சென்னை மக்கள் ஹாப்பி அண்ணாச்சி…நாளைக்கும் மழை உண்டா..?

Advertisements

சென்னையிலும் புறநகர்ப் பகுதிகளிலும் பல்வேறு இடங்களில் இன்று மழை பெய்ததால் கடந்த சில வாரங்களாக நிலவிய வெக்கை தணிந்து குளிர்ச்சி நிலவுகிறது. சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் கடந்த சில வாரங்களாகப் பகல்நேரத்தில் வெயில் சுட்டெரித்தது. இதனால் இரவு நேரங்களிலும் வீட்டுக்குள் புழுக்கமாக இருந்தது. சென்னையில் நேற்று இரவு முதல் வானத்தில் மேகங்கள் தென்பட்டன.

இந்நிலையில் இன்று முற்பகலில் திடீரென மேகங்கள் திரண்டு மேகமூட்டம் சூழ்ந்து வானம் இருண்டது. நண்பகலில் சென்னையில் கோயம்பேடு, வடபழனி, கிண்டி, ஆலந்தூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பரவலாக இடிமுழக்கத்துடன் கூடிய மழை பெய்தது. இதேபோல் சென்னைக்கு வெளியே செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டப் பகுதிகளிலும் மழை பெய்ததால் சாலையில் பல இடங்களில் மழை நீர் வழிந்தோடியது.

கடந்த சில வாரங்களாக நிலவிய வெக்கை தணிந்து குளிர்ச்சி நிலவுவதாலும், புழுதியும் தூசியும் இல்லாமல் வெளிப்புறச் சூழல் தூய்மையானதாலும் மக்கள் பெரிதும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.. மேலும் திருவள்ளூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக அதிகமான வெப்பம் நிலவி மக்களை வாட்டி வதைத்தது. இதனால் பகல் நேரங்களில் சாலைகளில் மக்கள் நடமாட்டம் குறைந்தே காணப்பட்டது.

இந்நிலையில் இன்று காலை முதலே வெயில் சற்றுக் குறைந்தது. முற்பகலில் திடீரெனக் கரு மேகங்கள் சூழ்ந்து பலத்த சூறைக்காற்றுடனும், இடிமுழக்கத்துடனும் மழை பெய்தது. திருவள்ளூர் மாவட்டத்தில் மணவாள நகர், வெங்கத்தூர், கடம்பத்தூர், செஞ்சி, மாடம்பாக்கம், மணவூர், பெரியபாளையம், பூண்டி, தாமரைப்பாக்கம், ஊத்துக்கோட்டை ஆகிய பகுதிகளில் கிட்டத்தட்ட ஒரு மணி நேரத்துக்கு மேலாக மழை நீடித்ததால் சாலையில் ஆங்காங்கே தண்ணீர் வடிந்தோடியது.

தேர்தல் பரப்புரை செய்த வேட்பாளர்கள் ஆங்காங்கே ஒதுங்கி நின்றனர். திடீரென மழை பெய்து வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவுவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.இதேபோலப் போரூர், ஐயப்பன்தாங்கல், வானகரம், மதுரவாயில், வளசரவாக்கம் ஆகிய பகுதிகளிலும் சூறைக்காற்றுடன் மழை பெய்தது. வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவுவதால் வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் மகிழ்ச்சியடைந்துள்ளனர். வானம் மேகமூட்டத்துடன் இருள் சூழ்ந்து காணப்படுவதால் வாகன ஓட்டிகள் பகலிலேயே தங்கள் வாகனங்களின் முகப்பு விளக்குகளை ஒளிரவிட்டபடியே சென்றனர்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *