காரணம் என்ன தெரியுமா? தேர்தல் செலவுக் கணக்குல முறைகேடு செஞ்சாராம்! ஆனால், அசன் மௌலானாவோ இது முழுக்க முழுக்க அரசியல் காழ்ப்புணர்ச்சி, ராகுல் காந்தி வந்ததால வந்த பழிவாங்கும் நடவடிக்கைனு கொந்தளிச்சிருக்காரு. இந்த விவகாரத்துல உண்மையான பின்னணி என்ன? தேர்தல் ஆணையத்தின் அதிரடிக்கு பின்னால் உள்ள சுவாரஸ்யமான தகவல்களை இந்த தொகுப்புல விரிவா பார்க்கலாம்..!
முதலில் யார் இந்த அசன் மௌலானா.. இவர் தேனி தொகுதியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான ஜே. எம். ஆரூண் ரஷீத்தின் மகன் ஆவார். கடந்த 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில், காங்கிரஸ் கட்சி சார்பில் வேளச்சேரி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று எம்.எல்.ஏ ஆனார். இவர் MBA மற்றும் LLB பட்டம் பெற்றவர், அடிப்படையில் ஒரு தொழிலதிபர் மற்றும் வழக்கறிஞர் ஆவார்.
இந்நிலையில் , கடந்த 2021 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் அவர் செய்த செலவுகள் குறித்து தேர்தல் ஆணையத்திற்குத் தணிக்கைக் கணக்கு சமர்ப்பிக்கப்பட்டது. இங்கதான் பிரச்சனை வெடிச்சது.. அசன் மௌலானா தேர்தல் களத்துல சுமார் 37 லட்சம் ரூபாய் வரை செலவு செஞ்சிருக்காராம். ஆனா, தேர்தல் ஆணையத்திடம் அவர் காட்டிய கணக்கோ வெறும் 17.03 லட்சம் ரூபாய் மட்டும்தான்.. இதைக் கண்டுபிடித்த தேர்தல் ஆணையம், நாளிதழ்களில் வெளியான விளம்பரச் செலவுகளை முறையாகக் காட்டவில்லை என்று குற்றம்சாட்டியது.
அதாவது, அந்த விளம்பரச் செலவுகளைத் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி ஏற்றுக் கொண்டதாகச் சொல்லித் தனது சொந்தக் கணக்கில் அவர் காட்டவில்லையாம். இதைக் காரணம் காட்டித்தான் தலைமைத் தேர்தல் ஆணையம் அசன் மௌலானாவை அடுத்த 3 ஆண்டுகளுக்கு எந்தத் தேர்தலிலும் போட்டியிடக் கூடாதுனு தடை விதிச்சு அதிரடி காட்டியிருக்கு!
இந்தத் தடை உத்தரவுக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அசன் மௌலானா, தேர்தல் ஆணையத்தின் மீதும் பாஜக அரசு மீதும் அனல் பறக்கும் குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். அவர் சொன்ன முக்கியமான பாயிண்டுகள் என்னென்ன தெரியுமா?
1 – ராகுல் காந்தி பிரசாரம் : 2021 சட்டமன்றத் தேர்தலின் போது காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தமிழகத்திற்குப் பிரச்சாரத்திற்கு வந்தார். அப்போது தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் சில விளம்பரங்கள் கொடுக்கப்பட்டன. அந்த விளம்பரச் செலவை தனது சொந்தத் தேர்தல் கணக்கில் சேர்க்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் கூறுவது முற்றிலும் நியாயமற்றது என்பது இவரது வாதம்.
2. அமித் ஷா உதாரணம்: அதே தேர்தலில் மத்திய அமைச்சர் அமித் ஷா பிரச்சாரம் செய்த போது, மேடையில் இருந்த 5 பாஜக வேட்பாளர்களுக்கும் அந்தப் பிரச்சாரச் செலவு சரிசமமாகப் பிரிக்கப்பட்டு கணக்கிடப்பட்டது. ஆனால், ராகுல் காந்தி பங்கேற்ற மேடையில் தன்னைத் தவிர மேலும் 4 வேட்பாளர்கள் இருந்தும், அந்த விளம்பரச் செலவு முழுவதையுமே தன் ஒருவன் கணக்கில் மட்டுமே தேர்தல் ஆணையம் திணித்துள்ளதாக அவர் கேள்வி எழுப்புகிறார்.
இந்நிலையில் , அவர் முக்கியமா சொல்ல வர்றது என்னனா.? தேர்தல் செலவுக் கணக்கு குறித்த இறுதி முடிவை விதிகளின்படி ஒரு வருடத்திற்குள் எடுக்க வேண்டும். ஆனால், தேர்தல் முடிந்து 5 ஆண்டுகள் கழித்து, இப்போது இந்த நடவடிக்கையை எடுப்பது எந்த விதத்தில் நியாயம்? இது முழுக்க முழுக்க ராகுல் காந்தி பிரசாரத்திற்கு வந்ததால் ஏற்பட்ட அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக பாஜக அரசு எடுக்கும் பழிவாங்கும் நடவடிக்கைதான் என்று பகிரங்கமாகச் சாடியுள்ளார்.
இந்திய நீதித்துறையின் மீது தனக்கு முழு நம்பிக்கை இருப்பதாகவும், தேர்தல் ஆணையத்தின் இந்தத் தடையை எதிர்த்து உடனடியாக நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்போவதாகவும் அசன் மௌலானா திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
5 ஆண்டுகளுக்கு முன் நடந்த ஒரு தேர்தல் செலவுக் கணக்கு விவகாரம், இப்போ மீண்டும் விஸ்வரூபம் எடுத்துள்ளது. ஒரு பக்கம் தேர்தல் ஆணையத்தின் கடுமையான விதிகள், மறுபக்கம் அரசியல் காழ்ப்புணர்ச்சி என்று அசன் மௌலானா எழுப்பும் தற்காப்பு வாதங்கள் தமிழக அரசியலில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன. நீதிமன்றத்தில் இந்த வழக்கு சூடுபிடிக்கும் பட்சத்தில், பல அதிரடியான உண்மைகள் வெளிவரலாம்.
இந்த விவகாரத்தில் தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கை சரியானது என்று நினைக்கிறீர்களா, அல்லது அசன் மௌலானா சொல்வது போல் இது அரசியல் காழ்ப்புணர்ச்சியா? உங்களது கருத்துக்களை கீழே கமெண்ட் பண்ணுங்க!


