உழைப்பாளர் தினம் : சிகப்பு நிறத்தின் பின்னணியில் மறைந்துள்ள சிகாகோ வரலாறு.!

Advertisements

உலக நாடுகளில் எல்லாம் மே முதல் நாளான இன்று தொழிலாளர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. உலகளவில் கம்யூனிஸ்டுகளின் செம் படைகளே காலம் காலமாக தொழிலாளர் தினத்தைக் கொண்டாடி வருவதால் சோவியத் ஒன்றியத்தில் இது உருவானதாக பலர் நம்பிக் கொண்டிருக்கிறார்கள்.

ஆனால் உலக முதலாளித் துவத்தின் முகவரியாய் இருக்கும் அமெரிக்காவில் தோன்றியது என்றால் நாம் ஆச்சரியப்பட்டுதான் ஆக வேண்டும். 19 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இங்கிலாந்தில் உருவான தொழிற்புரட்சியால் மான்செஸ்டர் நகரில் ஜவுளி உற்பத்தி ஆலைகளும், அந்த ஆலைகளுக்குத்தேவையான கருவிகளை உற்பத்தி செய்யும் ஆலைகளும் தோன்றின.

லண்டன் உள்பட பல நகரங்களில் தொழிற் சாலைகள் உருவாக தொடங்கின.இதன் தொடர்ச்சியாக இங்கிலாந்திலிருந்து அமெரிக்கா சென்ற ஆங்கிலேயர்கள் அங்கு தொழிற் சாலைகளை உருவாக்கினர். அப்போதெல்லாம், அதாவது 19 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் அதிகாலை வீட்டை விட்டு வெளியேறும் தொழிலாளர்கள் நடு இரவில் தான் வேலை முடிந்து வீட்டுக்குத் திரும்பி வரவேண்டிய நிலை இருந்தது.

இதனால் பணி முடிந்து வீட்டுக்குச் செல்லும் ஒவ்வொரு தொழிலாளியும் தூங்கிக் கொண்டிருக்கும் குழந்தைகளை தான் பார்க்க முடியும். அதேநேரம் காலையில் குழந்தைகள் விழிப்பதற்கு முன் தந்தையர் தொழிற்சாலைக்குச் செல்ல வேண்டிய நிலை இருக்கும். தனது குழந்தைகளுடன் விளையாடவோ.. ஏன்…பேசக் கூட முடியாத நிலை தொழிலாளிக்கு இருக்கும். இப்படிப்பட்ட கொடுமையான தொழிலாளர்களின் நிலையை மார்க்ஸிம் கார்க்கி தனது தாய் நாவலில் அழகாக படம் பிடித்திருப்பார்.

அதில் தொழிற்சங்கத்தின் அவசியம் குறித்தும், தொழிலாளர் ஒற்றுமை குறித்தும் கார்க்கி தனது நாவலில் சொல்லியிருப்பார்.
ஆரம்பத்தில் தினமும் 12 லிருந்து 15 மணி நேரம் தொழிற்சாலைகளில் பணியாற்ற வேண்டிய நிலை கிழக்கு அய்ரோப்பாவில் தொழிலாளர்கள் போராட்டத்தால் ஆலை அதிபர்கள் வேலை நேரத்தைப் படிப்படியாக குறைத்து வந்தனர்.இதன் தாக்கம் அமெரிக்காவின் சிகாகோ நகரிலும் எதிரொலித்தது.

அந்த நகரத் தொழிலாளர்கள் எட்டு மணி நேரம் வேலை கேட்டு போராட்டம் நடத்தினர். எட்டு மணி நேர ஓய்வு, எட்டு மணி நேர தூக்கம், எட்டு மணிநேரம் வேலை என்பதை தொழிலாளர்கள் வலியுறுத்தினர். தொழிற்புரட்சி தோன்றிய 19 ம் நூற்றாண்டில் கருவிகள் உற்பத்தி செய்யும் ஏராளமான தொழிற் சாலைகள் தொடங்கப்பட்டன. 1884 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் ஏழாம் தேதி அமெரிக்கா கனடா நாட்டில் உள்ள தொழிற்சங்கங்களின் பேரவை, எட்டு மணி நேர வேலையை சட்டபூர்வமாக ஆக்கிட வலியுறுத்தி வேலை நிறுத்த போராட்டம் தொடங்க தீர்மானித்தது.

அதன்படி 1886 ஆம் ஆண்டு மே முதல் நாள் வேலை நிறுத்தம் போராட்டம் தொடங்கியது. அமெரிக்காவின் பல மாகாணங்களில் உள்ள தொழில் நகரங்களில் இந்த வேலை நிறுத்த போராட்டம் நடைபெற்றாலும், சிகாகோ நகரம்தான் தீவிர உணர்ச்சி மிக்க தொழிலாளர்களின் போராட்ட களமாக திகழ்ந்தது.அதுவரை தொழிலாளர்கள் அப்படி போராடியதே கிடையாது. அதை கண்டு தொழிலாளர்கள் மீது அரசாங்கம் ஆவேசப்பட்டது. அவ்வண்ணம் போராடிய தொழிலாளர்கள் மீது அடக்குமுறையை கண் மூடித்தனமாக ஏவி விட்டது.

மே மாதம் மூன்றாம் தேதி நடைபெற்ற மெக்கார்மிக் ரீப்பர் தொழிற்சாலை வேலை நிறுத்தமும் மறுநாள் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டமும் பெரும் அடக்குமுறைக்கு ஆளாகியது, உயிர் பலிகள் ஏராளம். 1888 ஆம் ஆண்டில் செயின்ட் லூயி நகரில் நடைபெற்ற தொழிலாளர் பேரவையில் தொழிலாளர் இயக்கத்தினை அரசியல் முறையில் மே முதல் நாள் நடத்த திட்டமிட்டது. 1889 மே முதல் நாளே அமெரிக்க தொழிலாளர் பேரவை விரிவாக நடத்த திட்டமிருந்ததால் அனைத்து நாடுகளில் உள்ள தொழிலாளர்கள் அமைப்புகள் இதையே தொழிலாளர் நாடாக கொண்டாட முடிவு செய்தனர்.

எட்டு மணி நேரம் வேலை உரிமைக்காக தோன்றிய போராட்ட நாளில் பிறந்ததுதான் மே தினம் என்ற தொழிலாளர் நாள். ஆண்டுதோறும் மே தின விழாவில் ரஷ்யாவின் தலைவர் கலந்துகொண்டு மாஸ்கோவின் செஞ்சதுக்கத்தில் முதலாளித்துவ சுரண்டலின் கேடு, உலக அமைதியின் அவசியம். முதலானவற்றை விளக்கி உரை நிகழ்த்துவது வழக்கமாக இருந்தது. இப்படி தான் மே தினம் உருவானது. தொழிலாளர் உரிமை முழக்க நாளான மே தினம் இந்தியாவிலேயே முதன் முதலாக சென்னை மாநகரில்தான் கொண்டா ப்பட்டது.

அப்படி கொண்டாட வழி செய்து கலந்து கொண்டு பேசியவர் ம. சிங்காரவேலர். சென்னையில் தோன்றிய முதல் தொழிற்சங்கத்தின் பெயர் மதராஸ் லேபர் யூனியன் என்பதாகும். மே தினம் தொழிலாளர் தினமாக கொண்டாடப் படுவதெல்லாம் இருபதாம் நூற்றாண்டின் அரசியல் மாறுபாட்டினால்தான். புராதன ரோமானியர்கள் மே தினத்தை மகிழ்ச்சி அளிக்கும் நாள் கேளிக்கை தினம் என்பதாகவே கொண்டாடினர்.

மே தினத்தன்று கனிகளுக்கும் மலர்களுக்கும் வண்ணங்களை கொடுக்கும் ப்ளோரா என்ற தேவதையை மகிழ்விப்பதற்காக இளைஞர்களும் யுவதிகளும் வயல்வெளிகளை நோக்கி ஆடிக்கொண்டும் பாடிக் கொண்டும் போவார்கள். மக்கள் முதல் நாள் மாலையே காட்டிற்கு சென்று இரவை இன்பமாக கழிப்பார்கள். அதிகாலையில் பசுமையான இலைகளோடு கொண்டு வந்த இலைகள் மற்றும் மலர்களால் வீட்டை அழகு படுத்துவார்கள்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *