வார இறுதி நாட்கள், சுபமுகூர்த்த நாளை முன்னிட்டு நாளை 600 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்: போக்குவரத்துக் கழகம் அறிவிப்பு!

Advertisements

சென்னை: வார இறுதி நாட்கள், சுபமுகூர்த்த நாளை முன்னிட்டு நாளை 600 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது. சென்னையில் இருந்தும், பிற இடங்களில் இருந்தும் கூடுதல் பயணிகள் தமிழ்நாடு முழுவதும் பயணம் செய்ய ஏற்பாடு செய்துள்ளனர்.

வருகின்ற 22/07/2023 (சனிக்கிழமை). 23/07/2023 (ஞாயிறு) விடுமுறை மற்றும் 24/07/2023 (திங்கள்) சுபமுகூர்த்த நாள் ஆகிய நாட்களை முன்னிட்டு. 21/07/2023 அன்று சென்னையிலிருந்தும் மற்றும் பிற இடங்களிலிருந்தும் கூடுதலான பயணிகள் தமிழகம் முழுவதும் பயணம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனை கருத்தில் கொண்டு, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் மூலமாக தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்பு பேருந்துகளை இயக்கிட திட்டமிடப்பட்டுள்ளது.

சென்னை மற்றும் பல்வேறு இடங்களிலிருந்து பயணம் மேற்கொள்ள இதுநாள் வரை 9,298 பயணிகள் மட்டுமே முன்பதிவு செய்துள்ளனர். இருந்த போதிலும் பயணிகள் எந்தவித சிரமமின்றி பயணம் மேற்கொள்ள ஏதுவாக சென்னையிலிருந்து தமிழகத்தின் முக்கிய இடங்களுக்கு, 21/07/2023 அன்று தினசரி இயக்க கூடிய பேருந்துகளுடன், கூடுதலாக 300 சிறப்பு பேருந்துகளும் மற்றும் பல்வேறு இடங்களிலிருந்து அதாவது கோவை, மதுரை, திருநெல்வேலி, திருச்சி, சேலம் போன்ற இடங்களிலிருந்து முக்கிய இடங்களுக்கும் மற்றும் பெங்களூரிலிருந்து பிற இடங்களுக்கும் 300 சிறப்பு பேருந்துகள் என ஆக மொத்தம் 600 சிறப்புப் பேருந்துகள் இயக்கிட திட்டமிடப்பட்டுள்ளது.

மேலும், ஞாயிறு அன்று சொந்த ஊர்களிலிருந்து சென்னை மற்றும் பெங்களூர் திரும்ப வசதியாக பயணிகளின் தேவைகேற்ப அனைத்து இடங்களிலிருந்தும் சிறப்பு பேருந்துகள் இயக்கிட திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த வார இறுதியில் பயணம் மேற்கொள்வதற்கு இதுவரை 7,258 பயணிகள் முன்பதிவு செய்துள்ளனர். இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதால் தொலைதூர பயணம் மேற்கொள்ள இருக்கும் பயணிகள் தங்களது பயணத்தினை முன்கூட்டிய திட்டமிட்டு முன்பதிவு செய்து பயணித்திட கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இச்சிறப்பு பேருந்து இயக்கத்தினை கண்காணித்திட அனைத்து பேருந்து நிலையங்களிலும் போதிய அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே, பயணிகள் மேற்கூறிய வசதியினை பயன்படுத்தி தங்களது பயணத்தினை மேற்கொள்ள இதன் மூலம் தெரிவிக்கப்படுகிறது. இத்தகவலை அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் அவர்கள் தெரிவித்துள்ளார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *