
வார ராசிப்பலன்
செப்டமபர் 17 முதல் 23 வரை 2023
ஆவணி 31 முதல் புரட்டாசி 6 வரை
இவ்வார சுப முகூர்த்த நாட்கள்
17.09.2023 ஆவணி 31 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை துவிதியை திதி ஹஸ்தம் நட்சத்திரம் சித்தயோகம் காலை 10.00 மணி முதல் 11.30 மணிக்குள் விருச்சிக இலக்கினம். வளர்பிறை
18.09.2023 புரட்டாசி 01 ஆம் தேதி திங்கட்கிழமை திரிதியை திதி சித்திரை நட்சத்திரம் சித்தயோகம் காலை 09.00 மணி முதல் 10.30 மணிக்குள் விருச்சிக இலக்கினம். வளர்பிறை
21.09.2023 புரட்டாசி 04 ஆம் தேதி வியாழக்கிழமை சஷ்டி திதி அனுஷம் நட்சத்திரம் சித்தயோகம் காலை 10.00 மணி முதல் 11.00 மணிக்குள் விருச்சிக இலக்கினம். வளர்பிறை

மேஷம் ( அஸ்வினி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம் )
தன்னுடைய வாக்கு வன்மையை பயன்படுத்தி தான் சொல்லும் சொல்லே சரி என வாதிடும் குணம் கொண்ட மேஷ ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு 6–ல் சூரியன், செவ்வாய் சஞ்சாரம் செய்வதால் உங்களது பலமும், வலிமையும் அதிகரிக்கும். 4-ல் சுக்கிரன், 5-ல் புதன் சஞ்சரிப்பதால் நவீனகரமான பொருட்களை வாங்கக்கூடிய அதிர்ஷ்டங்கள் உண்டு. பணவரவுகள் சிறப்பாக இருந்து சகல சௌபாக்கியங்களையும் அடையக்கூடிய வாய்ப்புகள் இருக்கிறது.
உங்களுக்கு இருந்த மறைமுக எதிர்ப்புகள் எல்லாம் இருந்த இடம் தெரியாமல் வரும் நாட்களில் மறையும். பிள்ளைகள் வழியில் மகிழ்ச்சி தரக்கூடிய இனிய நிகழ்வுகள் நடக்கும். தொழில், வியாபாரத்தில் பிறர் பார்த்து ஆச்சரியப்படும் அளவுக்கு நல்ல லாபத்தை ஈட்டக் கூடிய வாய்ப்புகள் உண்டு. தொழில் முன்னேற்றத்திற்காக வெளிநபரிடம் நீங்கள் எதிர்பார்த்த பொருளாதார உதவிகள் கிடைக்கும். அரசு அதிகாரிகள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள்.
உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருப்பதால் எதிலும் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். வயது மூத்தவர்களுடைய ஆதரவு கிடைப்பதால் நீண்ட நாட்களாக தீர்க்க முடியாமல் இருந்து வந்த பிரச்சினைகளுக்கு தற்போது தீர்வு கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு விரும்பிய இட மாற்றங்கள் கிடைத்து மன மகிழ்ச்சி உண்டாகும். புதிய வாய்ப்பு எதிர்பார்த்தவர்களுக்கு வெளியூர் மூலமாக அனுகூலமான பலன்கள் கிடைக்கும். துர்க்கை அம்மனுக்கு தீபம் ஏற்றுவது, விஷ்ணு வழிபாடு மேற்கொள்வது நல்லது.
வெற்றி தரும் நாட்கள் – 17, 18, 19.
சந்திராஷ்டமம் – 20-09-2023 காலை 08.45 மணி முதல் 22-09-2023 மாலை 03.35 மணி வரை.

ரிஷபம் ( கிருத்திகை 2,3,4-ஆம் பாதங்கள் ரோகிணி, மிருகசீரிடம் 1,2-ஆம் பாதங்கள் )
பிறருக்கு உதவி செய்வதில் தன்னலம் கருதாது செயலாற்றும் ரிஷப ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு சுகஸ்தானமான 4-ல் புதன், ருண ரோக ஸ்தானமான 6-ல் கேது சஞ்சரிப்பதால் எதிர்நீச்சல் போட்டாவது அடைய வேண்டிய இலக்கை அடைவீர்கள்.
பொருளாதார ரீதியாக நெருக்கடிகள் இருந்தாலும் குரு, சனி வக்ர கதியில் இருப்பதால் எதிர்பாராத பண வரவுகள் ஏற்பட்டு உங்களுடைய அனைத்து தேவைகளும் பூர்த்தியாக கூடிய இனிய நாட்களாக வருகின்ற நாட்கள் இருக்கும். குடும்பத்தில் தடைப்பட்ட சுபகாரிய முயற்சிகளை தற்போது மேற்கொண்டால் சாதகமான பலன்கள் ஏற்படும். உறவினர்கள் மூலம் இருந்து வந்த இடையூறுகள் எல்லாம் தற்போது விலகி ஒரு சுமுகமான நிலை ஏற்படும். தொழில், வியாபாரத்தில் உங்களுக்கு இருந்த பிரச்சினைகள் எல்லாம் தற்போது குறைந்து படிப்படியான வளர்ச்சியை அடைவீர்கள்.
உங்களுக்கு இருந்த போட்டிகள் குறைந்து நல்ல லாபத்தை ஈட்டக் கூடிய வாய்ப்புகள் உண்டு. திறமை வாய்ந்த வேலையாட்கள் உங்கள் தொழிலில் இணைவார்கள். கொடுக்கல்- வாங்கலில் லாபகரமான பலன்கள் ஏற்படும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணியில் சிறப்பாக செயல்பட முடியும். அதிகாரிகள் ஆதரவு சிறப்பாக இருப்பதால் கடினமான பணிகளை கூட சுலபமாக செய்து முடிக்க கூடிய பலம் உண்டாகும்.
நீண்ட நாட்களாக நீங்கள் எண்ணிய காரியங்கள் தற்போது கைகூடி குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். மகாவிஷ்ணு வழிபாடு மேற்கொள்வது, பிரித்தியங்கரா தேவி வழிபடுவது கெடுதியை குறைக்கும்.
வெற்றி தரும் நாட்கள் – 18, 19, 20, 21.
சந்திராஷ்டமம் – 22-09-2023 மாலை 03.35 மணி முதல் 24-09-2023 இரவு 07.18 மணி வரை.

மிதுனம் ( மிருகசீரிடம் 3,4-ஆம் பாதங்கள், திருவாதிரை, புனர்பூசம் 1,2,3-ஆம் பாதங்கள் )
சற்று குழப்பவாதியாக இருந்தாலும் எந்தவித கடினமான வேலைகளையும் பொறுப்புடன் செய்து முடிக்கும் ஆற்றல் கொண்ட மிதுன ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு சுக ஸ்தானமான 4-ஆம் வீட்டில் மாதகோள் என வர்ணிக்கப்படக்கூடிய சூரியன், செவ்வாயுடன் இணைந்து சஞ்சரிப்பதால் உங்களுக்கு தேவையற்ற அலைச்சல்கள் ஏற்படும். சுலபமாக முடிய வேண்டிய காரியங்கள் தாமதமாகும்.
இருப்பதை அனுபவிக்க இடையூறுகள் உண்டாகும். உடன் இருப்பவர்களே உங்களுடைய அமைதியை குறைப்பார்கள். இந்த தருணத்தில் குரு, சனி வக்ர கதியில் இருப்பதால் எதிர்பார்த்த பண வரவுகள் கிடைப்பதில் தேவையற்ற தடங்கல்கள் ஏற்படும். உங்கள் ராசிக்கு 2-ல் சுக்கிரன் சஞ்சரிப்பதாலும் லாப ஸ்தானத்தில் ராகு சஞ்சரிப்பதாலும் எதிர்பாராத உதவிகள் கிடைத்து உங்கள் தேவைகள் பூர்த்தியாகும்.
ஆடம்பர செலவுகளை குறைத்துக்கொண்டால் இருக்கக்கூடிய நெருக்கடிகளை சமாளிக்க முடியும். தொழில், வியாபாரத்தில் ஒவ்வொரு செயலிலும் சற்று கவனத்தோடு இருந்தால் இருக்கும் நெருக்கடிகளை சமாளித்து அடைய வேண்டிய இலக்கை அடைய முடியும். வேலையாட்களை அனுசரித்து செல்வதன் மூலம் ஒரு சில ஆதாயங்கள் கிடைக்கும். வேலைக்கு செல்பவர்கள் உங்கள் பணியில் மட்டும் நிதானத்தோடு செயல்பட்டால் நற்பலனை அடைய முடியும்.
மேலதிகாரிகள் சொல்லும் வார்த்தைக்கு கட்டுப்பட்டு நடந்தால் தற்போதைய நிலையினை சமாளிக்க முடியும். சிவன் ஸ்தலங்களுக்கு சென்று வருவது, முருக வழிபாடு மேற்கொள்வது மிகவும் நல்லது.
வெற்றி தரும் நாட்கள் – 20, 21, 23.

கடகம் ( புனர்பூசம் 4-ஆம் பாதம், பூசம், ஆயில்யம் )
எளிதில் உணர்ச்சி வசப்படக்கூடியவர்களாக இருந்தாலும் எதையும் முன்கூட்டியே அறிந்து செயல்படும் ஆற்றல் கொண்ட கடக ராசி நேயர்களே, ஜென்ம ராசியில் சுக்கிரன், 2-ல் புதன் சஞ்சரிப்பதால் உங்களது செல்வம், செல்வாக்கு, பெயர், புகழ் மேலோங்க கூடிய நாட்களாக வருகின்ற நாட்கள் இருக்கும்.
உங்கள் ராசிக்கு முயற்சி ஸ்தானமான 3-ல் மாத கோள் என வர்ணிக்கப்படக்கூடிய சூரியன், செவ்வாய் சேர்க்கை பெற்று சஞ்சரிப்பதால் நீங்கள் எந்த செயலில் ஈடுபட்டாலும் அதில் பரிபூரண வெற்றியினை ஈட்டக் கூடிய வாய்ப்புகள் உண்டு. பிறருக்கு தந்த வாக்குறுதிகளை எளிதில் நிறைவேற்ற முடியும். உங்கள் ராசிக்கு 8-ல் சஞ்சரிக்க கூடிய சனி தற்போது வக்ர கதியில் இருப்பதால் உங்களுக்கு இருந்து வந்த வீண் மருத்துவ செலவுகள் எல்லாம் குறைந்து சேமிக்கும் அளவிற்கு சாதகமான பலன்கள் ஏற்படும். கணவன்- மனைவியிடையே இருந்த கருத்து வேறுபாடுகள் எல்லாம் குறைந்து ஒற்றுமை நன்றாக இருக்கும்.
தொழில் வியாபாரத்தில் தேக்க நிலை விலகி நல்ல லாபத்தை ஈட்டக் கூடிய வாய்ப்புகள் இருக்கிறது. வேலையாட்கள் ஒத்துழைப்பு சிறப்பாக இருப்பதால் வாடிக்கையாளர்களுடைய எண்ணங்களை பூர்த்தி செய்து தொழிலை அபிவிருத்தி செய்ய முடியும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் பணியில் சிறப்பாக செயல்பட்டு நல்ல பெயர் எடுக்கக்கூடிய நாட்களாக வருகின்ற நாட்கள் இருக்கும்.
உங்களுக்கு இருந்த வேலைபளு குறைவதுடன் எதிர்பார்த்த உயர்வுகளும் கிடைப்பதற்கான வாய்ப்புகள் அமையும். மகாலட்சுமி வழிபாடு மேற்கொள்வது, துர்க்கை அம்மனுக்கு ராகு காலத்தில் தீபம் ஏற்றுவது நன்மை தரும்.
வெற்றி தரும் நாட்கள் – 17, 23.

சிம்மம் ( மகம், பூரம். உத்திரம் 1-ஆம் பாதம் )
பிறர் பழிச் சொற்களுக்கு செவி சாய்க்காமல் தனது விடாமுயற்சியால் பல சாதனைகளைச் செய்யும் ஆற்றல் கொண்ட சிம்ம ராசி நேயர்களே, ஜென்ம ராசியில் புதன், 3–ல் கேது சஞ்சரிப்பதால் எதிலும் தைரியத்தோடு செயல்படுவீர்கள். நல்ல வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும். பெண்கள் மூலமாக கூட எதிர்பாராத உதவிகளை அடையக்கூடிய வாய்ப்புகள் உண்டு.
ராசியாதிபதி சூரியன், செவ்வாயுடன் இணைந்து 2-ல் சஞ்சரிப்பதால் பேச்சில் சற்று பொறுமையோடு இருப்பது, கணவன்- மனைவியிடையே விட்டுக் கொடுத்து செல்வது நல்லது. நீங்க நல்லதாக பேசினாலும் மற்றவர்கள் தவறாக எடுத்துக் கொள்ளக்கூடிய நேரம் என்பதால் ஒவ்வொரு காரியத்திலும் கவனத்தோடு இருப்பது நல்லது. 9-ல் சஞ்சரிக்கக்கூடிய குரு பகவான் தற்போது வக்ர கதியில் இருப்பதால் பணவரவுகள் நன்றாக இருந்தாலும் ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வது உத்தமம்.
தொழில், வியாபாரத்தில் சிறுசிறு பிரச்சினை இருந்தாலும் உங்கள் தனித் திறமையால் எதையும் சமாளிக்க கூடிய பலம் உண்டாகும். கூட்டாளிகள் ஆதரவு சிறப்பாக இருப்பதால் நல்ல லாபத்தை ஈட்டக் கூடிய வாய்ப்புகள் உண்டு. கொடுக்கல்- வாங்கலில் மட்டும் சற்று கவனமுடன் செயல்பட்டால் வீண் இழப்புகள் ஏற்படாமல் தவிர்க்க முடியும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மற்றவர்களால் முடிக்க முடியாத பணிகளை கூட நீங்கள் தலையிட்டு சிறப்பாக செய்து முடிப்பீர்கள்.
உங்கள் மீது இருந்த பழிச் சொற்கள் எல்லாம் முழுமையாக விலகி மன நிம்மதியுடன் எதிலும் செயல்பட முடியும். சக ஊழியர்களிடம் பேசுகின்ற பொழுது மட்டும் சற்று பொறுமையை கடைப்பிடிப்பது நல்லது. நீங்கள் தட்சிணாமூர்த்தி வழிபாடு மேற்கொள்வது, சூரிய நமஸ்காரம் செய்வதன் மூலம் அனுகூலங்களை எட்ட முடியும்.
வெற்றி தரும் நாட்கள் – 18, 19.

கன்னி ( உத்திரம் 2,3,4-ஆம் பாதங்கள், அஸ்தம், சித்திரை 1,2-ஆம் பாதங்கள் )
எவ்வளவு அவசரமான காரியமாக இருந்தாலும் மற்றவர்களின் சௌகர்யங்களை ஆராய்ந்து செயல்படும் கன்னி ராசி நேயர்களே, ஜென்ம ராசியில் சூரியன், செவ்வாய் சஞ்சரிப்பதால் உங்களது முன்கோபத்தை குறைத்துக் கொண்டு எதிலும் சற்று பொறுமையோடு இருப்பது நல்லது.
உடன் இருப்பவர்களிடம் வீண் கருத்து வேறுபாடுகள் ஏற்படக்கூடிய நேரம் என்பதால் பேச்சில் பொறுமையோடு இருந்தால் வீண் பிரச்சினைகளை தவிர்க்கலாம். உங்கள் ராசிக்கு 8-ல் சஞ்சரிக்கக்கூடிய குரு தற்போது வக்ர கதியில் இருப்பதால் பணவரவில் இருந்து வந்த நெருக்கடிகள் சற்று குறைந்து உங்கள் எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும். லாப ஸ்தானமான 11-ஆம் வீட்டில் சுக்கிரன் சஞ்சரிப்பதால் எதிர்பாராத அனுகூலங்களை பெறுவீர்கள். சுப காரிய முயற்சியில் இருந்து வந்த தடைகள் விலகி நல்லது நடக்கக்கூடிய அனுகூலங்கள் வரும் நாட்களில் உண்டு. தொழில், வியாபாரத்தில் உங்கள் பொருட்களுக்கு நல்ல விலை கிடைத்து அதிகப்படியான ஆதாயங்களை பெறக்கூடிய வாய்ப்புகள் அமையும்.
நீண்ட நாட்களாக நீங்கள் செயல்படுத்த வேண்டும் என்று எண்ணிய காரியங்களை தற்போது செயல்படுத்தினால் அனுகூலமான பலன்களைப் பெற முடியும். உத்தியோக ரீதியாக பணியில் நெருக்கடி இருந்தாலும் உங்கள் தனித் திறமையால் எதையும் சமாளிப்பீர்கள். ஒருசிலருக்கு நிலுவையில் இருந்த சம்பள பாக்கிகள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் அதிகம். அதிகாரியிடம் பேசுகின்ற போது நிதானத்தோடு இருப்பது நல்லது. முருக வழிபாடு மேற்கொள்வது, மகாவிஷ்ணு வழிபாடு செய்வது நல்லது.
வெற்றி தரும் நாட்கள் – 17, 20, 21, 22.

துலாம் ( சித்திரை 3,4-ஆம் பாதங்கள், சுவாதி, விசாகம் 1,2,3-ஆம் பாதங்கள் )
தராசு சிறியதாக இருந்தாலும் எவ்வாறு துல்லியமாக எடைபோட உதவுகிறதோ அதை போல மற்றவர்களின் குணங்களை எடைபோட்டு பழகும் ஆற்றல் கொண்ட துலா ராசி நேயர்களே, ராசியாதிபதி சுக்கிரன் 10-ல் சாதகமாக சஞ்சரிப்பதாலும், புதன் லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதாலும் உங்கள் எதிர்பார்ப்புகள் நிறைவேறி மன மகிழ்ச்சி உண்டாகும். சூரியன், செவ்வாய் 12-ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் எதிர்பாராத வீண் செலவுகள் ஏற்பட வாய்ப்பு இருப்பதால் ஆடம்பர செலவுகளை குறைத்துக்கொள்வது நல்லது.
குரு தற்போது வக்ர கதியில் இருப்பதால் அதிக முதலீடுகள் கொண்ட செயல்களை தற்காலிகமாக தள்ளி வைப்பது உத்தமம். தொழில், வியாபாரத்தில் உங்கள் பொருட்களுக்கு சிறப்பான விலை கிடைப்பதால் நல்ல லாபத்தை ஈட்டக் கூடிய வாய்ப்புகள் உண்டு. பெரிய மனிதர்களுடைய ஆதரவு கிடைப்பதால் தொழிலில் ஒரு சில ஆதாயங்களை பெற முடியும். தொழில் தொடர்பான விஷயங்களை வெளி நபர்களிடம் பகிர்ந்து கொள்ளாமல் இருப்பது நல்லது. கணவன்- மனைவி இடையே ஒன்றுமே இல்லாத விஷயத்திற்கு கூட தேவையற்ற கருத்து வேறுபாடுகள் ஏற்படக்கூடிய நேரம் என்பதால் ஒருவருக்கொருவர் அனுசரித்து செல்வது உத்தமம்.
வேலைக்கு செல்பவர்களுக்கு பணியில் சிறப்பான நிலை ஏற்படும். சக ஊழியர்கள் உங்கள் மீது வீண் பழிச் சொற்களை கூறினாலும் அனைத்து வித சிக்கலையும் எளிதில் சமாளித்து உங்கள் பணியில் நீங்கள் ஒரு உயர்வான நிலையினை எட்டுவீர்கள். உணவு விஷயத்தில் கட்டுப்பாடோடு இருந்தால் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். முருக வழிபாடு செய்வது, சூரிய நமஸ்காரம் மேற்கொள்வது மூலம் வீண் சிக்கல்களை தவிர்க்க முடியும்.
வெற்றி தரும் நாட்கள் – 18, 19, 23.

விருச்சிகம் ( விசாகம் 4-ஆம் பாதம், அனுஷம், கேட்டை )
என்னதான் தோல்வியை சந்தித்தாலும் தன்னுடைய முயற்சியில் மனம் தளராமல் பாடுபட்டு வெற்றி பெறும் விருச்சிக ராசி நேயர்களே, உங்கள் ராசியாதிபதி செவ்வாய், சூரியன் சேர்க்கைப் பெற்று லாப ஸ்தானமான 11-ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் நீங்கள் எல்லா வகையிலும் ஒரு வளமான பலன்களை பெறுவீர்கள். சுக்கிரன் பாக்கிய ஸ்தானத்திலும், புதன் 10-லும் சஞ்சரிப்பதால் மறக்க முடியாத இனிய நிகழ்வுகள் நடக்கும். குரு வக்ர கதியில் சஞ்சரிப்பதால் பணவரவுகள் மிக மிக நன்றாக இருந்து உங்களுக்கு இருந்த கடன் பிரச்சினைகள் எல்லாம் விலகி ஏற்ற மிகுந்த பலன்களை பெறுவீர்கள்.
பிறருக்கு தந்த வாக்குறுதிகளை எளிதில் நிறைவேற்றக்கூடிய ஒரு அனுகூலமான நிலை உண்டாகும். தொழில், வியாபாரத்தில் சந்தை சூழ்நிலை உங்களுக்கு சாதகமாக இருப்பதால் அதிகப்படியான லாபங்களை ஈட்டக் கூடிய வாய்ப்புகள் உண்டு. வேலையாட்கள் உங்களுக்கு உறுதுணையாக இருப்பதால் புதிய ஆர்டர்களை பெற்று தொழிலை அபிவிருத்தி செய்ய முடியும். சனி பகவான் தற்போது வக்ர கதியில் இருப்பதால் கடந்த காலங்களில் உங்களுக்கு இருந்து வந்த அலைச்சல், டென்ஷன் எல்லாம் தற்போது குறைந்து சுமுகமான சூழ்நிலை உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். விரும்பிய இடம் மாற்றங்களை பெற்று மகிழ்ச்சி அடையக் கூடிய யோகம் ஏற்படும்.
பணியில் சிறப்பாக செயல்பட்டு அதிகாரியிடம் நல்ல பெயர் எடுக்கக் கூடிய ஒரு அதிர்ஷ்டங்கள் வரும் நாட்களில் உண்டு. மகாலட்சுமி வழிபாடு மேற்கொள்வது, லட்சுமி நரசிம்மரை தரிசிப்பதன் மூலம் கஷ்டங்கள் குறையும்.
வெற்றி தரும் நாட்கள் – 17, 20, 21, 22.

தனுசு ( மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம்)
எப்பொழுதும் நல்ல சுறுசுறுப்புடன் செயல்பட்டு எடுக்கும் காரியங்களை சிறப்புடன் செய்து முடிக்கும் ஆற்றலும், எல்லோருக்கும் மரியாதை கொடுக்கும் பண்பும் கொண்ட தனுசு ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு பாக்கிய ஸ்தானமான 9-ல் புதன் சஞ்சரிப்பதும், தொழில் ஸ்தானமான 10-ல் சூரியன், செவ்வாய் சஞ்சரிப்பதும் உன்னதமான அமைப்பு என்பதால் நல்ல வாய்ப்புகள் உங்களை நாடி வரும். பண வரவுகள் சிறப்பாக இருப்பதால் அனைத்து குடும்ப தேவைகளும் பூர்த்தியாவது மட்டும் இல்லாமல் உங்களுக்கு இருந்த கடன் பிரச்சினைகள் எல்லாம் படிப்படியாக குறையும்.
உடல் ஆரோக்கியம் திருப்திகரமாக இருப்பதால் எதிலும் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். தொழில், வியாபாரத்தில் புதிய யுக்திகளை பயன்படுத்தி அடைய வேண்டிய லாபத்தை அடைவீர்கள். அரசு மூலம் நீங்கள் எதிர்பார்த்த உத்தரவுகளை வரும் நாட்களில் பெற முடியும். வேலையாட்களுடைய ஆதரவானது சிறப்பாக இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணியில் ஒரு கௌரவமான நிலையும், நீண்ட நாட்களாக நீங்கள் எதிர்பார்த்த பதவி உயர்வுகள் கிடைக்கக்கூடிய அதிர்ஷ்டங்களும் வரும் நாட்களில் உண்டு.
ஒரு சிலருக்கு விரும்பிய இடம் மாற்றங்கள் கிடைத்து குடும்பத்துடன் இணையக்கூடிய வாய்ப்புகள் உண்டாகும். குரு வக்ர கதியில் இருப்பதால் ஆடம்பர செலவுகளை சற்று குறைத்துக்கொள்வது நல்லது. உறவினர்கள் ஆதரவு மகிழ்ச்சிகரமாக இருக்கும். தட்சிணாமூர்த்தி வழிபாடு மேற்கொள்வது, துர்க்கை அம்மனுக்கு தீபம் ஏற்றுவது நன்மையை தரும்.
வெற்றி தரும் நாட்கள் – 17, 18, 19, 23.

மகரம் ( உத்திராடம் 2,3,4-ஆம் பாதங்கள், திருவோணம், அவிட்டம் 1,2-ஆம் பாதங்கள்)
மற்றவர்களின் தேவையற்ற பேச்சுக்களால் மனம் புண்பட்டாலும் அதனை வெளிக்காட்டிக் கொள்ளாமல் அனைவரிடமும் அன்பாக பழகும் மகர ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு சமசப்தம ஸ்தானமான 7-ல் சுக்கிரன் சஞ்சரிப்பதாலும், இது நாள் வரை 8-ல் சஞ்சரித்த சூரியன் இனி 9-ல் செவ்வாய் சேர்க்கைப் பெற்று சஞ்சரிப்பதாலும் உங்களுக்கு உள்ள நெருக்கடிகள் எல்லாம் படிப்படியாக குறைந்து ஏற்ற மிகுந்த பலன்களை பெறுவீர்கள். குறிப்பாக உங்களுக்கு இருந்த உடம்பு பாதிப்புகள் விலகி எதிலும் சுறுசுறுப்பாக செயல்பட முடியும். கணவன்- மனைவியிடையே அன்யோன்யம் மிக சிறப்பாக இருக்கும்.
தற்போது குரு, சனி வக்ர கதியில் இருப்பதால் உங்களுக்கு பணவரவுகள் திருப்திகரமாக இருந்து குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். நீண்ட நாட்களாக நிலவிய நெருக்கடிகள் சற்று குறைந்து அனுகூலமான பலன்களை பெற முடியும். தொழில், வியாபாரத்தில் இருந்த இக்கட்டான நிலைகள் விலகி தற்போது நல்ல லாபத்தை ஈட்டக் கூடிய வாய்ப்புகள் உண்டு. வேலையாட்களால் இருந்து வந்த தொந்தரவுகள் விலகும். பிறருக்கு தந்த வாக்குறுதிகளை குறித்த நேரத்தில் காப்பாற்ற முடியும். வேலைக்கு செல்பவர்களுக்கு நீங்கள் எடுக்கக்கூடிய முயற்சிகள் எளிதில் வெற்றி அடையும். உங்களுக்கு ஒதுக்கப்பட்ட பணிகளை குறித்த நேரத்தில் செய்து முடித்து அதிகாரியிடம் நல்ல பெயர் எடுக்கக் கூடிய வாய்ப்புகள் உண்டு.
ஒரு சிலருக்கு பயணங்கள் மேற்கொள்ளக்கூடிய வாய்ப்புகளும் அதன் மூலம் அனுகூலங்களும் உண்டாகும். மகாவிஷ்ணுவை வழிபடுவது, பைரவர் வழிபாடு மேற்கொள்வது நன்மையை தரும்.
வெற்றி தரும் நாட்கள் – 18, 19, 20, 21, 22.

கும்பம் ( அவிட்டம் 3,4-ஆம் பாதங்கள் சதயம், பூரட்டாதி 1,2,3-ஆம் பாதங்கள் )
தவறு செய்பவர்களை தயவு தாட்சண்யம் பாராமல் கண்டிக்கும் குணமும், தன்னிடம் பழகுபவர்களை துல்லியமாக எடை போடும் ஆற்றலும் கொண்ட கும்ப ராசி நேயர்களே, ஜென்ம ராசியில் சனி சஞ்சரிப்பதாலும், அஷ்டம ஸ்தானமான 8-ல் சூரியன், செவ்வாய் சஞ்சரிப்பதாலும் எந்த ஒரு காரியத்திலும் யோசித்து செயல்பட வேண்டிய நேரமாகும். சுலபமாக முடிய வேண்டிய காரியங்கள் தாமதமாகும். குடும்பத்தில் கணவன்- மனைவி இடையே தேவையற்ற கருத்து வேறுபாடுகள், உறவினர்களிடம் மனஸ்தாபம் ஏற்படும் காலமாகும். ஒவ்வொரு காரியத்திலும் பொறுமையோடு செயல்பட வேண்டும்.
உங்கள் ராசிக்கு 3-ல் சஞ்சரிக்க கூடிய குரு தற்போது வக்ர கதியில் இருப்பதாலும், 3-ல் ராகு சஞ்சரிப்பதாலும் எந்தவித நெருக்கடிகள் இருந்தாலும் தைரியத்தோடு எதிர்கொள்ளக்கூடிய பலம் ஏற்படும். பண வரவுகள் சரியான நேரத்தில் வந்தடைந்து நீங்கள் பிறருக்குத் தந்த வாக்குறுதிகளை காப்பாற்ற முடியும். தொழில், வியாபாரத்தில் சிறு சிறு மறைமுக எதிர்ப்புகள் இருந்தாலும் சூழ்நிலைக்கு தக்கவாறு சிறப்பாக செயல்பட்டு எடுத்த காரியங்களை குறித்த நேரத்தில் செய்து முடித்து விடுவீர்கள்.
வேலையாட்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பதால் மன நிம்மதி உண்டாகும். வேலைக்கு செல்பவர்களுக்கு வேலைபளு இருந்தாலும் உங்கள் உழைப்புக்கான ஆதாயங்கள் கண்டிப்பாக கிடைக்கும். அதிகாரியிடம் வீண் வாக்குவாதங்கள் செய்யாமல் இருப்பது மிகவும் நல்லது. இந்த வாரத்தில் முருக வழிபாடு மேற்கொள்வது, சிவன் ஸ்தலங்களுக்கு சென்று வருவது நன்மையை தரும்.
வெற்றி தரும் நாட்கள் – 20, 21, 22, 23.
சந்திராஷ்டமம் – 15-09-2023 பகல் 11.35 மணி முதல் 17-09-2023 இரவு 11.08 மணி வரை.

மீனம் ( பூரட்டாதி 4-ஆம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி )
சமயத்திற்கு ஏற்றார்போல மாறிவிடும் சுபாவம் இருக்கும் என்றாலும் துர்போதனைகளுக்கும், கெட்ட சகவாசங்களுக்கும் எளிதில் அடிமையாகாத மீன ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு 2—ல் ராகு, 7-ல் சூரியன், செவ்வாய் சஞ்சரிப்பதால் பேச்சில் பொறுமையோடு இருப்பது, நெருங்கியவர்களை அனுசரித்து செல்வது நல்லது. குடும்பத்தில் தேவையற்ற நெருக்கடிகள் உண்டாகும்.
பங்காளியிடம் கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம் என்பதால் சூழலுக்கு தக்கவாறு பொறுமையோடு செயல்படுவது உத்தமம். உங்கள் ராசிக்கு 5-ல் சுக்கிரன், 12-ல் சஞ்சரிக்க கூடிய சனி வக்ர கதியில் சஞ்சரிப்பதால் எதையும் எதிர்கொள்ளக்கூடிய திறமை உங்களிடம் இருக்கும். பெண்கள் வழியில் அனுகூலமான பலன்களை அடையக் கூடிய வாய்ப்புகள் உண்டு. தொழில், வியாபாரத்தில் வேலையாட்கள் ஒத்துழைப்பு சாதகமாக இருப்பதால் நல்ல வாய்ப்புகளை பெறக்கூடிய யோகங்கள் உண்டு.
குரு வக்ர கதியில் சஞ்சரிப்பதால் கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் கவனத்தோடு இருப்பது, அதிக முதலீடுகள் கொண்ட செயல்களை தற்காலிகமாக தவிர்ப்பது மிகவும் நல்லது. உத்தியோக ரீதியாக பார்க்கின்ற பொழுது நல்ல வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும் என்றாலும் சக ஊழியரிடம் பேசுகின்ற பொழுது பொறுமையோடு பேசுவது உத்தமம். ஒரு சிலருக்கு தேவையற்ற அவப்பெயர்களை எதிர்கொள்ளக்கூடிய நேரம் என்பதால் சூழலுக்கு ஏற்றவாறு கவனத்தோடு இருப்பது நல்லது.
விநாயகர் வழிபாடு மேற்கொள்வதும், துர்க்கை அம்மனுக்கு தீபம் ஏற்றுவதும் கெடுதிகளை குறைக்கும்.
வெற்றி தரும் நாட்கள் – 17, 22.
சந்திராஷ்டமம் – 17-09-2023 இரவு 11.08 மணி முதல் 20-09-2023 காலை 08.45 மணி வரை.

