
பெங்களூரு: காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் கர்நாடகாவில் உள்ள கபினி, கே.எஸ்.ஆர். அணைக்கு வரும் தண்ணீரின் அளவு அதிகரித்துக்கொண்டே செல்கிறது. 3 தினங்களுக்கு முன்பு கபினி, கே.எஸ்.ஆர். அணைகளிலிருந்து தமிழகத்திற்கு 5 ஆயிரம் கனஅடியாகத் தண்ணீர் திறக்கப்பட்டது.
நேற்று மதியம் சரியாக 2 மணியளவில் தமிழக – கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவுக்கு வினாடிக்கு 2 ஆயிரம் கனஅடியாகத் தண்ணீர் வந்து கொண்டிருந்தது. காலை 6 மணிக்கு வினாடிக்கு 5,100 கனஅடியாக இருந்த நீர்வரத்து, படிப்படியாக அதிகரித்து 10.30 மணிக்கு 7,500 கனஅடியாக உயர்ந்துள்ளது. நீர் வரத்து அதிகரித்ததன் காரணமாக ஒகேனக்கல்லில் உள்ள ஐந்தருவி, ஐவர் பாணி, திடீர் அருவி, மெயின் அருவியென அனைத்து அருவிகளும் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டுகிறது.
இன்றைய நிலவரப்படி கே.ஆர்.எஸ். அணையிலிருந்து வினாடிக்கு 2,853 கனஅடியும், கபினி அணையிலிருந்து வினாடிக்கு 20 ஆயிரம் கனஅடியும், 2 அணைகளிலிருந்து தமிழகத்திற்கு வினாடிக்கு 22,800 கனஅடியாகத் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. கர்நாடக அணைகளின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருவதால் தமிழ்நாட்டுக்கான நீர்வரத்து மேலும் அதிகரிக்க வாய்ப்பிருப்பதாகக் கூறப்பட்டுள்ளது.

