிய கட்சிகள் அனைத்திலும் இளைஞர்கள் கட்டறுந்த காளைகளாக வரம்பு மீறி ஒழுக்கமில்லாமல் நடந்து, கட்சிக்கு அவப்பெயர் சம்பாதித்துக் கொடுக்கவில்லை. ஆனால்  நடிகர் விஜய் மட்டும் இதுவரை யாருக்கும் கூடாத அளவுக்கு இளைஞர்கள் தனக்காக திரண்டு வருகிறார்கள் என்று அவரது பாதம் தாங்கி ஊடகங்கள் propaganda  செய்து வருகின்றன. எல்லா கட்சியிலும் கூட்டத்துக்கு வரும் தொண்டர்களை ஒழுங்கு படுத்த volunteers-களை பயன்படுத்தி வருகின்றனர்.

ஆனால் தவெக-வில் மட்டும் இந்த ஏற்பாடு  செய்யாமல் இருப்பது ஏன் என்று சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்புவதில் நியாயம் உள்ளது. தவெகவினர் யார் என்ன சொன்னாலும் தங்களை மாற்றிக் கொள்ளவே மாட்டோம் என்று தாறுமாறாக நடந்து கொள்வதும் நடிகர் விஜய் அவர்களை எச்சரிக்காமல் இருப்பதும் பொது வெளியில் கடும் விமர்சனத்துக்கு உள்ளாகி வருகிறது. தூத்துக்குடியில் நேற்று பிரச்சாரம் செய்ய சென்ற விஜயின் வாகனத்தை பின் தொடர்ந்து சென்ற தொண்டர்கள் விஜய்யின் வாகனத்தை நெருங்கும் சமயம் பொத்தென்று விழுந்தனர்.

அதேபோல் குறுகிய சாலைகளில் பைக்குகளில்  விஜய்யின் வாகனத்தை தொடர்ந்து வந்த தொண்டர்கள் பைக்குகளில் இருந்து கீழே விழுந்தனர்.  இன்னொரு ரசிகர் விஜயின் வாகனத்திற்கு முன்பு தடாலென்று கீழே விழுந்து கும்பிடுகிறார்.  அவரை அலேக்காக தூக்கி பவுன்சர் அப்புறப்படுத்தினர். இது எதையும் கண்டுகொள்ளாமல் விஜயின் வாகனம் பயணித்தது தான் அந்த ரசிகர்கள் மீது பரிதாபத்தை ஏற்படுத்துகிறது.

இதற்குமுன் விஜய் சாலை பேரணி நடத்திய அனைத்து ஊர்களிலும் இதேபோன்ற சம்பவங்கள் நடந்ததை பார்த்தோம். விஜய் செல்லும் பேருந்தை நோக்கி ரசிகர்கள் இருசக்கர வாகன அணிவகுப்பில் செல்வதும், சாலையில் குட்டிக்கரணம் போட்டு காயம் படுவதும், உயிருக்குச் சேதாரங்களை ஏற்படுத்திய நிகழ்வுகளை பார்த்தோம். ரசிக மனோபாவத்தை ஒழுங்கு படுத்தாமல் அரசையும், போலீசையும் விஜய்யும் அவரது கட்சி பிரமுகர்களும் தொடர்ந்து குறை சொல்லி வருவதாக நெட்டிசன்கள் கடுமையாக விமர்சனம் செய்து கொண்டிருக்கிறார்கள்.

இந்நிலையில், தற்போது தமிழ்நாட்டின் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு கட்சியினர் பல்வேறு விதங்களில் தங்கள் பரப்புரைகளை மேற்கொண்டு வருகின்றனர். பொதுவாக தேர்தல் நேரத்தில் தமிழ்நாட்டின் முக்கிய பிரபலமான  ரஜினிகாந்தின் செயலும் சொல்லும் முக்கியத்துவம் பெற்றுள்ளன. 1996-ம் ஆண்டு தேர்தலுக்கு முன், இந்த முறை தவறவிட்டா தமிழ்நாட்டை ஆண்டவனாலயும் காப்பாத்த முடியாது! என்று ரஜினிகாந்த் சொன்ன வார்த்தைகள் தமிழக அரசியல் போக்கில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தி ஆட்சி மாற்றத்தை நிகழ்த்தியது.

அதேபோல் ரஜினிகாந்த் நேற்று ஜெயிலர்-2  திரைபடத்துக்காக ஹைதராபாத் சென்று விட்டு  சென்னைக்கு திரும்பினார். விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு அவர் தந்த பேட்டியில், நடிகர்கள் பின்னால் சென்றால் உங்களுக்கு தான் ஆபத்து என்று மறைமுகமாக விஜய் குறித்து விமர்சனம் செய்தார்.
மேலும் ” நீங்கள் கீழே விழுந்து காயம் பட்டால் அது உங்களுக்கு தான் ஆபத்து. படிக்கும் வயதில் படிப்பில் மட்டுமே கவனம் செலுத்துங்கள்.

படிக்கும் காலத்தை விட்டால் காலம் முழுவதும் கஷ்டப்பட நேரிடும் என்று விஜய் ரசிகர் கூட்டத்தில் இருக்கும் இளைஞர்களை மனதில் வைத்து அறிவுறுத்தியுள்ளார். நடிகர் ரஜினிகாந்தின் இந்த பேட்டி, விஜய் ரசிகர்களுக்கு மட்டுமல்ல, அனைத்து நடிகர்களின் ரசிகர்களுக்குமான அறிவுரைதான்..

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *