
வார ராசிப்பலன்
அக்டோபர் 22 முதல் 28 வரை 2023
ஜப்பசி 5 முதல் 11 வரை
கணித்தவர்
ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.
இவ்வார சுப முகூர்த்த நாட்கள்
27.10.2023 ஐப்பசி 10 ஆம் தேதி வெள்ளிக்கிழமை சதுர்தசி திதி உத்திரட்டாதி நட்சத்திரம் சித்தயோகம் காலை 07.30 மணி முதல் 09.00 மணிக்குள் விருச்சிக இலக்கினம். வளர்பிறை
மேஷம் ( அஸ்வினி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம் )

தன்னிடத்தில் அன்பும் பாசமும் கொண்டவர்களுக்கு எந்தவித துன்பங்கள் நேர்ந்தாலும் பிரதிபலன் பாராது அவர்களுக்கு உதவும் பண்பு கொண்ட மேஷ ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு சமசப்தம ஸ்தானமான 7-ல் சூரியன், செவ்வாய் சஞ்சரிப்பதால் நீங்கள் எதிலும் சற்று பொறுமையோடு செயல்பட வேண்டிய நேரமாகும். நீங்கள் பெரிதும் நம்பியவர்களே உங்களுக்கு தேவையற்ற நெருக்கடிகளை ஏற்படுத்துவார்கள்.
குடும்பத்தில் கணவன்- மனைவியிடையே வீண் வாக்குவாதங்கள், உற்றார்- உறவினர்கள் மூலமாக நிம்மதி குறைவுகள் ஏற்படும். குரு ஜென்ம ராசியில் சஞ்சரிப்பதால் வரவுக்கு மீறிய வீண் செலவுகள் அதிகரித்து உங்கள் மன அமைதி குறையும். உங்கள் ராசிக்கு 5-ல் சுக்கிரன், 7-ல் புதன் சஞ்சரிப்பதால் எவ்வளவு நெருக்கடியான சூழ்நிலை இருந்தாலும் அதனை உங்களின் தனித் திறமையால் எதிர்கொள்ளும் பலம் ஏற்படும்.
வெளி நபர்கள் மூலமாக உங்களுக்கு உதவி கிடைத்து கஷ்டங்கள் சற்று குறையும். உடல் நலத்திற்கு முக்கியத்துவம் தருவது, அதிலும் குறிப்பாக மனைவி, பிள்ளையின் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது. சனி வக்ர கதியில் சஞ்சரிப்பதால் தொழில், வியாபாரத்தில் இருக்கும் வாய்ப்புகளை தக்க வைத்துக் கொள்வதும், சில நேரங்களில் நீங்களே பணியில் இருந்து நேரடியாக செயல்பட்டால்தான் போட்ட முதலீட்டை எடுக்க முடியும்.
கூட்டாளிகளை அனுசரித்து செல்வது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு தேவையற்ற வீண் பழிச் சொற்களை எதிர்கொள்ள நேரிடும். உங்கள் பணியில் மட்டும் சற்றுப் பொறுமையோடு இருந்தால் நிலைமையை சமாளிக்க முடியும். குரு, தட்சிணாமூர்த்திக்கு வியாழக்கிழமை விளக்கேற்றுவது, முருக வழிபாடு மேற்கொள்வது நல்லது.
வெற்றி தரும் நாட்கள் – 22, 23, 24, 25, 28.
ரிஷபம் ( கிருத்திகை 2,3,4-ஆம் பாதங்கள் ரோகிணி, மிருகசீரிடம் 1,2-ஆம் பாதங்கள் )

எந்த கஷ்டத்தையும் தாங்கக்கூடிய சகிப்புதன்மை அதிகம் கொண்ட ரிஷப ராசி நேயர்களே, மாதக் கோளான சூரியன்- செவ்வாய் சேர்க்கை பெற்று உங்கள் ராசிக்கு ருண, ரோக ஸ்தானமான 6-ல் சஞ்சரிப்பதால் உங்களது மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். குரு, சனி வக்ரகதியில் சஞ்சரிப்பதால் பணவரவுகள் மிக மிக நன்றாக இருக்கும்.
நீங்கள் மற்றவர்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை எளிதில் காப்பாற்றக்கூடிய பலம் ஏற்படும். நீண்ட நாள் விருப்பங்கள் நிறைவேறும். உற்றார் உறவினரிடம் இருந்த கருத்து வேற்றுமைகள் மறைந்து ஒற்றுமையான நிலை உண்டாகும். வெளியூர் பயணங்கள் மூலம் அனுகூலப்பலன் கிடைக்கும்.
உங்கள் ராசிக்கு சுக்கிரன் 4–ல் சஞ்சரிப்பதால் தொழில், வியாபாரத்தில் புதிய யுக்திகளை பயன்படுத்தி நல்ல லாபங்களை ஈட்டமுடியும். நீண்ட நாட்களாக நீங்கள் எதிர்பார்த்த தொழில் வளர்ச்சிக்கான பொருளாதார உதவிகள் வரும் நாட்களில் கிடைக்கும். வேலையாட்கள் உங்களிடம் வைத்த கோரிக்கைகளை நீங்கள் நிறைவேற்ற முடியும்.
உங்களுக்கு இருந்த மறைமுக போட்டிகள் குறைந்து மன நிம்மதி ஏற்படும். வேலைக்கு செல்பவர்கள் பதவி உயர்வினை அடையும் வாய்ப்பு இருக்கிறது. வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு கூட பெரிய நிறுவனத்திலிருந்து அழைப்பு வரும்.
உடன் வேலை செய்பவர்களிடம் பேச்சை குறைத்து விட்டு உங்கள் பணியில் மட்டும் கவனம் செலுத்தினால் வளமான பலன்களை அடையலாம். சனி பகவானுக்கு எள் தீபம் ஏற்றுவது, கால பைரவரை வழிபாடு மேற்கொள்வது நல்லது.
வெற்றி தரும் நாட்கள் – 24, 25, 26, 27.
மிதுனம் ( மிருகசீரிடம் 3,4-ஆம் பாதங்கள், திருவாதிரை, புனர்பூசம் 1,2,3-ஆம் பாதங்கள் )

சமூக வாழ்வில் நல்ல ஈடுபாடும், கலை, இசைத் துறைகளில் சிறந்து விளங்கும் ஆற்றலும் கொண்ட மிதுன ராசி நேயர்களே, குரு வக்ர கதியில் சஞ்சரிப்பதாலும், உங்கள் ராசிக்கு 5-ல் சூரியன், செவ்வாய் சஞ்சரிப்பதாலும் பொருளாதார ரீதியாக கடுமையான நெருக்கடிகள் ஏற்படும் நேரம் என்பதால் எதிலும் சிக்கனமாக இருப்பது, முடிந்தவரை கையிருப்பை கொண்டு செலவு செய்வதும், ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது.
பண விஷயமாக மற்றவர்களுக்கு வாக்குறுதி கொடுப்பதை தற்காலிகமாக தவிர்க்கவும். 9-ல் சஞ்சரிக்கும் சனி வக்ர கதியில் உள்ளதால் தேவையில்லாத அலைச்சல், அதிகப்படியான வேலைப்பளு, உடல் அசதி, இருப்பதை அனுபவிக்க இடையூறுகள் ஏற்படும். பேச்சில் பொறுமையோடு இருப்பது, குடும்ப விஷயங்களை மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்ளாமல் இருப்பது நல்லது. தொழில், வியாபார ரீதியாக மிகவும் நிதானமாக இருப்பதும், அதிக முதலீடுகள் கொண்ட செயல்களை தற்காலிகமாக தவிர்ப்பதும் நல்லது.
வேலையாட்களால் தேவையில்லாத நெருக்கடிகளை எதிர் கொள்வீர்கள். எதிலும் மன உறுதியோடு செயல்படக்கூடிய நீங்கள் தற்போதைக்கு சற்று பொறுமையோடு இருப்பதும், இருக்கும் வாய்ப்புகளை கவனமாக பயன்படுத்திக் கொள்வதும் நல்லது.
உத்தியோகஸ்தர்கள் மற்றவர்களிடம் பேச்சை குறைத்துக் கொண்டு முடிந்தவரை உங்கள் பணியில் மட்டும் கவனம் செலுத்துவது உத்தமம். பார்வதி தேவியை மனதார நினைத்துக் கொள்வதும், மகாலட்சுமி வழிபாடு மேற்கொள்வதும் கஷ்டத்தை குறைக்கும்.
வெற்றி தரும் நாட்கள் – 26, 27, 28.
சந்திராஷ்டமம் – 22-10-2023 அதிகாலை 01.38 மணி முதல் 24-10-2023 அதிகாலை 04.22 மணி வரை.
கடகம் ( புனர்பூசம் 4-ஆம் பாதம், பூசம், ஆயில்யம் )

பேச்சில் கடுமை இருந்தாலும் அதில் உண்மையிருக்கும் என்பதை யாராலும் மறுக்க முடியாத அளவிற்கு பேசும் ஆற்றல் கொண்ட கடக ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு தன ஸ்தானமான 2–ல் சுக்கிரன் சஞ்சரிப்பதால் நீங்கள் பல்வேறு வகையில் ஏற்றம் மிகுந்த பலன்களை அடைவீர்கள். உங்கள் ராசிக்கு 4-ல் புதன் சஞ்சரிப்பதாலும், 10-ல் உள்ள குரு வக்ர கதியில் இருப்பதாலும் குடும்பத்தில் மங்களகரமான சுப காரியங்கள் கைகூடும் யோகம், கணவன்- மனைவியிடையே அன்யோன்யம் மேலும் கூடக்கூடிய ஒரு வாய்ப்பு ஏற்படும்.
பணவரவுகள் தாராளமாக இருந்து கடந்த காலங்களில் நீங்கள் வாங்கிய கடன்களை தற்போது பைசல் செய்ய முடியும். சூரியன், செவ்வாய் 4-ல் சஞ்சரிப்பதால் தேவையற்ற அலைச்சல் இருப்பதை அனுபவிக்க இடையூறு ஏற்படும். சனி வக்ர கதியில் சஞ்சரிப்பதால் தொழில் வியாபார ரீதியாக உற்சாகத்தோடு செயல்பட்டு நல்ல லாபங்களை வரும் நாட்களில் அடையும் வாய்ப்பு உண்டாகும். வேலையாட்களால் இருந்த நெருக்கடிகள் எல்லாம் கூட படிப்படியாக குறையும்.
கடந்த காலங்களில் இருந்த வம்பு வழக்குகளில் தீர்ப்பு உங்களுக்கு சாதகமாக வரும். அரசு மூலம் நீங்கள் எதிர்பார்த்த உத்தரவுகள் கூட தற்போது கிடைக்கும். வசதிபடைத்த கூட்டாளிகள் தற்போது உங்கள் தொழிலில் இணைவதால் வளமான பலன்களை அடையலாம். உத்தியோகஸ்தர்களுக்கு மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும்.
அதிகாரியிடம் பேசுகின்ற போது மட்டும் வீண் வாக்குவாதங்கள் செய்யாமல் அவர்கள் சொல்படி நடந்தால் சிறப்பான பலனை அடையலாம். உங்களிடம் பகைமை பாராட்டியவர்கள் கூட பகைமையை மறந்து தற்போது நட்பாக பழகுவார்கள். சிவன் தலங்களுக்கு சென்று வருவது, சூரிய நமஸ்காரம் செய்வது, பிரித்தியங்கரா தேவியை வழிபடுவது உத்தமம்.
வெற்றி தரும் நாட்கள் – 22, 23, 28.
சந்திராஷ்டமம் – 24-10-2023 அதிகாலை 04.22 மணி முதல் 26-10-2023 அதிகாலை 05.57 மணி வரை.
சிம்மம் ( மகம், பூரம். உத்திரம் 1-ஆம் பாதம் )

எந்தவொரு விஷயத்திலும் சிந்தித்து செயல்படும் ஆற்றல் கொண்டவராகவும், கொடுத்த வாக்கை எப்பாடுபட்டாவது காப்பாற்றும் ஆற்றல் உடையவராகவும் விளங்கும் சிம்ம ராசி நேயர்களே, உங்கள் ராசியாதிபதி சூரியன்- செவ்வாய் சேர்க்கை பெற்று பாக்கிய ஸ்தானமான 9-ல் சஞ்சரிப்பதால் எதிலும் தைரியத்தோடு செயல்பட்டு ஒரு சில ஆதாயங்களை அடைவீர்கள். பெரிய மனிதர்களின் ஆதரவுடன் எந்தவித நெருக்கடியையும் சமாளிக்கக்கூடிய பலம் உண்டாகும்.
வெளியூர் தொடர்புகள் மூலம் அனுகூலமான பலன்களை அடைய முடியும். உங்கள் ராசிக்கு 9-ல் குரு வக்ர கதியில் சஞ்சரிப்பதால் பணவிஷயத்தில் சற்று சிக்கனத்தோடு இருப்பது நல்லது. நீங்கள் எதிர்பார்த்த வருவாய் தக்க நேரத்தில் வரும் என்றாலும், திடீர் செலவுகள் காரணமாக உங்கள் சேமிப்புகள் குறையும்.
வீடுகளை பழுது பார்ப்பதற்காக சுபச்செலவுகள் செய்யும் சூழ்நிலை உண்டாகும். சுக்கிரன் ஜென்ம ராசியில் சஞ்சரிப்பதால் தொழிலில் நல்ல வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும் என்றாலும் அதிக முதலீடுகள் கொண்ட செயல்களில் ஈடுபடுகின்ற பொழுது சற்று பொறுமையோடு செயல்படுவது நல்லது. தகுதி வாய்ந்த வேலையாட்கள் உங்கள் தொழிலுக்கு கிடைப்பார்கள்.
வேலைக்கு செல்பவர்களுக்கு அதிகாரிகளின் ஆதரவு சிறப்பாக இருப்பதால் எதிலும் நிம்மதியுடன் பணியாற்ற முடியும். அதிகப்படியான வேலைப்பளுவால் உடல் அசதி ஏற்படும் என்றாலும் அதற்கான பொருளாதார ஆதாயத்தை அடையும் வாய்ப்பு உண்டு.
சில நேரங்களில் சக ஊழியர்களிடம் வீண் வாக்குவாதங்கள் ஏற்படலாம். உங்கள் பணியில் மட்டும் நீங்கள் சற்று பொறுமையோடு செயல்படுவது நல்லது. தட்சிணாமூர்த்தி வழிபாடு மேற்கொள்வது, நரசிம்மரை தரிசிப்பது நல்லது.
வெற்றி தரும் நாட்கள் – 22, 23, 24, 25.
சந்திராஷ்டமம் – 26-10-2023 அதிகாலை 05.57 மணி முதல் 28-10-2023 காலை 07.30 மணி வரை.
கன்னி ( உத்திரம் 2,3,4-ஆம் பாதங்கள், அஸ்தம், சித்திரை 1,2-ஆம் பாதங்கள் )

அன்பு, பண்பு, மரியாதை, தெய்வ பக்தி உடையவராகவும், சூது வாது அறியாமல் அனைவரையும் எளிதில் நம்பி விடுபவராகவும் விளங்கும் கன்னி ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு சுக்கிரன் 12-ல், குரு 8-ல் சஞ்சரிப்பதால் பொருளாதார ரீதியாக உங்கள் எதிர்பார்ப்புகள் நிறைவேற இடையூறுகள் ஏற்படும்.
ஜென்ம ராசிக்கு 2-ல் சூரியன், செவ்வாய் சஞ்சரிப்பதால் குடும்பத்தில் ஒற்றுமை குறைவு, நெருங்கியவர்களால் மன நிம்மதி குறையும் நிலை நிலவும். ராசியாதிபதி புதன் 2-ல் சஞ்சரிப்பதால் உங்களுக்கு இருந்த அலைச்சல், டென்ஷன் எல்லாம் குறையும். கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் மிகவும் நிதானத்தோடு செயல்பட வேண்டிய நேரமாகும்.
நீங்கள் நல்லதாக பேசினாலும் அதனை மற்றவர்கள் தவறாக புரிந்து கொள்ளக் கூடிய காலம் என்பதால் சூழ்நிலைக்குத் தக்கவாறு நிதானத்தோடு செயல்படுவது நல்லது. தொழில், வியாபாரத்தில் நீங்கள் எவ்வளவு கடினமாக உழைத்தாலும் தேவையற்ற தேக்கங்கள் இருக்கும். வேலையாட்களை அனுசரித்து செல்வது, தொழில் விஷயங்களை வெளிநபர்களிடம் பேசாமல் இருப்பது நல்லது.
உங்களுக்கு கிடைக்கும் சிறு வாய்ப்பையும் தவறவிடாமல் அனைத்து செயலிலும் கண்ணும் கருத்துமாக செயல்பட்டால்தான் நிலைமையை சமாளிக்க முடியும். உத்தியோகஸ்தர்களுக்கு பணி சுமை அதிகப்படியாக இருந்தாலும் உடனிருப்பவர்கள் சற்று ஆதரவாக இருப்பதால் எதையும் எதிர்கொள்ள முடியும்.
தற்போது உங்கள் தகுதியை உயர்த்திக் கொள்வதற்கான முயற்சிகளில் ஈடுபட்டால் விரைவில் ஒரு நல்ல நிலையை எட்ட முடியும். முருகனை வழிபடுவது, மாணவர்களின் படிப்புக்காக பொருளுதவி செய்வது நல்லது.
வெற்றி தரும் நாட்கள் – 26, 27, 28.
சந்திராஷ்டமம் – 28-10-2023 காலை 07.30 மணி முதல் 30-10-2023 காலை 10.28 மணி வரை.
துலாம் ( சித்திரை 3,4-ஆம் பாதங்கள், சுவாதி, விசாகம் 1,2,3-ஆம் பாதங்கள் )

தம்முடைய சொந்த பொருட்களையும் பிறருக்கு தானமளிக்க கூடிய அளவிற்கு பரந்த நோக்கம் கொண்டவராக விளங்கும் துலா ராசி நேயர்களே, ஜென்ம ராசியில் சூரியன், செவ்வாய் சஞ்சரிப்பதால் உணர்ச்சிவசப்படாமல் முன்கோபத்தைக் குறைத்துக் கொண்டு நிதானத்தோடு செயல்பட்டால் தான் ஏற்படும் தேவையற்ற இடர்பாடுகளை எதிர்கொண்டு வளமான பலன்களை பெற முடியும்.
உங்கள் ராசிக்கு 7-ல் சஞ்சரிக்கும் குரு வக்ர கதியில் இருப்பதால் பொருளாதார ரீதியாக தேக்கங்கள் ஏற்படும், என்றாலும் ஜென்ம ராசியில் புதன், ராசியாதிபதி சுக்கிரன் லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் எதிர்பாராத தனவரவுகள் ஏற்பட்டு உங்களுடைய நெருக்கடிகள் எல்லாம் குறைந்து வளமான பலன்களை பெறுவீர்கள்.
கணவன்- மனைவியிடையே ஒருவருக்கு ஒருவர் விட்டுக்கொடுத்து செல்வது நல்லது. ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வதன் மூலம் பொருளாதார தேவைகளை சமாளிக்க முடியும். தொழில், வியாபாரத்தில் மற்றவர்கள் பார்த்து ஆச்சரியப்படும் அளவிற்கு உங்களது வளர்ச்சியானது சிறப்பாக இருக்கும். மறைமுக எதிர்ப்புகள் சில இருந்தாலும் உங்களின் தனித்திறமையால் எதையும் சிறப்பாக கையாண்டு நல்ல வளர்ச்சியை அடைவீர்கள்.
அதிக முதலீடுகள் கொண்ட செயல்களில் சிறிது தேக்க நிலை இருந்தாலும் அடைய வேண்டிய இலக்கை அடையும் யோகம் உண்டு. வேலையாட்கள் ஒத்துழைப்பு திருப்திகரமாக இருக்கும். வேலைக்கு செல்பவர்கள் சூழ்நிலைக்கு தக்கவாறு பொறுமையோடு நடந்துகொண்டால் நல்ல வாய்ப்பினை அடைய முடியும். அதிகாரியிடம் வீண் வாக்குவாதங்கள் செய்யாமல் உங்கள் பணியில் மட்டும் கவனம் செலுத்துவது மிகவும் நல்லது. சூரிய நமஸ்காரம் செய்வது, அஷ்டலட்சுமி வழிபாடு மேற்கொள்வது நல்லது.
வெற்றி தரும் நாட்கள் – 26, 27, 28.
விருச்சிகம் ( விசாகம் 4-ஆம் பாதம், அனுஷம், கேட்டை )

எவ்வளவு தான் கற்று அறிந்திருந்தாலும் எந்தவித தயக்கமும் இன்றி தாம் கற்றதை பிறருக்கும் போதிக்கும் பண்பு கொண்ட விருச்சிக ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு 10ல் சுக்கிரன் சஞ்சரிப்பதால் நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். வருட கிரகமபன குரு சனி தற்போது வக்ர கதியில் சஞ்சரிப்பதால் உங்களது பலமும் வலிமையும் அதிகரிக்கும்.
உங்களது முயற்சிகள் வெற்றி தரும். பொருளாதார ரீதியாக இருந்த நெருக்கடிகள் எல்லாம் படிப்படியாக குறையும். உடல் ஆரோக்கிய பாதிப்புகள் விலகி எதிலும் சுறுசுறுப்பாக செயல்படும் யோகம், குடும்பத்தில் இருந்த மருத்துவச் செலவுகள் குறையும் சூழல் ஏற்படும். தொழில், வியாபாரத்தில் உற்சாகத்தோடு செயல்பட்டு கௌரவமான நிலையினை எட்டும் வாய்ப்பு உண்டு.
உங்களுக்கிருந்த பொருளாதார நெருக்கடிகள் விலகி நீங்களும் மற்றவர்கள் பார்த்து வியக்கும் அளவிற்கு உயர்வான நிலையினை எட்டும் வாய்ப்பு ஏற்படும். தொழிலை மேம்படுத்தும் யோகம், தொழிலுக்காக முதலீடு செய்யும் வாய்ப்பு, புதிய ஆர்டர்களை அடையும் வாய்ப்பு வரும் நாட்களில் ஏற்படும்.
உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு உங்கள் மீதிருந்த அவ பெயர்கள் எல்லாம் விலகி உயர்வான நிலையினை எட்ட முடியும். சூரியன், செவ்வாய் 12-ல் சஞ்சரிப்பதால் அதிகாரிகளிடம் வீண் வாக்கு வாதம் செய்யாமல் இருப்பது நல்லது.
சக ஊழியர்களிடம் இருந்த கருத்து வேறுபாடுகள் எல்லாம் விலகி சுமுகமான நிலை ஏற்படும். கொடுக்கல்- வாங்கல் ரீதியாக வரும் நாட்களில் சிறப்பான நிலையினை நீங்கள் எட்ட முடியும். முருகருக்கு தீபம் ஏற்றுவது, மகாவிஷ்ணு வழிபாடு மேற்கொள்வது நல்லது.
வெற்றி தரும் நாட்கள் – 22, 23, 28.
தனுசு ( மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம்)

பயந்த சுபாவம் கொண்டவராக இருந்தாலும் தன்னுடைய தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள காலம் நேரம் பார்க்காமல் உழைக்கும் ஆற்றல் கொண்ட தனுசு ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு லாப ஸ்தானமான 11–ல் சூரியன், செவ்வாய், புதன் சஞ்சரிப்பதால் உங்களது செல்வம், செல்வாக்கு, பெயர், புகழ் மேலும் கூடக்கூடிய வாரமாக இவ்வாரம் இருக்கும்.
குரு ஜென்ம ராசியை பார்ப்பதால் குடும்பத்தில் மகிழ்ச்சி மகிழ்ச்சிதரக்கூடிய இனிய நிகழ்ச்சிகள் அரங்கேற கூடிய ஒரு வாய்ப்புகள் உண்டு. கணவன்- மனைவியிடையே நீண்ட நாட்களாக இருந்த கருத்து வேறுபாடுகள் எல்லாம் முழுமையாக மறைந்து அந்நியோன்யம் அதிகரிக்கும். சுக்கிரன் 9-ல் இருப்பதால் பொருளாதாரம் சிறப்பாக இருந்து உங்களுக்குள்ள கடன்கள் எல்லாம் படிப்படியாக குறையும்.
கொடுத்த வாக்குறுதிகளை குறித்த நேரத்தில் காப்பாற்றி நல்ல பெயர் எடுப்பீர்கள். சிறப்பான ஆரோக்கியத்தால் கடந்த கால மருத்துவ செலவுகள் குறையும் நிலையும், எதிலும் சுறுசுறுப்பாக செயல்படக்கூடிய ஒரு யோகமும் ஏற்படும். தொழில், வியாபாரத்தில் இருந்த தேக்கங்கள், மறைமுக போட்டிகள் எல்லாம் விலகி தற்போது நல்ல வாய்ப்புகள் கிடைக்கும் யோகம் உண்டு.
வெளியூர் தொடர்புகள் மூலம் அனுகூலங்கள் உண்டாகும். உத்தியோக ரீதியாக உங்கள் திறமைகளை வெளிக்காட்ட நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். மற்றவர்களால் செய்து முடிக்க முடியாத ஒரு கடினமான பணியை நீங்கள் தலையிட்டு எளிதில் செய்து முடித்து நல்ல பெயர் எடுக்க கூடிய ஒரு யோகம் உண்டு.
ஒரு சிலருக்கு நீண்ட நாட்களாக எதிர்பார்த்த இடமாற்றங்கள் கிடைத்து குடும்பத்தினருடன் இணைந்து வாழும் வாய்ப்பு உண்டாகும். அஷ்டலட்சுமி வழிபாடு மேற்கொள்வது, உடல் ஊனமுற்றவர்களுக்கு உங்களால் முடிந்த உதவி செய்வது நல்லது.
வெற்றி தரும் நாட்கள் – 24, 25.
மகரம் ( உத்திராடம் 2,3,4-ஆம் பாதங்கள், திருவோணம், அவிட்டம் 1,2-ஆம் பாதங்கள்)

எப்பொழுதும் ஜாலியாகவும், நகைச்சுவை உணர்வுடனும் கள்ளம் கபடமற்று வெகுளித்தனமாக செயல்படும் குணம் கொண்ட மகர ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு ஜீவன ஸ்தானமான 10–ஆம் வீட்டில் சூரியன், செவ்வாய் சஞ்சரிப்பதால் நீங்கள் வாழ்வில் நல்லதோர் முன்னேற்றங்களை அடைவீர்கள்.
உங்களுக்கு இருந்த எதிர்ப்புகள், பொருளாதார நெருக்கடிகள் எல்லாம் விலகி சிறப்பான வளர்ச்சியினை அடைய முடியும். கடன் பிரச்சினைகள் குறையும். குரு, சனி வக்ர கதியில் சஞ்சரிப்பதால் எதிலும் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். மனைவி, பிள்ளைகள் வழியில் மகிழ்ச்சி, தடைப்பட்ட சுபகாரியங்கள் கைகூடும் வாய்ப்பு ஏற்படும். உடல் நலத்தில் சற்று அக்கறை எடுத்துக்கொள்வது, இயற்கை உணவுகளை உட்கொள்வது உத்தமம்.
தொழில், வியாபாரத்தில் நீங்கள் முனைப்புடன் செயல்பட்டால் வரும் நாட்களில் படிப்படியான வளர்ச்சியை பெற முடியும். கூட்டாளிகள் ஆதரவு சிறப்பாக இருப்பதால் கூட்டுத்தொழில் செய்பவர்களுக்கு அதிகப்படியான லாபங்கள் கிடைக்கும். அரசு அதிகாரிகள் மூலம் இருந்த கெடுபிடிகள் எல்லாம் குறைந்து தொழிலை நிம்மதியுடன் நடத்த முடியும்.
வேலைக்கு செல்பவர்களுக்கு சக ஊழியர்களால் இருந்த நெருக்கடிகள் எல்லாம் விலகி நீங்கள் உங்கள் பணியில் திறம்பட செயல்பட்டு நல்ல பெயர் எடுக்க முடியும். பெரிய மனிதர்களின் ஆதரவு கிடைத்து நீண்ட நாட்களாக தீர்க்கமுடியாத பிரச்சினைகளுக்கு வரும் நாட்களில் ஒரு நல்ல முடிவு கிடைக்கும். ஆஞ்சநேயர் வழிபாடு மேற்கொள்வது, வெள்ளிக்கிழமை மகாலட்சுமிக்கு விரதம் இருப்பது நல்லது.
வெற்றி தரும் நாட்கள் – 22, 23, 26, 27.
கும்பம் ( அவிட்டம் 3,4-ஆம் பாதங்கள் சதயம், பூரட்டாதி 1,2,3-ஆம் பாதங்கள் )

மற்றவர்களுக்கு உதவி செய்யும் பண்பும், சிறு வயதிலிருந்தே சிறந்த தெய்வ பக்தியும், நல்ல தர்ம சிந்தனையும் கொண்ட கும்ப ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு 9-ல் சூரியன், செவ்வாய், புதன் சஞ்சரிப்பதால் நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்கக்கூடிய இனிய நாட்களாக வருகின்ற நாட்கள் இருக்கும்.
குரு வக்ர கதியில் சஞ்சரிப்பதால் பொருளாதார ரீதியாக சிறப்பான நிலை, குடும்பத்தில் சந்தோஷம் ஏற்படும். நீண்ட நாட்களாக குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு நல்ல செய்தி கிடைக்கும். கடந்த காலங்களில் இருந்த சிறுசிறு உடம்பு பாதிப்புகள் கூட முழுமையாக விலகி எதிலும் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள்.
உங்கள் ராசிக்கு 7-ல் சுக்கிரன் பலமாக இருப்பதால் பெண்கள் மூலம் ஆதாயங்கள் கிடைக்கும். அசையாச் சொத்து வகையில் சுபச்செலவுகள் ஏற்படும். தொழில், வியாபாரத்தில் நீங்கள் சிறப்பான ஒரு நிலையினை அடைவீர்கள். வங்கி மூலம் எதிர்பார்த்த பொருளாதார உதவிகள் கிடைத்து தொழிலை அபிவிருத்தி செய்ய முடியும். தொழில் வளர்ச்சிக்காக பூமி, மனை வாங்கும் யோகம், புதிய நவீன கருவிகள் வாங்கும் வாய்ப்பு உண்டாகும்.
உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நீண்ட நாட்களாக இருந்த கடுமையான நெருக்கடிகள் எல்லாம் முழுமையாக விலகி எதிலும் நிம்மதியுடன் செயலாற்ற முடியும். சிலருக்கு எதிர்பார்த்த பதவி உயர்வுகள் கிடைக்கும் வாய்ப்பு உண்டு. நிலுவையில் இருந்த சம்பள பாக்கிகள் கூட தற்போது கிடைத்து உங்களின் பொருளாதாரப் பிரச்சினைகள் முழுமையாக விலகும். துர்க்கை வழிபாடு மேற்கொள்வது, சனிபகவானுக்கு சனிக்கிழமையன்று எள் தீபம் ஏற்றுவது உத்தமம்.
வெற்றி தரும் நாட்கள் – 24, 25, 28.
மீனம் ( பூரட்டாதி 4-ஆம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி )

தன்னை நம்பியவர்களுக்கு நல்ல எண்ணத்துடன் உதவிகள் செய்தாலும் அடிக்கடி ஏமாற்றங்களை சந்திக்கும் மீன ராசி நேயர்களே, உங்கள் ராசியாதிபதி குரு 2-ல் இருப்பது சாதகமான அமைப்பு என்றாலும் தற்போது வக்ர கதியில் இருப்பதால் நிதானமாக இருப்பது நல்லது. பொருளாதார ரீதியாக சில நெருக்கடிகள் இருந்தாலும் சனி வக்ர கதியில் சஞ்சரிப்பதால் எதிர்பாராத உதவிகள் கிடைத்து எதையும் எதிர்கொள்ள கூடிய பலம் ஏற்படும்.
உங்கள் ராசிக்கு 8-ல் சூரியன், செவ்வாய் சஞ்சரிப்பதால் கணவன்- மனைவியிடையே ஒற்றுமை குறைவு, உற்றார்- உறவினர்களிடம் வீண் வாக்கு வாதம் ஏற்படும். பேச்சில் நிதானத்தோடு இருப்பது, எதிலும் உணர்ச்சிவசப்படாமல் சூழ்நிலைக்குத் தக்கவாறு உங்களை மாற்றிக் கொள்வது நல்லது. வண்டி, வாகனங்களில் வெளியே செலலும் போது சட்ட விதிக் உட்பட்டு நடப்பது தற்போதைக்கு நல்லது.
பண விஷயத்தில் சிக்கனமாக இருப்பதும், அதிக முதலீடுகள் கொண்ட செயல்களை தவிர்ப்பதும் நல்லது. உடல் ஆரோக்கியத்தில் சற்று அக்கறை செலுத்துவதும், தூரப் பயணங்களைத் தவிர்ப்பதும் உத்தமம். தொழில், வியாபாரத்தில் சில நெருக்கடி இருந்தாலும் உங்களின் தனித் திறமையால் எதையும் எதிர்கொள்ளக்கூடிய பலமுண்டாகும்.
வேலையாட்களையும், கூட்டாளிகளையும் அனுசரித்து செல்வது நல்லது. காலம் நேரம் பார்க்காமல் உழைத்தால் மட்டுமே தற்போது உள்ள நெருக்கடியான நிலையினை எதிர்கொள்ள முடியும். உத்தியோகஸ்தர்கள் மற்றவர்கள் விஷயத்தில் தலையிடாமல் உங்கள் பணியில் மட்டும் கவனத்தோடு இருப்பது நல்லது. தற்போது நீங்க இருக்கும் நிலையே சற்று சாதகமான நிலையாகும். மற்றவர்கள் சொல்லும் ஆசை வார்த்தையை கேட்டு இருப்பதை இழந்து விடவேண்டாம். தட்சிணாமூர்த்தி வழிபாடு, சிவ ஸ்தலங்களுக்கு சென்று வருவது நல்லது.
வெற்றி தரும் நாட்கள் – 22, 23, 26, 27.



