புதுடில்லி: ‘தங்களுடைய தளங்களில் வெளியிடப்படும், ‘டீப்பேக்’ எனப்படும் போலி வீடியோக்கள்குறித்த தகவல்கள் மத்திய அரசின் விசாரணை அமைப்புகளுக்குத் தரப்படுவது குறித்து பயனாளிகளுக்கு எச்சரிக்க வேண்டும்’ என, சமூக வலைதளங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்திஉள்ளது.
செயற்கை நுண்ணறிவு வாயிலாக, டீப்பேக் எனப்படும் போலி வீடியோக்களை, சமூக வலைதளங்களில் வெளியிடுவது சமீபகாலமாக அதிகரித்து வருகிறது.
ஒருவருடைய முகத்தை மற்றொருவர் உடலுடன் பொருத்தி, இந்த வீடியோ வெளியிடப்படுகிறது. சமீபத்தில் பல பாலிவுட் நடிகையரின் முகத்துடன் கூடிய ஆபாச வீடியோக்கள் வெளியாயின.
மேலும், பிரதமர் மோடி உட்பட பல பிரபலங்களின் முகத்துடன், அவர்கள் பேசியதாகப் பல பொய் வீடியோக் களும் வெளியாயின. இதைத் தடுப்பது குறித்து, மத்திய அரசு ஆய்வு செய்கிறது.
இந்நிலையில், சமூக வலைதளங்களுக்கு, மத்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் சமீபத்தில் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:
தகவல் தொழில்நுட்ப சட்டத்தின்படி, தங்களுடைய தளங்களில் வெளியிடப்படும் பதிவுகளில் ஆட்சேபனை இருந்தால், அதுகுறித்த தகவல்களை, மத்திய அரசின் விசாரணை அமைப்புகளுக்கு, சமூக வலைதளங்கள் பகிர்ந்து கொள்ள வேண்டும்.
இதுகுறித்து தங்களுடைய தளத்தின் பயனாளிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், சமூக வலைதளங்கள் பிரசாரம் செய்ய வேண்டும். பயனாளியின் தாய்மொழியில் அந்த எச்சரிக்கைகள் இருக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

