Vinesh Phogat:”இனி என்னிடம் போராட சக்தி இல்லை.” – ஓய்வை அறிவித்தார் – ரசிகர்கள் அதிர்ச்சி!

Advertisements

மகத்தான சாதனையைப் படைக்கத் தயாராகி வந்த வினேஷ் போகத், தகுதி நீக்கம் செய்யப்பட்டதால் நிலைகுலைந்து போனார்.

பாரீஸ்:33-வது ஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடந்து வருகிறது. உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான இதில் 206 நாட்டு வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.

அதில் பெண்கள் மல்யுத்தத்தில் 50 கிலோ உடல் எடைப்பிரிவில் இந்திய வீராங்கனை வினேஷ் போகத் நேற்று முன்தினம் களம் இறங்கினார். முதல் சுற்றில் உலக சாம்பியனும், ‘நம்பர் ஒன்’ வீராங்கனையுமான ஜப்பானின் யு சுசாகிக்கு அதிர்ச்சி அளித்தார். சர்வதேச போட்டிகளில் 82 ஆட்டங்களில் தோல்வியே சந்திக்காமல் வீறுநடை போட்ட சுசாகியின் ஆதிக்கத்துக்கு முற்றுப்புள்ளி வைத்ததிலேயே ஒட்டுமொத்த கவனத்தையும் வினேஷ் போகத் ஈர்த்தார்.

தொடர்ந்து கால்இறுதியில் முன்னாள் ஐரோப்பிய சாம்பியன் உக்ரைனின் ஒக்சானா லிவாச்சையும், அரைஇறுதியில் 5-0 என்ற கணக்கில் பான்அமெரிக்க சாம்பியன் கியூபாவின் லோபஸ் யுஸ்னேலிஸ் குஸ்மேனையும் போட்டுத் தாக்கி இறுதிப்போட்டிக்குள் அடியெடுத்து வைத்தார். இதன் மூலம் ஒலிம்பிக் பெண்கள் மல்யுத்தத்தில் இறுதி சுற்றை எட்டிய முதல் இந்திய வீராங்கனை என்ற சாதனை படைத்த அவருக்குத் தங்கம் அல்லது வெள்ளிப்பதக்கம் உறுதியானது. இறுதிப்போட்டியில் நேற்றிரவு அமெரிக்க வீராங்கனை சாரா ஹில்டுபிரான்டுவை சந்திக்க இருந்தார்.

ஒரே நாளில் 8 மணி நேர இடைவெளியில் 3 வீராங்கனைகளுடன் மல்லுக்கட்டிய வினேஷ் போகத் இதற்காகக் கடுமையான உடல் உழைப்பை வழங்கியதால் தளர்ந்து போனார். இதனால் அவ்வப்போது நிறைய சத்தான மற்றும் திரவ உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டி இருந்தது. அவருக்குத் திடீர் பிரச்சினையாக உடல் எடை கூடியிருப்பது இரவில் கண்டறியப்பட்டது.

வினேஷ் போகத் வழக்கமாக 53 கிலோ எடைப்பிரிவில் விளையாடக்கூடியவர். இந்த முறை அந்தப் பிரிவுக்கு வேறொரு இந்தியர் தகுதி பெற்றதால் அவர் 50 கிலோ எடைப்பிரிவுக்கு மாறினார். இதற்காகக் கஷ்டப்பட்டு தான் உடல் எடையைக் குறைத்தார். தொடர்ந்து அதே 50 கிலோ உடல்எடையை தக்கவைக்க உணவுக் கட்டுப்பாடு மிகவும் அவசியமாகும்.

நேற்று முன்தினம் இரவுப் போட்டிகள் முடிந்த பிறகு பரிசோதித்துப் பார்த்ததில், அவரது உடல் எடை 2 கிலோ வரை அதிகரித்து இருப்பது தெரிந்தது. இதையடுத்து இரவு முழுவதும் தூங்காமல் விடிய விடிய உடல் பயிற்சியில் ஈடுபட்டார். உணவோ, தண்ணீரோ எடுத்துக் கொள்ளாமல் தொடர்ச்சியாக ஓட்டம், சைக்கிளிங், ஸ்கிப்பிங், ஆவி குளியல் என்று உடல் எடையை 50-க்குள் கொண்டு வருவதற்கான எல்லாவிதமான முயற்சிகளையும் பயிற்சி நிபுணர்களின் ஆலோசனையின் பேரில் மேற்கொண்டார். இதனால் கணிசமாக எடை குறைந்தது.

இந்த நிலையில் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றிருந்த அவருக்கு வழக்கமான நடைமுறைப்படி நேற்று காலை உடல் எடை பரிசோதிக்கப்பட்டது. அப்போது அவர் நிர்ணயித்த 50 கிலோவை விட 100 கிராம் எடை அதிகமிருப்பது தெரியவந்தது. எடையைக் குறைக்க டாக்டர்களின் அறிவுரைப்படி நீளமான முடியைக் கூட வெட்டிப் பார்த்தனர். ஆனால் பலன் இல்லை.

இதையடுத்து கொஞ்சம் கால அவகாசம் தரும்படி இந்திய தரப்பில் கேட்கப்பட்டது. அதை நிராகரித்த ஒலிம்பிக் கமிட்டியினர், விதிமுறைக்குப் புறம்பாக வினேஷ் போகத்தின் எடை இருப்பதால் அவரைப் போட்டியிலிருந்து தகுதி நீக்கம் செய்வதாக அதிரடியாக அறிவித்தனர். இதன் மூலம் அவரது பதக்கம் வாய்ப்பு பறிபோனது.

ஒலிம்பிக்கில் தங்கம் வெல்லும் முதல் இந்திய வீராங்கனை என்ற மகத்தான சாதனையைப் படைக்கும் முனைப்புடன் தயாராகி வந்த வினேஷ் போகத்துக்கு, இந்தத் தகவல் பேரிடியாக விழுந்தது. ஏமாற்றத்துடன், கண்ணீரில் நிலைகுலைந்து போனார்.

இதற்கிடையே, முந்தைய நாள் இரவில் தொடர்ச்சியாக உடல் பயிற்சி செய்ததால் அவருக்கு நீர்ச்சத்து குறைபாடு ஏற்பட்டது. இதையடுத்து ஒலிம்பிக் கிராமத்தில் உள்ள கிளினிக்கில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. அவரை நேரில் சந்தித்து ஆறுதல்கூறிய இந்திய ஒலிம்பிக் சங்க தலைவர் பி.டி. உஷா, வினேஷ் இப்போது நன்றாக இருக்கிறார். அவருக்குத் தேவையான அனைத்து மருத்துவ மற்றும் உணர்வுபூர்வமான ஆதரவும் வழங்கப்படும் என்று கூறி இருந்தார்.

இந்நிலையில் மல்யுத்த போட்களிலிருந்து ஓய்வு பெறுவதாக இந்திய வீராங்கனை வினேஷ் போகத் அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் வலைதளத்தில், “அம்மா, நான் தோற்றுவிட்டேன்.. மல்யுத்தம் வென்று விட்டது… என்னை மன்னித்துவிடுங்கள். உங்கள் கனவு, என் தைரியம், அனைத்தும் உடைந்துவிட்டன, இனி என்னிடம் போராட சக்தி இல்லை.. குட்பை மல்யுத்தம் 2001-2024 … உங்கள் அனைவருக்கும் நான் என்றும் கடமைப்பட்டிருப்பேன், மன்னிக்கவும்…” என்று அதில் பதிவிட்டுள்ளார்.

வினேஷ் போகத்தின் இந்த ஓய்வு அறிவிப்பு ஒட்டு மொத்த இந்திய ரசிகர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

29 வயதான வினேஷ் போகத் அரியானாவைச் சேர்ந்தவர். காமன்வெல்த் விளையாட்டில் ஹாட்ரிக் தங்கம் வென்ற சாதனையாளர். பாலியல் சர்ச்சையில் சிக்கிய இந்திய மல்யுத்த சம்மேளன முன்னாள் தலைவரும், பா.ஜனதா முன்னாள் எம்.பி.யுமான பிரிஜ் பூஷனை கைது செய்யக்கோரி மல்யுத்த வீரர், வீராங்கனைகள் மாதக்கணக்கில் வீதிகளில் இறங்கி போராட்டம் நடத்தினர். அவற்றை முன்னின்று நடத்தியவர்களில் வினேஷ் போகத்தும் ஒருவர்.

இதனால் மல்யுத்த சம்மேளனம் தன்னை பழிவாங்கும் நோக்குடன் நடத்துவதாகக் குற்றம்சாட்டினார். மத்திய அரசு வழங்கிய விருதுகளைத் திருப்பி வழங்குவதாகக் கூறி பரபரப்பை ஏற்படுத்தினார். இப்படி பல்வேறு சவால்களையும், இன்னல்களையும் கடந்து ஒலிம்பிக் களம் புகுந்த வினேஷ் போகத்தின் பதக்க கனவு வெறும் 100 கிராம் எடையில் தகர்ந்து போனது ஒலிம்பிக் பதக்கக் கனவுடன் காத்திருந்த ஒட்டுமொத்த இந்தியர்களுக்கும் பேரதிர்ச்சியாக, இதயங்களை நொறுக்கும் சம்பவமாக அமைந்தது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *