மணிப்பூர் கொடூரம் குறித்து குறுகிய நேர விவாதத்திற்கு மட்டுமே அனுமதி : எதிர்க்கட்சிகள் ஏற்க மறுத்துத் தொடர் முழக்கம்!!

Advertisements

புதுடெல்லி: நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் கடந்த 20ம் தேதி தொடங்கி, ஆகஸ்ட் 11ம் தேதிவரை நடக்க உள்ளது. கூட்டத்தொடர் தொடங்குவதற்கு ஒருநாள் முன்பாக, மணிப்பூரில் 2 பழங்குடியினப் பெண்களை நூற்றுக்கணக்கான ஆண்கள் நிர்வாணப்படுத்தி ஊர்வலமாக அழைத்துச்செல்லும் வீடியோ வெளியாகி நாட்டையே உலுக்கியது. இது நாடாளுமன்றத்திலும் புயலை கிளப்பியது.

இதனைத் தொடர்ந்து, ‘மணிப்பூர் கலவரம் தொடர்பாக நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் பிரதமர் மோடி விளக்கம் அளிக்க வேண்டும். அதன்பிறகுதான் இந்த விவகாரம்குறித்து விரிவான விவாதம் நடத்த வேண்டும்’ என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. ஆனால் பிரதமர் மோடி விளக்கம் அளிக்க முன்வரவில்லை. அதே சமயம், விவாதத்திற்கு யார் பதிலளிக்க வேண்டுமென எதிர்க்கட்சிகள் முடிவு செய்ய முடியாது என அரசு தரப்பில் கூறப்பட்டு வருகிறது. இதனால் கூட்டத் தொடர் தொடங்கி முதல் 4 நாட்களும் எந்த அலுவலும் நடக்காமல் இரு அவைகளும் முடங்கின.

இந்நிலையில், இன்று காலை 5வது நாளாக நாடாளுமன்றம் கூடியதும் கார்கில் போரில் உயிர்நீத்த வீரர்களுக்கு உறுப்பினர்கள் 2 நிமிடம் எழுந்து நின்று அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து 2 அவைகளிலும் மணிப்பூர் கொடூரம் குறித்து மோடி விளக்கம் அளிக்க வலியுறுத்தி 5வது நாளாக எதிர்கட்சிகள் முழக்கம் செய்தனர்.மக்களவையில் அமளிக்கிடையே உத்தரப் பிரதேச எம்பிக்கள் விவசாயிகள் பிரச்சனையை எழுப்பினர். இருப்பினும் தொடர் முழக்கம் காரணமாக மக்களவை 12 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது. மாநிலங்களவையில் அவை நடவடிக்கைகளை ஒத்திவைத்து மணிப்பூர் கொடூரம் குறித்து விவாதிக்க 42 உறுப்பினர்கள் நோட்டீஸ் வழங்கினர்.

காங்கிரஸ் சார்பில் பிரமோத் திவாரி, திமுக சார்பில் அப்துல்லா உள்பட 42 உறுப்பினர்கள் இன்று நோட்டீஸ் அளித்த நிலையில், அவை நடவடிக்கைகளை ஒத்திவைத்துவிட்டு விவாதம் நடத்த மாநிலங்களவை தலைவர் ஜெகதீப் தங்கர் மறுப்பு தெரிவித்தார்.குறுகிய நேர விவாதத்திற்கு மட்டுமே அனுமதிக்க முடியும் என்று அவர் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.மேலும் எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு இடையே அரசு தரப்பை பேச அழைத்தார் அவை தலைவர் தங்கர். எனினும் மாநிலங்களவை தலைவர் அறிவிப்பைக் கண்டித்து எதிர்க்கட்சிகள் தொடர் முழக்கமிட்டதை அடுத்து மாநிலங்களவை 12 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *