Weekly Rasi Palan: வார ராசிப்பலன் அக்டோபர் 1 முதல் 7 வரை 2023

Advertisements

வார ராசிப்பலன்
அக்டோபர் 1 முதல் 7 வரை 2023
புரட்டாசி 14 முதல் 20 வரை

04.10.2023 புரட்டாசி 17 ஆம் தேதி புதன்கிழமை சஷ்டி திதி ரோகிணி நட்சத்திரம் சித்தயோகம் காலை 09.00 மணி முதல் 10.30 மணிக்குள் விருச்சிக இலக்கினம். தேய்பிறை

 

இவ்வார சுப முகூர்த்த நாட்கள்

01.10.2023 புரட்டாசி 14 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை துவிதியை திதி ஹஸ்தம் நட்சத்திரம் அமிர்தயோகம் காலை 09.00 மணி முதல் 10.30 மணிக்குள் விருச்சிக இலக்கினம். தேய்பிறை

 

மேஷம் ( அஸ்வினி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம் )


சிரிக்க சிரிக்க பேசி எல்லோரையும் வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் ஆற்றல் கொண்ட மேஷ ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு ருணரோக ஸ்தானமான 6-ல் சூரியன் சஞ்சாரம் செய்வதும், திங்கட்கிழமை முதல் சுக்கிரன் 5-ல் சஞ்சரிப்பதாலும் நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்கும். நல்ல வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். பொருளாதார நிலை ஓரளவு சிறப்பாக இருந்து உங்கள் தேவைகள் பூர்த்தியாகும்.

பிறருக்குத் தந்த வாக்குறுதிகளை எளிதில் காப்பாற்றுவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி தரக்கூடிய இனிய நிகழ்வுகள் நடக்கும். ஜென்ம ராசியில் ராகு, செவ்வாய்க்கிழமை முதல் 7-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் உங்களது முன்கோபத்தை சற்று குறைத்துக் கொண்டு கணவன்- மனைவியிடையே ஒருவருக்கொருவர் அனுசரித்து செல்வது நல்லது.

தொழிலில் நல்ல லாபங்கள் கிடைக்கும் என்றாலும் வேலையாட்களை அனுசரித்து செல்வது நல்லது. கூட்டாளிகள் அவர்களுடைய பங்கை கேட்டு உங்களுக்கு தொந்தரவு தருவார்கள். தொழில் தொடர்பான விஷயங்களை வெளிநபர்களிடம் பேசாமல் இருப்பது நல்லது. உடல் ஆரோக்கியம் நன்றாக இருப்பதால் எதிலும் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள்.

கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் சிக்கனத்தோடு இருந்தால் நிலைமையை சமாளிக்க முடியும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு உங்களது மதிப்பும், மரியாதையும் அதிகரிப்பது மட்டுமில்லாமல் உங்களிடம் வாக்குவாதம் செய்த சக ஊழியர்கள் தற்போது உங்களிடம் சுமூகமாக பழகக் கூடிய நிலை உண்டாகும். துர்க்கை அம்மனுக்கு செவ்வாய் கிழமை ராகு காலத்தில் தீபம் ஏற்றுவதன் மூலம் உங்கள் சங்கடங்கள் குறையும்.

வெற்றி தரும் நாட்கள் – 1, 2, 5, 6, 7.

 

ரிஷபம் ( கிருத்திகை 2,3,4-ஆம் பாதங்கள் ரோகிணி, மிருகசீரிடம் 1,2-ஆம் பாதங்கள் )


பிறருக்கு உதவி செய்வதில் தன்னலம் கருதாது செயலாற்றும் பண்பு கொண்ட ரிஷப ராசி நேயர்களே, குரு, சனி வக்ர கதியில் இருப்பதால் உங்களுக்கு வந்து இருந்து வந்த இடர்பாடுகள் எல்லாம் விலகி படிப்படியான வளர்ச்சிகளை அடைவீர்கள். சுபகாரிய முயற்சிகளில் அனுகூலம் உண்டாகும்.

திங்கட்கிழமை முதல் ராசியாதிபதி சுக்கிரன் 4-ல், உங்கள் ராசிக்கு 2, 5-க்கு அதிபதியான புதன் 5-ல் சஞ்சரிப்பதால் பணவரவுகள் மிக மிக நன்றாக இருந்து சகல சௌபாக்கியங்களையும் அடையும் யோகம் உண்டு. தற்போது 5-ல் சஞ்சரிக்க கூடிய செவ்வாய் செவ்வாய்க்கிழமை முதல் 6-ம் வீட்டில் சஞ்சாரம் செய்ய இருப்பதால் உங்களுக்கு நெருக்கடிகளை தந்தவர்கள் கூட உங்களிடம் நட்புடன் பழகக்கூடிய ஒரு நிலை உண்டாகும்.

தொழில், வியாபாரத்தில் புதிய யுக்திகளை பயன்படுத்தி நல்ல லாபத்தை ஈட்டக் கூடிய வாய்ப்புகள் உண்டு. வேலையாட்கள் ஆதரவு சிறப்பாக இருப்பதால் நீங்கள் எடுத்த ஆர்டர்களை குறித்த நேரத்தில் வாடிக்கையாளர்களுக்கு டெலிவரி செய்ய முடியும். அரசு வழியில் உங்களுக்கு இருந்து வந்த சட்ட சிக்கல்கள் எல்லாம் தற்போது குறையும். வெளியூர் தொடர்புகள் மூலம் மகிழ்ச்சி தரக்கூடிய இனிய நிகழ்ச்சிகள் நடக்கும்.

உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணியில் சிறப்பாக செயல்பட்டு நல்ல பெயர் எடுக்கக் கூடிய வாய்ப்புகள் உண்டு. மற்றவர்கள் விஷயத்தில் தலையிடாமல் எதிலும் பொறுமையோடு செயல்படுவது நல்லது. வெளிநாடுகளில் பணிபுரிவதற்கான முயற்சிகளை மேற்கொண்டிருப்பவர்களுக்கு விரைவில் நல்ல செய்தி வரும். சிவன் ஸ்தலங்களுக்கு சென்று சிவ வழிபாடு செய்வது, துர்க்கை அம்மனுக்கு தீபம் ஏற்றி வழிபடுவது நன்மை தரும்.

வெற்றி தரும் நாட்கள் – 3, 4.

 

மிதுனம் ( மிருகசீரிடம் 3,4-ஆம் பாதங்கள், திருவாதிரை, புனர்பூசம் 1,2,3-ஆம் பாதங்கள் )


நிதானமான அறிவாற்றல் இருந்தாலும் சமயத்திற்கேற்றார் போல குணத்தை மாற்றிக் கொள்ளும் குணம் கொண்ட மிதுன ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு சுக ஸ்தானமான 4-ல் சூரியன் சஞ்சரிப்பதாலும் குரு வக்ர கதியில் இருப்பதாலும் நீங்கள் எதிர்பார்க்கக் கூடிய பணவரவுகள் தக்க நேரத்தில் கிடைக்க ஒரு சில இடையூறுகள் ஏற்படலாம்.

தேவையில்லாத அலைச்சல் காரணமாக இருப்பதை அனுபவிக்க தடங்கல்கள் உண்டாகும். ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வது, கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் கவனமாக இருப்பது நல்லது. ராசியாதிபதி புதன் வரும் திங்கட்கிழமை முதல் 4-ல் சஞ்சரிப்பதால் ஒரு சில எதிர்பாராத உதவிகள் கிடைத்து உங்களுடைய அன்றாட தேவைகள் பூர்த்தியாகும்.

செவ்வாய்க்கிழமை முதல் செவ்வாய் 5-ல் கேது சேர்க்கைப் பெற்று சஞ்சரிப்பதால் உணவு விஷயத்தில் கட்டுப்பாடோடு இருப்பது மூலம் தேவையற்ற ஆரோக்கிய இடர்பாடுகளை சமாளிக்க முடியும். பிள்ளைகள் வழியில் தேவையில்லாத மனக்கவலைகள் ஏற்படலாம். ராகு லாப ஸ்தானத்தில் இருப்பதால் தொழில், வியாபாரத்தில் போட்டிகள் இருந்தாலும் உங்கள் தனித் திறமையால் எதையும் எதிர்கொள்ளகூடிய பலம் உண்டாகும்.

தொழில் தொடர்பான முக்கிய விஷயங்களை குறிப்பாக வேலையாட்களிடம் பகிர்ந்து கொள்ளாமல் இருப்பது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மற்றவர்கள் வேலையையும் நீங்கள் சேர்த்து செய்ய வேண்டிய ஒரு நெருக்கடியில் இருந்தாலும் அதற்கான பொருளாதார ஆதாயங்களை பெறுவீர்கள். இந்த வாரத்தில் முருக வழிபாடு மேற்கொள்வது, உடல் ஊனமுற்றவர்களுக்கு உங்களால் முடிந்த உதவிகளை செய்வது நன்மை தரும்.

வெற்றி தரும் நாட்கள் – 1, 2, 5, 6, 7.

 

கடகம் ( புனர்பூசம் 4-ஆம் பாதம், பூசம், ஆயில்யம் )


எந்த ஒரு காரியத்திலும் தீர ஆலோசித்து செயல்படும் பண்பு கொண்ட கடக ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு முயற்சி ஸ்தானமான 3-ல் சூரியன் சஞ்சரிப்பதாலும், திங்கட்கிழமை முதல் 2-ல் சுக்கிரன் சஞ்சரிப்பதாலும் எதிலும் தைரியத்தோடு செயல்படுவீர்கள். உடனிருப்பவர்களுடைய ஆதரவானது உங்களுக்கு சிறப்பாக இருக்கும்.

8-ல் சஞ்சரிக்கக்கூடிய சனி வக்ர கதியில் இருப்பதால் உடல் ஆரோக்கியமானது சிறப்பாக இருக்கும். குரு வக்ர கதியில் இருப்பதால் பணவரவுகள் சிறப்பாக இருந்து கொடுத்த வாக்குறுதிகளை குறித்த நேரத்தில் காப்பாற்ற முடியும். கணவன்- மனைவி இடையே ஒற்றுமை மிகச் சிறப்பாக இருக்கும்.

புதிய பொருட்களை வாங்கக்கூடிய வாய்ப்புகள் ஏற்படும். தொழில், வியாபாரத்தில் உங்கள் பொருட்களுக்கு நல்ல விலை கிடைத்து அடைய வேண்டிய லாபத்தை அடைய கூடிய வாய்ப்புகள் வரும் நாட்களில் உண்டு. செவ்வாய் உங்கள் ராசிக்கு 4-ஆம் வீட்டில் செவ்வாய்க்கிழமை முதல் சஞ்சரிப்பதால் தேவையில்லாத அலைச்சல்கள் சற்று இருக்கும்.

இருந்தும் அனுபவிக்க முடியாத நிலை ஏற்படும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணிச்சுமை கூடுதலாக இருந்தாலும் அதிகாரிகள் ஆதரவு மிகச் சிறப்பாக இருப்பதால் எவ்வளவு கடினமான பணிகளை கூட எளிதில் செய்து முடிக்க முடியும். வேலை நிமித்தமாக அடிக்கடி பயணங்கள் மேற்கொள்ளக்கூடிய வாய்ப்புகள் உண்டாகும்.

அசையும் அசையா சொத்துக்கள் வாங்க வேண்டும் என்ற உங்களுடைய எண்ணங்கள் நிறைவேறுவதற்கான வாய்ப்புகள் அமையும். லட்சுமி நரசிம்மரை வழிபாடு செய்வது, ஆஞ்சநேயர் வழிபாடு மேற்கொள்வது கெடுதியை குறைக்கும்.

வெற்றி தரும் நாட்கள் – 1, 2, 3, 4.

 

சிம்மம் ( மகம், பூரம். உத்திரம் 1-ஆம் பாதம் )


இருந்த இடத்திலிருந்தே அனைவரையும் ஆட்டி வைக்கும் அஞ்சா நெஞ்சம் கொண்ட சிம்ம ராசி நேயர்களே, ராசியாதிபதி சூரியன் 2-ல் சஞ்சரிப்பதாலும், உங்கள் ராசிக்கு 9-ல் சஞ்சரிக்கக்கூடிய குரு தற்போது வக்ர கதியில் இருப்பதாலும் நீங்கள் எதிலும் சற்று நிதானத்தோடு இருப்பது நல்லது.

குடும்ப ஒற்றுமை தேவையற்ற வகையில் பாதிக்கும். ஒன்றுமே இல்லாத விஷயத்திற்கு கூட உடன் இருப்பவர்களிடம் கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். சூழலுக்கு ஏற்றவாறு எதிலும் பொறுமையோடு செயல்படுவது நல்லது. திங்கட்கிழமை முதல் சுக்கிரன் ஜென்ம ராசியில் சஞ்சரிப்பதாலும், செவ்வாய்க்கிழமை முதல் செவ்வாய் 3-ல் சஞ்சரிக்க இருப்பதாலும் எதையும் எதிர் கொள்ளக்கூடிய பலம் உண்டாகும்.

நெருக்கடியான நேரத்தில் கூட உரிய பண உதவிகள் கிடைத்து உங்கள் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். சனி உங்கள் ராசிக்கு 7-ல் வக்ர கதியில் இருப்பதால் கூட்டாளிகளை கலந்து ஆலோசித்து செயல்படுவது நல்லது. தொழில், வியாபாரத்தில் ஒவ்வொரு காரியத்திலும் நீங்கள் கவனத்தோடு செயல்பட்டால் தான் நீங்கள் போட்ட முதலை எடுக்க முடியும். தொழில் தொடர்பான விஷயங்களை வெளியிடங்களில் பகிர்ந்து கொள்ளாமல் இருப்பது நல்லது.

வேலைக்கு செல்பவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கும் என்றாலும் அதிகாரியிடம் வீண் கருத்து வேறுபாடுகள் ஏற்படக்கூடிய நேரம் என்பதால் உங்கள் பணியில் மட்டும் நீங்கள் சற்று கவனத்தோடு இருப்பது நல்லது. கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் சற்று சிக்கனத்தோடு செயல்படுவது உத்தமம். சிவன் ஸ்தலங்களுக்கு சென்று வருவது, தட்சிணாமூர்த்திக்கு வியாழக்கிழமையில் நெய் தீபம் ஏற்றுவது நன்மை தரும்.

வெற்றி தரும் நாட்கள் – 3, 4, 5, 6, 7.

 

கன்னி ( உத்திரம் 2,3,4-ஆம் பாதங்கள், அஸ்தம், சித்திரை 1,2-ஆம் பாதங்கள் )


மிருதுவான வார்த்தைகளால் நயமாக பேசக் கூடிய கன்னி ராசி நேயர்களே, ஜென்ம ராசியில் சூரியன், 1, 2-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் நீங்கள் எதிலும் நிதானத்தோடு செயல்பட வேண்டிய நேரம் ஆகும். நீங்கள் நினைப்பது ஒன்று நடப்பது ஒன்றாக இருக்கும். ஒரு சில நேரங்களில் உடன் இருப்பவர்களே தேவையில்லாத இடையூறுகளை ஏற்படுத்துவார்கள்.

எதிர்பார்த்த பண வரவுகள் தக்க நேரத்தில் கிடைக்காத காரணத்தினால் தேவையற்ற மனக்கவலை ஏற்படும். கணவன்- மனைவியிடையே விட்டுக் கொடுத்து செல்வது நல்லது. தொழில், வியாபாரத்தில் ஒரு சிலர் செய்யக்கூடிய செயல்களால் உங்களுக்கு கிடைக்க வேண்டிய நல்ல வாய்ப்புகள் கூட கடைசி நேரத்தில் தட்டிப் போகும். ஆடம்பர செலவுகளை சற்று குறைத்துக் கொள்வது, பிறருக்கு வாக்குறுதி கொடுக்காமல் இருப்பது நல்லது.

வேலையாட்களை சற்று அனுசரித்து செல்வதன் மூலம் வீண் பிரச்சினைகளை தவிர்க்க முடியும். அதிக முதலீடுகள் கொண்ட செயல்களில் பொறுமையை கடைப்பிடிக்க வேண்டும். உடல் ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக் கொள்வது, இயற்கை உணவுகளை உட்கொள்வது நன்மை தரும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைபளு கூடுதலாக இருப்பது மட்டுமில்லாமல் உடன் வேலை செய்பவர்கள் உங்களுக்கு தேவையற்ற வகையில் உங்கள் மீது வீண் பழிச்சொற்களை சொல்வார்கள்.

சூழலுக்கு ஏற்றவாறு சற்று பொறுமையோடு செயல்படுவது, மற்றவர்கள் விஷயத்தில் தலையிடாமல் இருப்பது நல்லது. பிரித்தியங்கரா தேவி வழிபாடு மேற்கொள்வது, சிவன் ஸ்தலங்களுக்கு சென்று வருவது நல்லது.

வெற்றி தரும் நாட்கள் – 5, 6, 7.
சந்திராஷ்டமம் – 30-09-2023 இரவு 09.10 மணி முதல் 02-10-2023 இரவு 12.15 மணி வரை.

 

துலாம் ( சித்திரை 3,4-ஆம் பாதங்கள், சுவாதி, விசாகம் 1,2,3-ஆம் பாதங்கள் )


பேச்சிலும் செயலிலும் முடிந்த வரை பிறர் மனதை புண்படுத்தாமல் செயல்படும் துலா ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு விரைய ஸ்தானமான 12-ம் வீட்டில் சூரியன் சஞ்சரிப்பதாலும், செவ்வாய்க்கிழமை முதல் ஜென்ம ராசியில் செவ்வாய் சஞ்சரிப்பதாலும் நீங்கள் எதிலும் சற்று பொறுமையோடு செயல்படுவது நல்லது.

திங்கட்கிழமை முதல் சுக்கிரன் லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் நெருங்கியவரின் உதவியானது சற்று சாதகமாக இருக்கும். பெண்கள் வழியில் உங்களுக்கு நல்ல ஆதரவு கிடைக்கும். குருபகவான் வக்ர கதியில் இருப்பதால் பணம் கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் மிகவும் சிக்கனத்தோடு செயல்படுவது நல்லது.

சுலபமாக முடிய வேண்டிய காரியங்கள் தடைப்பட்டு மன நிம்மதி குறைவை ஏற்படுத்தும். பங்காளியிடம் வீண் கருத்து வேறுபாடுகள் ஏற்படக்கூடிய நேரம் என்பதால் எதிலும் நிதானத்தோடு இருப்பது நல்லது. தொழில், வியாபாரத்தில் எவ்வளவு நெருக்கடி இருந்தாலும் சாமர்த்தியமாக செயல்பட்டு அடைய வேண்டிய லாபத்தை அடைவீர்கள்.

சில விஷயங்களை வேலையாட்களிடம் பகிர்ந்து கொள்ளாமல் இருப்பது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலை பளு சற்று கூடுதலாக இருக்கும். சிலர் சொல்லக்கூடிய வார்த்தைகளை நம்பி இருக்கும் வாய்ப்புகளை இழந்து விட வேண்டாம். தற்போது இருக்கக்கூடிய வாய்ப்புகளை சரியான முறையில் பயன்படுத்தி கொள்வதன் மூலம் விரைவில் நல்ல நிலையை அடைய முடியும். அதிகாரிகளிடம் பேசும் பொழுது பேச்சில் நிதானத்துடன் இருப்பது நல்லது. முருக வழிபாடு செய்வது, பைரவரை தரிசிப்பதன் மூலம் கெடுதிகள் குறையும்.

வெற்றி தரும் நாட்கள் – 1, 2.
சந்திராஷ்டமம் – 02-10-2023 இரவு 12.15 மணி முதல் 05-10-2023 காலை 06.58 மணி வரை.

 

விருச்சிகம் ( விசாகம் 4-ஆம் பாதம், அனுஷம், கேட்டை )


வசீகர தோற்றமும், உறுதியான பேச்சாற்றலும் கொண்ட விருச்சிக ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு 6-ல் ராகு, 11-ல் சூரியன் சஞ்சரிப்பதால் நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்கும். நீங்கள் மேற்கொள்ளக்கூடிய செயல்களுக்கு உடன் இருப்பவர்கள் ஆதரவு மிகச் சிறப்பாக இருக்கும்.

உங்கள் ராசிக்கு திங்கட்கிழமை முதல் 10–ல் சுக்கிரன், 11-ல் புதன் சஞ்சரிப்பதால் வரும் நாட்களில் மறக்க முடியாத இனிய நிகழ்வுகள் நடக்கும். பிள்ளைகள் வழியில் மகிழ்ச்சி தரக்கூடிய சுப செய்திகள் கிடைக்கும். குடும்பத்தில் தடைப்பட்ட சுப காரியங்கள் சுலபமாக கைகூடி மன மகிழ்ச்சி ஏற்படும். குருபகவான் வக்ர கதியில் இருப்பதால் கொடுக்கல்- வாங்கல் ரீதியாக இருந்து வந்த இடையூறுகள் எல்லாம் விலகி அனுகூலமான பலன்கள் ஏற்படும்.

பெரிய மனிதர்களுடைய ஆதரவு கிடைப்பதால் நீண்ட நாட்களாக தீர்க்க முடியாமல் இருந்து வந்த பிரச்சினைகளுக்கு தற்போது ஒரு நல்ல தீர்வு கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் உங்கள் பொருட்களுக்கு நல்ல விலை கிடைப்பது மட்டுமில்லாமல் தொழில் முன்னேற்றத்திற்காக நீங்கள் எதிர்பார்த்த உதவிகள் தக்க நேரத்தில் கிடைக்கும். ஒரு சிலருக்கு வெளியூர், வெளிநாடுகள் மூலம் மன மகிழ்ச்சி தரக்கூடிய இனிய செய்திகள் வரும்.

வேலைக்கு செல்பவர்களுக்கு பணியில் உயர்வு, விரும்பிய இடமாற்றங்கள் கிடைக்கக்கூடிய யோகம் வரும் நாட்களில் உண்டு. தேக ஆரோக்கியம் சிறப்பாக இருப்பதால் உங்களுக்கு இருந்த மருத்துவச் செலவுகள் எல்லாம் தற்போது குறையும். இந்த வாரத்தில் முருக வழிபாடு மேற்கொள்வது, மகாலட்சுமியை வழிபடுவது நன்மை தரும்.

வெற்றி தரும் நாட்கள் – 1, 2, 3, 4.
சந்திராஷ்டமம் – 05-10-2023 காலை 06.58 மணி முதல் 07-10-2023 மாலை 05.18 மணி வரை.

 

தனுசு ( மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம்)


எந்த முயற்சியில் ஈடுபட்டாலும் தளராது, அயராது முயன்று பாடுபடும் குணம் கொண்ட தனுசு ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு 10-ல் சூரியன், 10, 11-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் இருக்கும் இடத்தில் உங்களுடைய மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். உங்களுக்கு இருந்து வந்த கடந்த கால சோதனைகள் எல்லாம் முழுமையாக மறைந்து மன மகிழ்ச்சி தரக்கூடிய இனிய நிகழ்வுகள் நடக்கும்.

வரும் திங்கட்கிழமை முதல் 9-ல் சுக்கிரன், 10-ல் புதன் சஞ்சரிப்பதால் உங்களின் பொருளாதார நிலை மிக மிக நன்றாக இருந்து நீங்கள் மற்றவர்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை எளிதில் நிறைவேற்ற முடியும். தொழில், வியாபாரத்தில் பிறர் பார்த்து ஆச்சரியப்படும் அளவிற்கு நல்ல லாபம் கிடைத்து கௌரவமான நிலையினை எட்டுவீர்கள்.

வேலையாட்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பதால் நீண்ட நாட்கள் முடிக்க முடியாமல் இருந்து வந்த வேலைகளை கூட வரும் நாட்களில் சுலபமாக முடிக்க முடியும். உற்றார் உறவினர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். ஒரு சிலருக்கு பூர்வீக சொத்து வகையில் அனுகூலமான பலன்களை பெறக்கூடிய வாய்ப்புகள் உண்டு.

வேலைக்கு செல்பவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைப்பது மட்டுமில்லாமல் உங்களுக்கு வரவேண்டிய சம்பள பாக்கிகள் தற்போது கிடைத்து மன மகிழ்ச்சி உண்டாகும். குடும்பத்துக்கு தேவையான நவீனகரமான பொருட்களை வரும் நாட்களில் வாங்க முடியும். உங்களுக்கு இருந்த மறைமுக எதிர்ப்புகள் குறைந்து நிம்மதி ஏற்படும். தட்சிணாமூர்த்திக்கு நெய் தீபம் ஏற்றுவது, துர்க்கை அம்மன் வழிபாடு மேற்கொள்வது நன்மை தரும்.

வெற்றி தரும் நாட்கள் – 3, 4, 5, 6.
சந்திராஷ்டமம் – 07-10-2023 மாலை 05.18 மணி முதல் 10-10-2023 அதிகாலை 05.45 மணி வரை.

 

மகரம் ( உத்திராடம் 2,3,4-ஆம் பாதங்கள், திருவோணம், அவிட்டம் 1,2-ஆம் பாதங்கள்)


எல்லோருக்குமே மரியாதை கொடுக்கும் பண்பும் கள்ளம் கபடமின்றி ஆத்மார்த்தமாக பழகும் குணமும் கொண்ட மகர ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு 9-ல் சூரியன், வரும் செவ்வாய்க்கிழமை முதல் செவ்வாய் 10-ல் சஞ்சரிப்பதால் நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். குருபகவான் வக்ர கதியில் இருப்பதால் பொருளாதார ரீதியாக இருந்து வந்த தேக்கங்கள் எல்லாம் சற்று குறைந்து தாராள தன வரவுகள் ஏற்படும்.

கொடுக்கல்- வாங்கல் ரீதியாகவும் இருந்த பிரச்சினைகள் குறைந்து அனுகூலமான பலன்களை பெறுவீர்கள். சனி உங்கள் ராசிக்கு 2-ல் சஞ்சரிப்பதால் பேச்சில் சற்று பொறுமையோடு இருப்பது, கணவன்- மனைவியிடையே விட்டுக் கொடுத்து செல்வது நன்மையை தரும். தொழில், வியாபாரத்தில் ஒவ்வொரு காரியத்திலும் கவனத்தோடு செயல்படுவது, வேலையாட்களை அனுசரித்து செல்வது நல்லது.

கூட்டாளிகள் தேவையற்ற நெருக்கடிகளை ஏற்படுத்தக்கூடிய நேரம் என்பதால் ஒரு சில முக்கிய முடிவுகள் எடுக்கின்ற பொழுது அவர்களிடம் கலந்து ஆலோசித்து செயல்படுவது நல்லது. சட்ட ரீதியாக சிறு சிறு சிக்கல்கள் ஏற்படலாம் என்பதால் அரசு அதிகாரியிடம் பேசுகின்ற பொழுது பக்குவமாக நடந்து கொள்வது மிகவும் நல்லது.

உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கும் என்றாலும் உடன் வேலை செய்பவர்களுடைய ஒத்துழைப்பானது அவ்வளவு நன்றாக இருக்காது. குடும்ப விஷயங்களை வெளிநபர்களிடம் பேசாமல் இருப்பது உத்தமம். வண்டி, வாகனங்கள் மூலமாக எதிர்பாராத வகையில் வீண் செலவுகள் ஏற்படலாம். மகாலட்சுமி வழிபாடு மேற்கொள்வது, உடல் ஊனமுற்றவர்களுக்கு உங்களால் முடிந்த உதவிகளை செய்வது நன்மை தரும்.

வெற்றி தரும் நாட்கள் – 5, 6, 7.

 

கும்பம் ( அவிட்டம் 3,4-ஆம் பாதங்கள் சதயம், பூரட்டாதி 1,2,3-ஆம் பாதங்கள் )


எதையும் எளிதில் கிரகித்துக் கொள்ளும் ஆற்றலும் வாழ்க்கையில் எத்தனை துன்பங்கள் ஏற்பட்டாலும் அதை பொருட்படுத்தாத குணமும் கொண்ட கும்ப ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு 3-ல் ராகு, திங்கட்கிழமை முதல் 7-ல் சுக்கிரன் சஞ்சரிப்பதால் எதையும் எதிர்கொள்ளக்கூடிய பலம் உண்டாகும்.

தற்போது 3-ல் சஞ்சரிக்கக்கூடிய குருபகவான் வக்ர கதியில் இருப்பதால் பொருளாதார பிரச்சினைகள் விலகி பணவரவுகள் சாதகமாக இருக்கும். தற்போது 8-ல் சஞ்சரிக்கக்கூடிய செவ்வாய் வரும் செவ்வாய்க்கிழமை முதல் 9-ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் உங்களுக்கு உள்ள சின்ன சின்ன பிரச்சினைகள் எல்லாம் வரும் நாட்களில் விலகி மன நிம்மதி உண்டாகும்.

கணவன்- மனைவியிடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும். நல்ல நட்புகள் உங்களை நாடி வரும். பிறருக்கு தந்த வாக்குறுதிகளை எளிதில் நிறைவேற்ற முடியும். சூரியன் 8-ல் சஞ்சரிப்பதால் ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக் கொள்வது, நெருங்கியவர்களிடம் பேசுகின்ற போது சற்று பொறுமையோடு இருப்பது நன்மையை தரும்.

தொழில், வியாபாரத்தில் ஒரு சில நல்ல நிகழ்வுகள் நடந்து உங்களுக்கு நல்ல லாபங்கள் கிடைக்கும். கடந்த காலங்களில் நீங்கள் பட்ட கஷ்டத்துக்கு எல்லாம் தற்போது விடிவுகாலம் பிறக்கப் போகிறது என்று கூறினால் மிகையாகாது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு உங்களுடைய பணியில் மட்டும் நீங்கள் சற்று கவனத்தோடு செயல்பட்டால் வீண் பிரச்சினையிலிருந்து விலகி நிம்மதியுடன் நாட்களை நடத்த முடியும்.

அதிகாரியிடம் வீண் வாக்குவாதங்கள் செய்யாமல் இருக்க வேண்டிய நேரம் ஆகும். சிவன் ஸ்தலங்களுக்கு சென்று வருவது, சனி பகவானுக்கு சனிக்கிழமைகளில் எள் தீபம் ஏற்றுவது நன்மை தரும்.

வெற்றி தரும் நாட்கள் – 1, 2.

 

மீனம் ( பூரட்டாதி 4-ஆம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி )


அன்பும் சாந்தமும் அமைதியான தோற்றமும் கொண்டிருந்தாலும் நியாய அநியாயங்களை பயமின்றி எடுத்துரைக்கும் ஆற்றல் கொண்ட மீன ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு 7-ல் சூரியன், 7, 8-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் நீங்கள் எதிலும் சற்று நிதானத்தோடு செயல்பட வேண்டிய நேரம் ஆகும்.

ராசியாதிபதி குருபகவான் தற்போது வக்ர கதியில் இருப்பதால் தேவையில்லாத நெருக்கடிகள் ஏற்படும். சுலபமாக முடிய வேண்டிய காரியங்கள் தாமதமாகி மனக்கவலையை தரும். உங்கள் ராசிக்கு 2-ல் ராகு சஞ்சரிப்பதால் பேச்சில் சற்று பொறுமையோடு இருக்க வேண்டும். பிறருக்கு தந்த வாக்குறுதிகளை எளிதில் நிறைவேற்ற முடியாது.

தொழில், வியாபாரத்தில் நீங்கள் எவ்வளவு கடினமாக உழைத்தாலும் ஒரு சிலர் செய்யக்கூடிய செயல்களால் உங்களுக்கு கிடைக்க வேண்டிய லாபங்கள் தடைப்படும். வேலையாட்களை அனுசரித்து செல்வது நல்லது. உங்களுடைய கூட்டாளிகள் உங்களுக்கு வீண் பிரச்சினைகளை ஏற்படுத்துவார்கள்.

சட்ட ரீதியாக சிறு சிறு சிக்கல்கள் ஏற்படக்கூடிய நேரம் என்பதால் உங்களுடைய தொழில் தொடர்பான கணக்கு வழக்குகளை சரிவர பராமரித்துக் கொள்வது நல்லது. வெளியூர் பயணங்களை தள்ளி வைப்பது மிகவும் உத்தமம். உத்தியோகத்தில் இருப்பவர்கள் உங்களுடைய வேலையில் மட்டும் சற்று கவனத்தோடு இருக்க வேண்டும்.

உடன் வேலை செய்பவர்கள் பேச்சைக் கேட்காமல் எதிலும் பொறுமையோடு இருப்பது, அதிகாரியிடம் வீண் வாக்குவாதங்கள் செய்யாமல் இருப்பது நல்லது. தேவையில்லாத மறைமுக எதிர்ப்புகள் ஏற்படலாம் என்பதால் மற்றவரிடம் வீண் பேச்சை குறைப்பது உத்தமம். சிவன் ஸ்தலங்களுக்கு சென்று வருவது, முருக வழிபாடு மேற்கொள்வது நன்மை தரும்.

வெற்றி தரும் நாட்கள் – 3, 4.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *