வைகோவிடம் ஓடிய தவெக அமைச்சர்கள்.. செப்.9-ல் மெகா பிளான்.!

சென்னை அரசியல் களத்தில் ஒருபக்கம் கூட்டணி கட்சிகளுடனான ஆலோசனைகள் நடந்து கொண்டிருக்க… இன்னொரு பக்கம், தவெக நிர்வாகிகளான அமைச்சர்கள் என். ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, சி.டி.ஆர். நிர்மல்குமார், ராஜ்மோகன் ஆகியோர் கூட்டணிக் கட்சித் தலைவர்களை நேரில் சந்தித்து வருகின்றனர்.

அந்த வரிசையில் முதலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ. சண்முகத்தையும், பின்னர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் மு. வீரபாண்டியனையும் சந்தித்து அழைப்பு விடுத்த அமைச்சர்கள், அடுத்ததாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோவின் இல்லத்திற்குச் சென்றனர்.

ஏன் இந்த சந்திப்பு? இதற்குப் பின்னால் முக்கிய காரணம் ஒன்று இருக்கிறது. வரும் செப்டம்பர் 9-ஆம் தேதி தவெக ஆதரவு கட்சிகளின் 2-வது ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது. ஏற்கெனவே ஜூலை 1-ஆம் தேதி கோவளத்தில் முதல் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் காங்கிரஸ், விசிக, மதிமுக, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உள்ளிட்ட கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.

ஆனால் இடதுசாரி கட்சிகள் அந்தக் கூட்டத்தில் பங்கேற்கவில்லை. இந்த நிலையில், இரண்டாவது ஆலோசனைக் கூட்டத்திற்கு முன்பாக இடதுசாரிகள் மற்றும் மதிமுக உள்ளிட்ட கட்சிகளிடம் நேரடியாகச் சென்று அழைப்பு விடுப்பதன் மூலம், ஆதரவு கட்சிகளின் ஒருங்கிணைப்பை வலுப்படுத்தும் முயற்சியில் தவெக இறங்கியிருப்பது தெரிகிறது.

அப்படியென்றால் செப்டம்பர் 9 கூட்டத்தில் என்ன பேசப்போகிறார்கள்? இதுதான் அரசியல் வட்டாரங்களில் அதிகம் பேசப்படும் கேள்வி.
தவெக ஆதரவு கட்சிகளின் அடுத்தகட்ட அரசியல் நடவடிக்கைகள் குறித்து இந்தக் கூட்டத்தில் ஆலோசனை நடைபெற உள்ளது.
குறிப்பாக உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாகவும் ஆலோசிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதாவது, சட்டப்பேரவைத் தேர்தல் முடிந்து ஆட்சி அமைந்துவிட்ட நிலையில், அடுத்த முக்கிய அரசியல் களமாக உள்ளாட்சித் தேர்தலை தவெக பார்க்கிறதா என்ற கேள்வி எழுகிறது. உள்ளாட்சித் தேர்தல் என்பது வெறும் தேர்தல் அல்ல. ஒவ்வொரு மாவட்டத்திலும், ஒவ்வொரு நகரத்திலும், ஒவ்வொரு ஒன்றியத்திலும் கட்சியின் அமைப்பு பலம் எவ்வளவு இருக்கிறது என்பதை சோதிக்கும் களம்.

அதனால், சட்டப்பேரவைத் தேர்தலில் ஆதரவு அளித்த கட்சிகளை உள்ளாட்சித் தேர்தல் களத்திலும் ஒருங்கிணைக்க முடியுமா என்பதற்கான ஆரம்ப ஆலோசனையாக இந்தக் கூட்டம் அமையலாம்.. இன்னொரு முக்கிய விவகாரமும் இந்தக் கூட்டத்தில் பேசப்படலாம் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

தவெக ஆதரவு கட்சிகளுக்கான கூட்டணிக்கு புதிய பெயர் சூட்டுவது தொடர்பாகவும் ஆலோசனை நடைபெற வாய்ப்புள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. அப்படி ஒரு முடிவு எடுக்கப்பட்டால், அது வெறும் பெயர் மாற்றமாக மட்டும் இருக்காது. தவெகவை மையமாக வைத்து உருவாகும் அரசியல் அணியை தனியாக அடையாளப்படுத்தும் முயற்சியாகவும் அது பார்க்கப்படலாம்.

இருப்பினும், கூட்டணியின் இறுதி வடிவம் மற்றும் பெயர் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை .. சரி வைகோ ஏன் முக்கியம்? இங்கேதான் வைகோவின் அரசியல் முக்கியத்துவம் வருகிறது. தவெக அரசுக்கு ஆதரவு தெரிவித்து வரும் முக்கிய அரசியல் தலைவர்களில் வைகோவும் ஒரு முக்கியப் புள்ளி..

அதனால், அமைச்சர்கள் நேரடியாக வைகோ வீட்டுக்குச் சென்று அழைப்பு விடுத்திருப்பது, மதிமுகவை இந்த ஆலோசனை செயல்முறையில் தொடர்ந்து இணைத்துக் கொள்ள தவெக விரும்புகிறது என்பதற்கான அரசியல் சமிக்ஞையாக பார்க்கப்படுகிறது.
அதுமட்டுமல்ல…

அமைச்சர்கள் சந்திப்புக்குப் பிறகு வைகோ செய்தியாளர்களிடம் பேசும்போது, செப்டம்பர் 9-ஆம் தேதி நடைபெறும் தவெக ஆதரவு கட்சிகளின் கூட்டத்தில் மதிமுக நிச்சயம் பங்கேற்கும் உறுதியளித்துள்ளார்.தவெக அமைச்சர்கள் சட்டப்பேரவையில் எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களுக்கு சிறப்பாக பதிலளிப்பதாகவும் வைகோ பாராட்டியுள்ளார்.

ஆனால்… எல்லோருமே தவெக பக்கம் வருகிறார்களா? இங்குதான் இந்த அரசியல் கதை இன்னொரு திருப்பத்தை எடுக்கிறது. மதிமுக கூட்டத்தில் பங்கேற்பதை உறுதி செய்துள்ள நிலையில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தவெக அமைக்க உள்ள கூட்டணியிலும் அமைச்சரவையிலும் பங்கேற்கப் போவதில்லை என்று தெரிவித்துள்ளது.

அதே நேரத்தில், தவெக மதச்சார்பின்மை கொள்கையில் இருந்து விலகினால், பாஜகவுக்கு எதிராக எடுத்த நிலைப்பாட்டைப் போலவே தவெகவையும் எதிர்ப்போம் எனவும் CPI தரப்பில் கூறப்பட்டுள்ளது. இதனால் செப்டம்பர் 9 கூட்டம் இன்னும் முக்கியத்துவம் பெறுகிறது. ஒருபக்கம் வைகோ போன்ற தலைவர்கள் பங்கேற்கத் தயாராக இருக்கிறார்கள்.

மறுபக்கம், சில கட்சிகள் தங்களுடைய தனித்த அரசியல் நிலைப்பாட்டைத் தொடர்ந்து வெளிப்படுத்துகின்றன. அப்படியென்றால் விஜய்யின் கணக்கு என்ன? தவெக ஆட்சி அமைந்த உடனேயே ஆதரவு அளித்த கட்சிகளுடன் ஒருங்கிணைப்பை உருவாக்கும் முயற்சிகள் தொடர்ந்து வருகின்றன.

ஜூலை மாதத்தில் முதல் கூட்டம். இப்போது செப்டம்பர் 9-ல் இரண்டாவது கூட்டம். அதற்கிடையில் அமைச்சர்கள் ஒவ்வொரு கட்சித் தலைவரையும் நேரில் சந்தித்து அழைப்பு விடுக்கிறார்கள். இதன் மூலம், ஆதரவு தெரிவித்த கட்சிகளை ஒரே அரசியல் தளத்தில் கொண்டு வருவதற்கான முயற்சி நடப்பது தெளிவாகிறது.

அடுத்த முக்கிய சோதனை உள்ளாட்சித் தேர்தல் என்றால், அதற்கு முன்பாக இந்த ஒருங்கிணைப்பு எவ்வளவு வலுவாக உருவாகிறது என்பதுதான் கவனிக்க வேண்டிய விஷயம். இப்போது அரசியல் களம் கேட்கும் கேள்வி ஒன்றுதான் வைகோவுடன் நடந்த இந்த சந்திப்பு வெறும் அழைப்புக்கான சந்திப்பா? அல்லது…

உள்ளாட்சித் தேர்தலை குறிவைத்து தவெக கூட்டணி அரசியல் அடுத்த கட்டத்திற்கு நகர்கிறதா? செப்டம்பர் 9-ஆம் தேதி நடைபெறும் ஆலோசனைக் கூட்டத்தில் இதற்கான பல பதில்கள் வெளிவரலாம். அதனால், வைகோவை சந்தித்த தவெக அமைச்சர்கள் விவகாரம் என்பது ஒரு சாதாரண அரசியல் சந்திப்பாக மட்டும் பார்க்கப்படாமல், அடுத்தகட்ட கூட்டணி அரசியலுக்கான முன்னோட்டமாகவும் பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *