Wayanad Landslide:அதிர்ச்சியில் ஓர் ஆச்சரியம்…!! விடியும் வரை பாட்டி-பேத்தியை காவலாக நின்று பாதுகாத்த யானைகள்!

Advertisements

திருவனந்தபுரம்:முண்டகையில் உள்ள ஹாரிசன்ஸ் தேயிலை தோட்டத்தில 18 ஆண்டுகளாகத் தேயிலை பறிக்கும் தொழிலாளி சுஜாதா அனிநஞ்சிரா.

இவர் தனது மகள் சுஜிதா, மருமகன் குட்டன், பேரக்குழந்தைகள் சூரஜ் (18), மிருதுளா (12) ஆகியோருடன் வசித்து வந்தார். நிலச்சரிவின்போது இவரது குடும்பம் யானையின் கருணையால் உயிர் தப்பியது ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

நிலச்சரிவிலிருந்து தப்பிய தனது அனுபவத்தைப் பற்றிச் சுஜாதா கூறியதாவது:-கடந்த திங்கள்கிழமை இரவே பெய்யத் தொடங்கிய மழை நள்ளிரவைத் தாண்டிச் செவ்வாய்க்கிழமை 4 மணிக்குக் கனமழையாக மாறியது. இதையடுத்து, வீட்டைத் தண்ணீர் சூழ ஆரம்பித்தது. அங்கிருந்து அருகில் உள்ள குன்றுக்குத் தப்பினோம். காபி மரங்களால் மூடப்பட்ட அந்தக் குன்றில் யானைகளும் தஞ்சமடைந்திருந்தன.

எங்களுக்குச் சில அங்குல தூரத்தில்தான் யானை கூட்டம் நின்றிருந்தது. அதன் கால்களுக்கு இடையில்தான் இரவுப் பொழுது முழுவதையும் பயத்துடன் கழித்தோம். அந்த யானையின் கண்களைப் பார்க்கையில் எங்களின் இக்கட்டான சூழ்நிலையை அது புரிந்து கொண்டது போல் தோன்றியது. அதனால், அந்த யானை கூட்டம் ஆக்ரோஷமாகி எங்களைத் தாக்க முற்படவில்லை.

காலையில் மீட்புக் குழுவினர் எங்களை வந்து மீட்கும் வரை யானைகளும் எங்களின் பாதுகாப்புக்கு அரணாக அங்கேயே நின்றிருந்தன.சூரியன் உதிக்கையில் யானையின் கண்கள் துளிர விட்டு ஆசிர்வதிப்பதை என்னால் பார்க்க முடிந்தது. இது, எனது வாழ்க்கையில் மறக்க முடியாத சம்பவம்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *