அப்பாஸ் அராக்சி பதவி நீக்கம்..? ஈரானின் திடீர் முடிவால் அதிர்ச்சி..!

Advertisements

வளைகுடா நாடுகள் மீது கைவைத்தால் சர்வதேச அரங்கில் என்ன நடக்கும் என்பதை அனைவரும் கண்கூடாக பார்த்து வருகிறோம். ஏனெனில் அங்குள்ள எண்ணெய் வளத்தை நம்பி ஆசியா, ஐரோப்பா கண்டங்களை சேர்ந்த பல நாடுகள் இருக்கின்றன. குறிப்பாக ஈரான் மீது இஸ்ரேல், அமெரிக்கா ஆகிய நாடுகள் தொடங்கிய போரால் ஹார்மூஸ் நீரிணை முடக்கப்பட்டது. இதன் வழியாக தான் உலகின் பல நாடுகளுக்கு எரிபொருள் சென்று கொண்டிருக்கிறது. இது முடக்கப்பட்டதால் கேஸ், பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது.

இருப்பினும் அமெரிக்காவின் நெருக்கடிக்கு ஈரான் இறங்கி வரவில்லை. பெரிய அளவில் பொருட்சேதத்தை சந்தித்தாலும் போரை தொடர்ந்து வருகின்றனர். அந்த அளவிற்கு ராணுவ கட்டமைப்பை பரவலாகவும், வலிமையாகவும் வைத்திருப்பது ஆச்சரியம் அளிக்கிறது. மறுபுறம் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பும் விடுவதாக இல்லை. ஈரானை ஒன்றும் இல்லாமல் செய்துவிடுவேன் என்றெல்லாம் எச்சரித்து வருகிறார்.

இதற்கிடையில் ஏப்ரல் 8ஆம் தேதி போர் நிறுத்தம் அமலுக்கு வந்தது. ஈரான், அமெரிக்கா இடையில் பல்வேறு கட்டங்களாக பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இதில் பாகிஸ்தான் மத்தியஸ்தம் செய்து வருவது முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. ஆனாலும் உடன்பாடு எட்டப்படவில்லை. இஸ்லாமாபாத் அழைத்து நடத்தப்படு பேச்சுவார்த்தைகள் அடுத்தடுத்து பின்னடைவாக முடிகின்றன.

இந்நிலையில் , பேச்சுவார்த்தைகளில் ஏற்பட்டுள்ள தேக்கநிலை, ஈரானியத் தலைமைக்குள் பதற்றத்தை அதிகரித்துள்ளதாக சர்வதேச ஆய்வாளர்கள் கூறுகின்றனர்… அந்நாட்டு ஜனாதிபதி மசூத் பெஷெஷ்கியன் மற்றும் நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் காலிபாஃப் ஆகியோர் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சியைப் பதவியிலிருந்து நீக்கக் கோருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், பெஷேஷ்கியனுக்குத் தெரிவிக்காமல், ஐ.ஆர்.ஜி.சி தலைவரின் உத்தரவின் பேரில் அராக்சி செயல்பட்டு வருவதாக வட்டாரங்கள் தெரிவித்தன.இதனால் விரக்தியடைந்த பெஷேஷ்கியன், இது தொடர்ந்தால் அராக்சியைப் பதவியிலிருந்து நீக்கிவிடுவேன் என்று தனது பங்காளிகளிடம் கூறியதாக தெரிவிக்கப்படுகிறது. இவ்விவகாரம் குறித்து ஈரான் எந்த அதிகாரப்பூர்வ அறிக்கையையும் வெளியிடவில்லை..

இந்நிலையில் , ஈரானில் மேற்கொள்ளப்படக்கூடிய சாத்தியமான இராணுவ நடவடிக்கைக்கான திட்டம் குறித்து, அமெரிக்க மத்திய கட்டளைப்பீடம் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பிடம் விளக்கமளித்துள்ளது. சுமார் 45 நிமிடங்கள் நீடித்துள்ள இந்த சந்திப்பில், அமெரிக்கா சமீபத்தில் இஸ்ரேலுக்கு 6,000 டன்களுக்கும் அதிகமான வெடிபொருட்களையும் தளவாடங்களையும் அனுப்பியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஈரான் உடனான போருக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்காக, ட்ரம்ப் பெரிய அளவிலான போர் நடவடிக்கைகளை மீண்டும் தொடங்கத் திட்டமிடுகிறார் என்ற யூகங்களுக்கு இது வலு சேர்த்துள்ளது.

ஈரானைப் பேச்சுவார்த்தைக்கு வரத் தூண்டும் நம்பிக்கையில், அந்த நாடு மீது குறுகிய மற்றும் சக்திவாய்ந்த தொடர் தாக்குதல்களைத் தொடுப்பது குறித்து அமெரிக்க மத்திய கட்டளைப்பீடம் பரிசீலித்து வருகிறது; இதில் உள்கட்டமைப்பு இலக்குகளும் இடம்பெற வாய்ப்புள்ளது.மட்டுமின்றி, ஹார்முஸ் நீரிணையைக் கைப்பற்றி, கப்பல் போக்குவரத்தை மீண்டும் அனுமதிக்கும் ஆலோசனையும் ட்ரம்பிற்கு வழங்கப்பட்டுள்ளது.

ஆனால், அத்தகைய நடவடிக்கையில் தரைப்படைகள் ஈடுபடுத்தப்பட வேண்டும் என்பதையும் விளக்கியுள்ளனர்.மூன்றாவது வாய்ப்பாக, ஈரானிடம் உள்ள அதிக செறிவூட்டப்பட்ட யுரேனியம் கையிருப்பைப் பாதுகாப்பதற்காக சிறப்புப் படைகளை ஈடுபடுத்துவதாகும். ஆனால், ஈரான் மீதான புதிய நடவடிக்கை தொடர்பில் இதுவரை ட்ரம்ப் ஒப்புதல் அளிக்கவில்லை என்றே தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் , இந்த போர் குறித்து , சர்வதேச நாடுகள் பலவும் இந்தப் போர் இப்படியே நீடித்தால் உலகப் பொருளாதாரம் பெரும் பாதிப்பைச் சந்திக்கும் என எச்சரித்துள்ளன. ஹார்முஸ் ஜலசந்தி மீண்டும் முழுமையாகத் திறக்கப்பட்டு, இரு நாடுகளும் அணுசக்தி விவகாரத்தில் ஒரு பொதுவான முடிவுக்கு வரும்போதுதான் இந்தப் போருக்கு ஒரு நிரந்தர முற்றுப்புள்ளி வைக்கப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது..

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *