
வார ராசிப்பலன்
அக்டோபர் 8 முதல் 14 வரை 2023
புரட்டாசி 21 முதல் 27 வரை
கணித்தவர்
ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.
இவ்வார சுப முகூர்த்த நாட்கள் இல்லை
மேஷம் ( அஸ்வினி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம் )

தன்னுடைய கௌரவத்திற்கும், பெயருக்கும் களங்கம் எற்படாதவாறு பொறுப்புடன் நடந்து கொள்ளும் பண்பு கொண்ட மேஷ ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு ருண, ரோக ஸ்தானமான 6–ல் சூரியன், புதன் சஞ்சரிப்பதால் எதிர்பாராத தன சேர்க்கை ஏற்பட்டு அனைத்து விதமான குடும்பத் தேவைகளும் எளிதில் பூர்த்தியாகும். பெரிய மனிதர்களுடைய ஆதரவு சிறப்பாக இருப்பதால் வளமான பலன்களை பெறுவீர்கள்.
சுக்கிரன் 5-ல் சஞ்சரிப்பதால் நவீனகரமான பொருட்களை வாங்கும் வாய்ப்பு ஏற்படும். குரு வக்ர கதியில் இருப்பதால் ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொண்டால் தேவையற்ற நெருக்கடிகளை தவிர்க்கலாம். ஆரோக்கியம் நன்றாக இருக்கும் என்றாலும் இயற்கை உணவுகளை உட்கொள்வது நல்லது. செவ்வாய், கேது 7-ல் சஞ்சரிப்பதால் கணவன்- மனைவி இடையே விட்டு கொடுத்து செல்வது உத்தமம்.
தொழில், வியாபாரத்தில் நிதானத்தோடு செயல்பட்டால் நல்ல வளர்ச்சியை அடைய முடியும். திறமை வாய்ந்த வேலையாட்கள் உங்கள் தொழிலுக்கு கிடைப்பார்கள். நீங்கள் மற்றவர்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை குறித்த நேரத்தில் காப்பாற்ற முடியும். கூட்டாளிகள் தங்கள் பங்கை கேட்டு தொந்தரவு தருவார்கள்.
வேலைக்கு செல்பவர்களுக்கு அதிகாரிகள் ஆதரவு சிறப்பாக இருப்பதால் நிம்மதியுடன் பணியாற்ற முடியும். வேலைபளுவை பற்றி கவலைப்படாமல் உங்கள் பணியில் மட்டும் நீங்கள் கவனத்தோடு இருந்தால் விரைவில் ஒரு நல்ல நிலையை அடைய முடியும். மற்றவர்களுக்கு வாக்குறுதி கொடுப்பது, முன்ஜாமீன் அளிப்பது போன்றவற்றினை தற்காலிகமாக தள்ளி வைப்பது நல்லது. வெங்கடாஜலபதியை தரிசிப்பது, துர்க்கையம்மன் வழிபாடு மேற்கொள்வது நல்லது.
வெற்றி தரும் நாட்கள் – 13, 14.
ரிஷபம் ( கிருத்திகை 2,3,4-ஆம் பாதங்கள் ரோகிணி, மிருகசீரிடம் 1,2-ஆம் பாதங்கள் )

பிறர் தம் வார்த்தைகளில் குற்றம் குறை கண்டு பிடிக்காதவாறு பேசும் ஆற்றல் கொண்ட ரிஷப ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு சுக ஸ்தானமான 4–ல் புதன் சஞ்சரிப்பதால் பணவரவுகள் மிகச்சிறப்பாக இருந்து கடந்த கால நெருக்கடிகள் எல்லாம் படிப்படியாக குறையும். செவ்வாய், கேது 6-ல் சஞ்சரிப்பதால் நல்ல வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். குரு, சனி வக்ர கதியில் சஞ்சரிப்பதால் எதிலும் சாமர்த்தியமாக செயல்பட்டு வளமான பலன்களை பெறுவீர்கள்.
உங்கள் ராசிக்கு 5-ல் சூரியன் சஞ்சரிப்பதால் உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. வண்டி, வாகனங்களில் செல்கின்ற பொழுது முன்னெச்சரிக்கையுடன் இருப்பது உத்தமம். தொழில், வியாபார ரீதியாக உங்களுக்கு சிறப்பான நாட்களாக வரும் வாரம் இருக்கும். நீண்ட நாட்களாக உங்களுக்கு இருந்த பிரச்சினைகள் எல்லாம் விலகி தொழிலில் நிம்மதியுடன் செயல்பட முடியும்.
கூட்டுத் தொழில் செய்பவர்களுக்கு கூட்டாளிகள் மூலம் பொருள் உதவிகள் கிடைப்பதால் உங்களுக்கு உள்ள வீண் பிரச்சினைகளை தவிர்க்க முடியும். அரசு வழியில் நீங்கள் எதிர்பார்த்த உத்தரவுகள் வரும் நாட்களில் கிடைக்கும். வேலைக்கு செல்பவர்களுக்கு திறமைகளை வெளிக்காட்ட நல்ல வாய்ப்புகள் அமையும்.
அதிகாரிகள் ஆதரவு சிறப்பாக இருப்பதால் நீங்கள் எதிர்பார்த்த பதவி உயர்வை வரும் நாட்களில் அடைய முடியும். உடன் வேலை செய்பவர்கள் சில பிரச்சினைகளை உங்களுக்கு தருவார்கள் என்பதால் உங்கள் பணியில் மட்டும் கவனத்தோடு இருப்பது நல்லது. சிவ வழிபாடு மேற்கொள்வது, அஷ்ட லட்சுமியை தரிசிப்பதன் மூலம் உங்கள் கஷ்டங்கள் குறையும்.
வெற்றி தரும் நாட்கள் – 8, 9.
மிதுனம் ( மிருகசீரிடம் 3,4-ஆம் பாதங்கள், திருவாதிரை, புனர்பூசம் 1,2,3-ஆம் பாதங்கள் )

எந்தவித கடினமான வேலைகளையும் பொறுப்புடன் செய்து முடிக்கும் ஆற்றலும் பிறரை எளிதில் நம்பாத குணமும் கொண்ட மிதுன ராசி நேயர்களே, உங்கள் ராசியாதிபதி புதன் 4-ல் வலுவாக சஞ்சரிப்பதால் எதிலும் தைரியத்தோடு செயல்பட்டு வளமான பலன்களை பெறுவீர்கள்.
குரு வக்ர கதியில் சஞ்சரிப்பதால் கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் சிக்கனமாக செயல்பட்டால் தான் எதையும் எதிர்கொள்ள முடியும். ஜென்ம ராசிக்கு 4-ல் சூரியன், 5-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் எதிலும் உணர்ச்சி வசப்படாமல் நிதானத்தோடு செயல்படுவது நல்லது. பங்காளியிடம் கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம் என்பதால் விட்டு கொடுத்து செல்லவும். தொழில், வியாபாரத்தில் வேலையாட்களை சற்று அனுசரித்து செல்வது, இருக்கும் வாய்ப்புகளை சரியான முறையில் பயன்படுத்திக் கொள்வது நல்லது.
கூட்டுத் தொழில் செய்பவர்கள் குறிப்பாக கூட்டாளிகளிடம் விட்டுக்கொடுத்து செல்வதன் மூலம் பெரிய பிரச்சினைகளை தவிர்க்கலாம். வேலையாட்கள் மூலம் வீண் செலவுகள், தேவையில்லாத நெருக்கடிகள் ஏற்படக்கூடிய நேரம் என்பதால் எந்தப் பணியிலும் நீங்கள் முன்னின்று செயல்படுவது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேலதிகாரியிடம் வாக்குவாதங்கள் செய்யாமல் அவர்கள் சொல்படி நடந்து கொண்டால் இருப்பதை தக்க வைத்துக் கொள்ள முடியும்.
வேலை தேடுபவர்களுக்கு நல்ல நிறுவனத்திலிருந்து அழைப்பு வந்தாலும் நீங்கள் எதிர்பார்த்த அளவிற்கு சம்பளம் இருக்காது. சக ஊழியர்களை அனுசரித்துச் சென்றால் உங்கள் வேலையை எளிதில் முடிக்க முடியும். சிவ வழிபாடு மேற்கொள்வது, தட்சிணாமூர்த்திக்கு வியாழக்கிழமை அன்று அர்ச்சனை செய்வது நல்லது.
வெற்றி தரும் நாட்கள் – 10, 11, 12.
கடகம் ( புனர்பூசம் 4-ஆம் பாதம், பூசம், ஆயில்யம் )

எந்தவொரு செயலிலும் துணிந்த பின் துயரம் இல்லை என்ற சொல்லிற்கேற்ப நண்டு பிடி போட்டு செய்து முடிக்கும் ஆற்றல் கொண்ட கடக ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு 3-ல் சூரியன் சஞ்சரிப்பதால் எதிர்பாராத வகையில் ஏற்றம் மிகுந்த பலன்களை அடைவீர்கள். குரு, சனி வக்ர கதியில் சஞ்சரிப்பதால் கடந்த கால நெருக்கடிகள் எல்லாம் படிப்படியாக குறையும்.
உங்கள் ராசிக்கு 4-ல் செவ்வாய், கேது சஞ்சரிப்பதால் வேலைபளு காரணமாக தேவையற்ற அலைச்சல் ஏற்படும். பேச்சில் பொறுமையோடு இருப்பது, குடும்ப உறுப்பினர்களை சற்று அனுசரித்து செல்வது நல்லது. உடன் பிறந்தவர்களிடம் தேவையற்ற கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம்.
உங்கள் ராசிக்கு 2-ல் சுக்கிரன் சஞ்சரிப்பதால் உங்களுக்குள்ள நெருக்கடிகள் எல்லாம் படிப்படியாக குறைந்து நல்ல முன்னேற்றங்களை அடைவீர்கள். பணப்புழக்கம் சற்று சாதகமாக இருந்து அனைத்து தேவைகளும் பூர்த்தியாகும். தொழில், வியாபாரத்தில் நல்ல வாய்ப்புகள் கிடைப்பது மட்டுமில்லாமல் ஒரு பெரிய மனிதரின் தொடர்பால் நீண்ட நாளைய பிரச்சினைகள் எல்லாம் சற்று குறைந்து நிம்மதி ஏற்படும். உங்களின் தனித் திறமையால் மற்றவர்கள் தரும் இடையூறுகளை எளிதில் எதிர்கொண்டு அடைய வேண்டிய லாபத்தை அடைவீர்கள்.
வேலையாட்கள் பொறுப்புடன் நடந்து கொள்வார்கள். உத்தியோகஸ்தர்களுக்கு சக ஊழியர்கள் ஒத்துழைப்பு சாதகமாக இருப்பதால் உங்கள் பணிகளில் சிறப்பாக செயல்படுவீர்கள். நிலுவையில் இருந்த சம்பள பாக்கிகள் எல்லாம் தற்போது படிப்படியாக கிடைப்பதால் உங்களின் கஷ்டங்கள் குறையும். ஆஞ்சநேயர் வழிபாடு மேற்கொள்வது, பிரித்தியங்கரா தேவியை தரிசிப்பதன் மூலம் கெடுதிகள் குறையும்.
வெற்றி தரும் நாட்கள் – 8, 9, 13, 14.
சிம்மம் ( மகம், பூரம். உத்திரம் 1-ஆம் பாதம் )

பிறர் பழிச்சொற்களுக்கு செவி சாய்க்காமல் தனது விடாமுயற்சியால் பல சாதனைகளைச் செய்யும் ஆற்றல் கொண்ட சிம்ம ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு முயற்சி ஸ்தானமான 3–ல் செவ்வாய் சஞ்சரிப்பதும், 2-ல் புதன் சஞ்சரிப்பதும் அனுகூலமான அமைப்பு என்பதால் எதிர்நீச்சல் போட்டாவது அடைய வேண்டிய இலக்கை அடைவீர்கள்.
குரு, சனி வக்ர கதியில் சஞ்சரிப்பதால் பணவிஷயத்தில் ஏற்ற இறக்கமான நிலை இருக்கும். ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொண்டு சிக்கனமாக இருப்பது நல்லது. சூரியன் 2-ல் இருப்பதால் குடும்பத்திலுள்ளவர்களை அனுசரித்து செல்வதும், சில நேரங்களில் உங்களுடைய முன்கோபத்தைக் குறைத்துக் கொண்டு பொறுமையுடன் செயல்படுவதும் நல்லது. அதிக முதலீடுகள் கொண்ட செயல்களை தற்காலிகமாக தள்ளி வைக்கவும்.
தொழில், வியாபாரத்தில் எந்த செயல் செய்தாலும் ஒரு முறைக்கு பல முறை யோசித்து செய்தால் அதில் ஆதாயத்தை அடைய முடியும். வேலையாட்கள் ஒத்துழைப்பு சிறப்பாக இருந்து உங்களுக்குள்ள போட்டிகளை நீங்கள் எளிதில் எதிர்கொள்வீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் சிறப்பாக செயல்பட்டு நல்ல பெயர் எடுக்க கூடிய வாய்ப்புகள் இருக்கிறது.
சக ஊழியரிடம் பேசுகின்ற பொழுது பேச்சில் பொறுமையோடு இருப்பது, குடும்ப விஷயங்களை மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்ளாமல் இருப்பது நல்லது. புதிய வேலை தேடிக் கொண்டிருப்பவர்கள் தற்போது கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்திக் கொண்டால் விரைவில் நல்ல முன்னேற்றங்களை அடைய முடியும். சிவ வழிபாடு செய்வதும், வியாழக்கிழமையில் குரு பகவானுக்கு மஞ்சள் நிற வஸ்திரம் சாற்றி அர்ச்சனை செய்வதும் நல்லது.
வெற்றி தரும் நாட்கள் – 10, 11, 12.
கன்னி ( உத்திரம் 2,3,4-ஆம் பாதங்கள், அஸ்தம், சித்திரை 1,2-ஆம் பாதங்கள் )

எவ்வளவு அவசரமான காரியமாக இருந்தாலும் மற்றவர்களின் சௌகர்யங்களை ஆராய்ந்து செயல்படும் ஆற்றல் கொண்ட கன்னி ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு 2-ல் செவ்வாய், கேது, 8-ல் ராகு சஞ்சரிப்பதால் பேச்சில் பொறுமையோடு இருப்பது, உடனிருப்பவர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. ஜென்ம ராசியில் சூரியன் சஞ்சரிப்பதால் அலைச்சல் காரணமாக உடல் அசதி, இருப்பதை அனுபவிக்க இடையூறுகள் ஏற்படும்.
உறவினர்களிடம் கருத்து வேறுபாடுகள் ஏற்படும் காலமென்பதால் நிதானத்தோடு செயல்படுவது நல்லது. எளிதில் முடிய வேண்டிய காரியங்கள் தடைப்படக் கூடிய நேரமாகும். கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் மற்றவர்களுக்கு வாக்குறுதி கொடுப்பதை தற்காலிகமாக தவிர்ப்பது நல்லது. சனி வக்ர கதியில் இருப்பதால் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக் கொள்வது சிறப்பு.
தொழில், வியாபாரத்தில் நிதானத்தோடு செயல்படுவது, வேலையாட்களை அனுசரித்துச் செல்வது தற்போதைக்கு சிறப்பு. அதிக முதலீடுகள் கொண்ட செயல்களை தற்காலிகமாக தள்ளி வைக்கவும். தொழில் தொடர்பான விஷயங்களை மற்றவரிடம் பேசாமல் இருப்பது நல்லது. ஒரு சிலருக்கு அரசு அதிகாரிகள் மூலமாக தொழிலுக்கு தேவையற்ற நெருக்கடிகள் ஏற்படலாம்.
உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணியில் மட்டும் கவனம் செலுத்தி விட்டு உடனிருப்பவர்களை அனுசரித்து நடந்து கொண்டால் இருக்கும் பிரச்சினைகளை சமாளிக்க முடியும். வேலை நிமித்தமாக அடிக்கடி தூரப் பயணங்கள் மேற்கொள்ள கூடிய சூழ்நிலை உண்டாகும். வரவுக்கு மீறிய செலவுகள் ஏற்படும் நேரம் என்பதால் சிக்கனமாக இருப்பது நல்லது. பைரவர் வழிபாடு, முருக வழிபாடு மேற்கொள்வது கெடுதியை குறைக்கும்.
வெற்றி தரும் நாட்கள் – 8, 9, 13, 14.
துலாம் ( சித்திரை 3,4-ஆம் பாதங்கள், சுவாதி, விசாகம் 1,2,3-ஆம் பாதங்கள் )

எந்த சூழ்நிலையிலும் சந்தோஷமான மன நிலையை கொண்ட துலா ராசி நேயர்களே, உங்கள் ராசியில் செவ்வாய், 7-ல் ராகு, 12-ல் சூரியன் சஞ்சரிப்பதால் நீங்கள் நல்லதாக பேசினாலும் மற்றவர்கள் அதனை தவறாக புரிந்து கொள்ளக்கூடிய நேரம் என்பதால் எதிலும் சிந்தித்து பேசுவது, மற்றவர்கள் விஷயத்தில் தலையிடாமல் இருப்பது நல்லது.
குரு வக்ர கதியில் சஞ்சரிப்பதால் வரவுக்கு மீறிய வீண் செலவுகள் ஏற்பட்டு பொருளாதார ரீதியாக சற்று தேக்க நிலை காணப்படும். எதிலும் சிக்கனமாக செயல்பட்டால் இருக்கும் பிரச்சினைகளை சமாளிக்க முடியும். சுக்கிரன் 11-ல் இருப்பதால் கணவன்- மனைவியிடையே பிரச்சினைகள் இருந்தாலும் ஒற்றுமை சிறப்பாக இருக்கும் நிலை, பிள்ளைகள் வழியில் ஒரு சில அனுகூலங்கள் ஏற்படும்.
உடல் நலத்தில் சற்று அக்கறை எடுத்துக் கொள்வது, வயது மூத்தவர்களிடம் வாக்குவாதங்கள் செய்யாமலிருப்பது சிறப்பு. தொழில், வியாபாரத்தில் கண்ணும் கருத்துமாக செயல்பட்டால்தான் போட்ட முதலீட்டை எடுக்க முடியும். வேலையாட்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பதால் எதையும் எதிர்கொள்ளக்கூடிய பலம் உண்டாகும். மறைமுகப் போட்டிகள் இருந்தாலும் உங்களின் தனித் திறமையால் எதையும் சிறப்பாக கையாண்டு நல்ல நிலையை அடைவீர்கள்.
வண்டி, வாகனங்களில் செல்கின்ற பொழுது பொறுமையைக் கடைபிடிப்பது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு சிறு சிறு நெருக்கடிகள் இருந்தாலும் வேலைபளு குறைவாக இருக்கும். பணி நிமித்தமாக வெளியூர் செல்லும் வாய்ப்பு ஏற்படும். நீங்கள் எடுக்கும் பணிகளை சிறப்பாக செய்து முடித்து நல்ல பெயர் எடுப்பீர்கள். துர்க்கையம்மனை தரிசிப்பது, முருக வழிபாடு மேற்கொள்வது நன்று.
வெற்றி தரும் நாட்கள் – 8, 9, 10, 11, 12.
விருச்சிகம் ( விசாகம் 4-ஆம் பாதம், அனுஷம், கேட்டை )

எந்த முயற்சியில் ஈடுபட்டாலும் தளராது, அயராது முயன்று பாடுபடும் ஆற்றல் கொண்ட விருச்சிக ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு 11–ல் சூரியன், புதன் சஞ்சரிப்பதால் எதிலும் தைரியத்தோடு செயல்பட்டு நல்ல வளர்ச்சியை அடைவீர்கள். குரு வக்ர கதியில் சஞ்சரிப்பதால் குடும்பத்தில் மங்களகரமான சுப காரியங்கள் கைகூட கூடிய வாயப்பு, சிறப்பான பணவரவுகள் ஏற்படும். பிள்ளைகள் வழியில் மகிழ்ச்சி தரக்கூடிய இனிய நிகழ்ச்சிகள் நடக்க கூடிய வாய்ப்புகள் உண்டு.
உங்கள் ராசிக்கு 10—ல் சுக்கிரன் சஞ்சரிப்பதால் கடந்த கால தேக்க நிலை மாறி வாழ்வில் மிகப்பெரிய முன்னேற்றத்தை அடையும் அமைப்பாகும். ராசியாதிபதி செவ்வாய்- கேது சேர்க்கை பெற்று 12–ல் சஞ்சரிப்பதால் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக் கொள்வது, வயது மூத்தவர்களிடம் பேசுகின்ற பொழுது வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது சிறப்பு. தொழில், வியாபாரத்தில் நீண்ட நாட்களாக உள்ள பிரச்சினைகள் எல்லாம் தீர்ந்து வளமான பலன்களை வரும் நாட்களில் எட்டமுடியும்.
உங்களுக்கு இருந்த கடன் தொல்லைகள் எல்லாம் விலகி தொழிலை விரிவுபடுத்தும் முயற்சிகளில் அனுகூலப் பலன் உண்டாகும். வேலையாட்கள் உங்களிடம் வைத்த கோரிக்கைகளை நீங்கள் நிறைவேற்ற முடியும். வேலைக்கு செல்பவர்களுக்கு உயர்வான வாய்ப்புகள் கிடைப்பது மட்டுமில்லாமல் உங்களுடைய தகுதியை நீங்கள் உயர்த்திக் கொள்வதற்கான சந்தர்ப்பங்கள் ஏற்படும்.
சிலருக்கு பெரிய நிறுவனத்திலிருந்து அழைப்பு வருவதால் உங்களின் கனவுகள் எல்லாம் நிறைவேறும். எடுத்த பணியை குறித்த நேரத்தில் செய்து முடித்து அதிகாரியிடம் நல்ல பெயர் எடுக்க முடியும். முருகருக்கு அர்ச்சனை செய்வது, மகா விஷ்ணு வழிபாடு மேற்கொள்வது நல்லது.
வெற்றி தரும் நாட்கள் – 10, 11, 12, 13, 14.
தனுசு ( மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம்)

பொய் பேசுபவர்களையும், தீய பழக்க வழக்கம் உள்ளவர்களையும் கண்டால் ஒதுங்கி நடந்து கொள்ளும் பண்பு கொண்ட தனுசு ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு பஞ்சம ஸ்தானமான 5-ல் குரு அமைந்து ஜென்ம ராசியைப் பார்ப்பதால் நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்கும்.
மாதக் கோளான சூரியன், புதன் சேர்க்கை பெற்று 10-ல் சஞ்சரிப்பதால் கடந்த கால மறைமுக எதிர்ப்புகள் எல்லாம் குறைந்து சமுதாயத்தில் கௌரவமான நிலையினை அடைய முடியும். உங்கள் ராசிக்கு 9-ல் சுக்கிரன், 11-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் குடும்பத்தில் மகிழ்ச்சி, தடைப்பட்ட சுபகாரியங்கள் கைகூடும் யோகம் உண்டாகும். சிலருக்கு புதிய வண்டி, வாகனங்களை வாங்கும் வாய்ப்பு ஏற்படும்.
உறவினர்கள் உங்களுக்கு உறுதுணையாக இருப்பதால் மனநிம்மதி நிலவும். உங்களுக்கு தேவையற்ற பயணங்கள் ஏற்பட்டாலும் அதன் மூலம் ஆதாயம் கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் எதிர்பாராத அனுகூலங்களை அடையும் வாய்ப்பு உண்டு. தொழில் அபிவிருத்திக்காக நீங்கள் மேற்கொள்ளும் திட்டங்கள் எளிதில் நிறைவேறும்.
வம்பு, வழக்குகளில் இருந்த சிக்கல்கள் விலகி தீர்ப்பு உங்களுக்கு சாதகமாக அமையும். வேலைக்கு செல்பவர்கள் மனநிம்மதியுடன் பணிபுரிவதுடன் எதிர்பாராத பதவி உயர்வினை அடையும் யோகமானது வரும் நாட்களில் உண்டு. சக ஊழியர்கள் உதவியாக இருப்பதால் உங்களின் வேலைப்பளு சற்று குறையும்.
வெளியிடங்களில் பணிபுரிந்து இடமாற்றத்தை எதிர்பார்த்தவர்களுக்கு நல்ல செய்தி கிடைத்து குடும்பத்துடன் இணையும் வாய்ப்பு ஏற்படும். துர்க்கை வழிபாடு மேற்கொள்வது, ஏழை மாணவர்களின் படிப்புக்காக உங்களால் முடிந்த உதவிகளை செய்வது உத்தமம்.
வெற்றி தரும் நாட்கள் – 13, 14.
சந்திராஷ்டமம் – 07-10-2023 மாலை 05.18 மணி முதல் 10-10-2023 அதிகாலை 05.45 மணி வரை.
மகரம் ( உத்திராடம் 2,3,4-ஆம் பாதங்கள், திருவோணம், அவிட்டம் 1,2-ஆம் பாதங்கள்)

மற்றவர்களின் தேவையற்ற பேச்சுக்களால் மனம் புண்பட்டாலும் அதனை வெளிக்காட்டிக் கொள்ளாமல் நிதானமாக பழகும் குணம் கொண்ட மகர ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு ஜீவன ஸ்தானமான 10-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் உங்கள் வாழ்வில் நல்ல மாற்றங்கள் ஏற்படும்.
சூரியன், புதன் 9-ல் இருப்பதால் உங்கள் பெயர், புகழ் அதிகரிக்கும். கௌரவ பதவிகள் உங்களை தேடிவரும். குரு வக்ர கதியில் இருப்பதால் கடந்த கால பொருளாதார தடைகள் எல்லாம் விலகி குடும்பத்தில் நிம்மதி ஏற்படும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருப்பது மட்டுமில்லாமல், மனைவி, பிள்ளைகளின் ஆரோக்கியமும் நன்றாக இருக்கும்.
நவீனகரமான பொருட்களை வாங்கும் யோகம் ஏற்படும். தூர பயணங்கள் மேற்கொள்கின்ற பொழுது பொறுமையைக் கடைப்பிடிப்பது நல்லது. தொழில், வியாபாரத்தில் புதிய யுக்திகளை பயன்படுத்தி மற்றவர்கள் பார்த்து வியக்கும் அளவிற்கு உயர்வான நிலையினை அடைவீர்கள். வேலையாட்கள் ஒத்துழைப்பு திருப்திகரமாக இருக்கும்.
நீங்கள் எதிர்பார்த்த பொருளாதார உதவிகள் கிடைத்து மனநிறைவு ஏற்படும். உங்களுக்கு இருந்த மறைமுக எதிர்ப்புகள் எல்லாம் இருந்த இடம் தெரியாமல் மறையும். வேலைக்கு செல்பவர்களுக்கு உங்கள் பணியிலிருந்த நெருக்கடிகள் விலகி நல்ல வாய்ப்பை அடைவீர்கள். உங்கள் மீதிருந்த பழிச்சொல் எல்லாம் விலகி நல்ல பெயர் எடுக்க முடியும்.
நீண்ட நாட்களாக வெளியூர் செல்ல வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்களுக்கு வருகின்ற நாட்களில் வெளியிடங்களுக்கு செல்லும் வாய்ப்பும், அதன் மூலம் பொருளாதார அனுகூலங்களும் ஏற்படும். துர்க்கையம்மனை தரிசிப்பது, சூரிய நமஸ்காரம் மேற்கொள்வது வளமான பலன்களைத் தரும்.
வெற்றி தரும் நாட்கள் – 8, 9.
சந்திராஷ்டமம் – 10-10-2023 அதிகாலை 05.45 மணி முதல் 12-10-2023 மாலை 06.15 மணி வரை.
கும்பம் ( அவிட்டம் 3,4-ஆம் பாதங்கள் சதயம், பூரட்டாதி 1,2,3-ஆம் பாதங்கள் )

உண்மை பேசுவதையே குறிக்கோளாக கொண்டு எல்லா இடத்திலும் மதிப்புடன் வாழும் கும்ப ராசி நேயர்களே, உங்களுக்கு ஏழரைச் சனியில் ஜென்ம சனி நடைபெற்றாலும் 3–ல் ராகு சஞ்சரிப்பதால் சகல விதத்திலும் ஏற்றம் மிகுந்த பலன்களை அடைவீர்கள். சுக்கிரன் 7-ல், செவ்வாய் 9-ல் சஞ்சரிப்பதால் உங்களின் நீண்ட நாள் கனவுகளெல்லாம் விரைவில் நிறைவேற கூடிய யோகம் உண்டு.
குரு வக்ர கதியில் சஞ்சரிப்பதால் குடும்பத்தில் மங்களகரமான சுப காரியங்கள் கைகூடி மகிழ்ச்சி ஏற்படும். உங்களின் நீண்ட நாளைய கடன்கள் எல்லாம் படிப்படியாக குறைந்து மனநிம்மதி உண்டாகும். சூரியன் 8-ல் சஞ்சரிப்பதால் வயது முத்தவர்களிடம் பேசும் போது சற்று கவனத்துடன் இருப்பது நல்லது.
தொழில், வியாபாரத்தில் உங்கள் செயல்பாடுகள் சிறப்பாக இருந்து நல்ல லாபத்தை ஈட்டுவீர்கள். தொழில் வளர்ச்சிக்காக நீங்கள் மேற்கொண்ட முயற்சிகள் எல்லாம் வெற்றி பெற்று தொழிலை அபிவிருத்தி செய்ய முடியும். வேலையாட்கள் உங்களுக்கு இடையூறு தரும் நேரம் என்பதால் முக்கிய விஷயங்களை அவர்களிடம் பகிர்ந்து கொள்ளாமல் இருப்பது நல்லது. நீங்கள் எதிர்பார்த்த புதிய ஆர்டர்கள் வரும் நாட்களில் கிடைக்கும்.
கூட்டாளிகள் மூலம் பொருளாதார ரீதியாக அனுகூலமான பலன்களை அடைவீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கு சிறப்பான வாய்ப்புகள் கிடைப்பது மட்டுமில்லாமல் சிலருக்கு எதிர்பாராத இடமாற்றங்களும் ஏற்படும். உங்களுக்கிருந்த வேலைப்பளு எல்லாம் குறைந்து தற்போது நிம்மதியுடன் பணியாற்ற முடியும். உங்கள் திறமைகேற்ற பலன் விரைவில் கிடைக்கும். மேலும் நீங்கள் நற்பலன்களை பெற சிவனையும், பெருமாளையும் வழிபாடு மேற்கொள்வது நல்லது.
வெற்றி தரும் நாட்கள் – 8, 9, 10, 11, 12.
சந்திராஷ்டமம் – 12-10-2023 மாலை 06.15 மணி முதல் 15-10-2023 அதிகாலை 05.20 மணி வரை.
மீனம் ( பூரட்டாதி 4-ஆம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி )

தயாள குணமும், பொறுமையும் தன்னம்பிக்கையும் கொண்டு திறமைசாலிகளாக விளங்கும் மீன ராசி நேயர்களே, ஜென்ம ராசிக்கு 2-ல் ராகு, 7-ல் சூரியன் சஞ்சரிப்பதால் நீங்கள் எதிலும் யோசித்து செயல்பட வேண்டிய நேரமாகும். குடும்பத்தில் நிம்மதி குறையும் நிகழ்வுகள் நடக்கும்.
குரு வக்ர கதியில் இருப்பதால் பொருளாதார ரீதியாக நெருக்கடிகள் ஏற்படும். 8-ல் செவ்வாய், கேது சஞ்சரிப்பதால் தேவையற்ற அலைச்சல், உடல் அசதி, இருப்பதை அனுபவிக்க இடையூறுகள் ஏற்படலாம். உடனிருப்பவர்களே உங்கள் அமைதியைக் குறைப்பார்கள். உடல் ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக்கொள்வது, சிறு பாதிப்பு என்றாலும் உடனே மருத்துவ சிகிச்சைகள் மேற்கொள்வது சிறப்பு.
உங்கள் ராசிக்கு 12-ல் சஞ்சரிக்கும் சனி வக்ர கதியில் சஞ்சரிப்பதால் உங்களுக்குள்ள தற்போதைய பிரச்சினைகள் எல்லாம் கூட இவ்வாரத்தில் குறைந்து மனநிம்மதி ஏற்படும். அசையாச் சொத்து வழியில் எதிர்பாராத வீண் செலவுகளை எதிர்கொள்ள நேரிடும். பொருளாதார நெருக்கடியால் உங்களின் நீண்ட நாளைய கையிருப்புகள் குறையும்.
தொழில், வியாபாரத்தில் மிகவும் நிதானமாக செயல்பட்டால் தான் ஒரு சில ஆதாயங்களை பெறமுடியும். வேலையாட்கள் மூலமாக தேவையில்லாத நெருக்கடிகள் ஏற்படும். கிடைக்கும் வாய்ப்புகளை தற்போதைக்கு பயன்படுத்திக் கொள்வது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு வேலைப்பளு அதிகப்படியாக இருக்கும் நிலை, அதன் காரணமாக ஓய்வு நேரம் குறையும் சூழ்நிலை உண்டாகும்.
அதிகாரியிடம் பேசுகின்ற பொழுது வாக்குவாதங்கள் செய்யாமல் அவர்கள் சொல்படி நடந்து கொண்டால் ஒருசில அனுகூலங்கள் கிடைக்கும். விநாயகரை தரிசிப்பது, அஷ்டலட்சுமி வழிபாடு மேற்கொள்வது நல்லது.
வெற்றி தரும் நாட்கள் – 10, 11, 12, 13, 14.



