Bunk off school: மாணவர்களுக்கு ஆப்பு!

இனி வகுப்புகளை ‘கட்’ அடிக்கும் மாணவர்களுக்கு ஆப்பு!

சென்னை: பள்ளிகளில் வகுப்புகளை, ‘கட்’ அடிக்கும் மாணவர்களைப் பிடிக்க, தனிக்குழு அமைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் வழியே, பள்ளிகளின் உடற்கல்வி ஆசிரியர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்களுக்கு, பள்ளிக்கல்வி இயக்குனர் அறிவொளி அனுப்பியுள்ள சுற்றறிக்கை:அரசு நகராட்சி, உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளில், மாணவர்களின் ஒழுங்கு கட்டுப்பாட்டைப் பராமரிக்க, உடற்கல்வி ஆசிரியர்கள், உடற்கல்வி இயக்குனர்கள், தலைமை ஆசிரியர்கள் இணைந்து குழுவாகச் செயல்பட வேண்டும். மாணவ – மாணவியர் பள்ளி சீருடையில் வருவதை கண்காணிக்க வேண்டும்.

காலை வழிபாட்டு கூட்டத்தை, மாணவர்களை ஒருங்கிணைத்து நடத்துவதுடன், யோகா அல்லது தியான பயிற்சியுடன் கூட்டத்தை முடிக்க வேண்டும்.பாட வேளைகளில் வகுப்புகளைப் புறக்கணித்து, பள்ளி வளாகத்தில் விளையாட்டு மைதானம் மற்றும் பள்ளியின் பிற பகுதிகளில், விதிகளுக்குப் புறம்பாக நடமாடும் மாணவர்களைக் கண்காணித்து, அவர்கள் வகுப்புக்குச் செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்காக, ஆசிரியர் குழு இணைந்து செயல்பட வேண்டும்.

ஆறாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையிலான மாணவர்களை ஒருங்கிணைத்து, வாரந்தோறும் வெள்ளிக்கிழமை மாலையில், 45 நிமிடங்கள் கூட்டு பயிற்சி என்ற, ‘மாஸ் டிரில்’ நடத்த வேண்டும்.மாணவர்கள், பெற்றோர் மற்றும் பொதுமக்களில் சிலர், பள்ளியின் நடைமுறைகளுக்குக் குந்தகம் விளைவிக்கும் வகையில் செயல்பட்டால், அதுகுறித்து, தலைமை ஆசிரியர் வழிகாட்டுதலின்படி, சுமூகமாகக் கையாண்டு தீர்வு காண வேண்டும். மாணவர்களின் ஒழுக்கத்தை மேம்படுத்த ஒழுங்கு நடவடிக்கை குழு அமைக்க வேண்டும். இவ்வாறு பல்வேறு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *