
திருவனந்தபுரம்: மனிதனின் அலட்சியம் மற்றும் பேராசைக்கு எதிராக இயற்கை எதிர்வினையாற்றும் என்பதற்கான உதாரணம் தான் நிலச்சரிவு சம்பவம் எனக் கேரள உயர்நீதிமன்றம் கூறியுள்ளது.
கடந்த ஜூலை 30 கேரள மாநிலத்தில் 200க்கும் மேற்பட்டவர்களை உயிரிழக்க காரணமான வயநாடு நிலச்சரிவு சம்பவம் தொடர்பாகக் கேரள உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணை நடத்தி வருகிறது. இன்று (ஆக.,24) இந்த வழக்கை விசாரித்த ஏகே ஜெயசங்கரன் நம்பியார் மற்றும் ஷியாம் குமார் அமர்வு கூறியதாவது:
மனிதனின் அலட்சியம் மற்றும் பேராசைக்கு எதிராக இயற்கை எதிர்வினையாற்றும் என்பதற்கான உதாரணம் தான் நிலச்சரிவு சம்பவம். இதற்கான அறிகுறிகள் நீண்ட நாட்களாகத் தென்பட்டது. ஆனால், மாநிலத்தைப் பொருளாதார வளர்ச்சி பாதையில் கொண்டு செல்வதற்காக அதனை நாம் புறக்கணித்தோம்.
2018 , 2019ம் ஆண்டுகளில் ஏற்பட்ட இயற்கை பேரிடர், கோவிட் பெருந்தொற்று, நிலச்சரிவு ஆகியன நாம் செல்லும் பாதையில் உள்ள தவறுகளைச் சுட்டிக் காட்டுகின்றன. நமது வழிகளில் உள்ள தவறுகளைச் சரி செய்து, உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு நீதிபதிகள் தெரிவித்தனர்.

