
சண்டிகர்: இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் புதிய தலைவர் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து வீரர், வீராங்கனைகள் பத்மஸ்ரீ, கேல் ரத்னா விருதுகளைத் திருப்பித் தரும் நிலையில், ஹரியானா மாநிலம் ஜஜ்ஜார் மாவட்டத்தில், பஜ்ரங் பூனியா உள்ளிட்ட மல்யுத்த வீரர்களைக் காங்கிரஸ் எம்.பி., ராகுல் சந்தித்து பேசினார்.
இந்திய மல்யுத்த கூட்டமைப்பு (டபிள்யு.எப்.ஐ.,) தலைவராகச் சஞ்சய் சிங் தேர்வானார். இவர், பாலியல் புகாரில் சிக்கிய முன்னாள் தலைவரும் பா.ஜ., எம்.பி., யுமான பிரிஜ் பூஷண் சரண் சிங் ஆதரவாளர். மொத்தமுள்ள 15 பதவிகளில் 13ல் பிரிஜ் பூஷண் ஆதரவாளர்கள் வெற்றி பெற்றனர்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்த ஒலிம்பிக் நட்சத்திரம் சாக் ஷி மாலிக், மல்யுத்தத்திலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்ற மல்யுத்த வீரர் பஜ்ரங் பூனியா, வீரேந்தர் சிங் தங்களது பத்மஸ்ரீ விருதைத் திரும்ப ஒப்படைத்தனர். மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத்தும் விளையாட்டின் உயரிய கேல் ரத்னா, அர்ஜுனா விருதுகளைத் திருப்பி ஒப்படைப்பதாக அறிவித்துள்ளார். இந்தச் சூழலில், இந்திய மல்யுத்த கூட்டமைப்பை ‘சஸ்பெண்ட்’ செய்து மத்திய விளையாட்டுத்துறை அமைச்சகம் உத்தரவிட்டது.
இந்நிலையில், ஜஜ்ஜார் மாவட்டத்தில் பஜ்ரங் பூனியா உள்ளிட்ட மல்யுத்த வீரர்களை ராகுல் சந்தித்து அவர்களுடன் கலந்துரையாடினார்.
இது தொடர்பாகப் பஜ்ரங் பூனியா கூறுகையில், மல்யுத்த பயிற்சியைப் பார்வையிட ராகுல் வந்தார். மல்யுத்தத்திலும் ஈடுபட்ட ராகுல், தினசரி எங்களின் நடவடிக்கைகளைப் பார்த்தார்.




