
விக்கிரவாண்டி அருகேயுள்ள பெரியதச்சூர் கிராமத்தில் ஆயிரம் ஆண்டுகள் பழமைவாய்ந்த சோழர் கால பௌத்த, துவாரபாலகர் சிற்பங்கள் கண்டறியப்பட்டுள்ளதாக, விழுப்புரத்தைச் சேர்ந்த வரலாற்று ஆர்வலர் கோ.செங்குட்டுவன் தெரிவித்துள்ளார்.
விழுப்புரம் அருகேயுள்ள பெரியதச்சூர் கிராமத்தில், விழுப்புரத்தைச் சேர்ந்த வரலாற்று ஆர்வலர் கோ.செங்குட்டுவன் என்பவர், பெரியதச்சூரில் கலைவாணர் தெருவில். விநாயகர் கோவிலுக்கு வெளியே சாலையையொட்டி 2 சிற்பங்களை கண்டறிந்து ஆய்வு செய்தார்.
அந்த சிற்பங்களில் ஒன்றில், வலது காலை தொங்கவிட்டும், இடது காலை மடக்கியும், உத்குடி ஆசனத்தில் அமர்ந்து இருப்பதாக சிற்பம் உள்ளது என்றும் கோ.செங்குட்டுவன் தெரிவித்துள்ளார்.
மேலும், சிற்பத்தில், இடது கை, இடது காலின் மீது தொங்கவிட்ட நிலையில் காணப்படுகிறது எனவும், வலது கையில் அபய முத்திரை தெளிவில்லாமல் உள்ளதாகவும், சிற்பத்தின் தலைக்கு மேலே படம் எடுத்தாடும் பெரிய ஐந்து தலை நாகம் காணப்படுவதால், பௌத்த சிற்பம் எனவும், ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இப்பகுதியில் சைவம், வைணவம், சமணம் ஆகிய சமயங்களுடன், பௌத்தமும் வழிபாட்டில் இருந்துள்ளது என்றும் வரலாற்று ஆர்வலர் கோ.செங்குட்டுவன் தெரிவித்துள்ளார்.
மேலும், ஆயிரம் ஆண்டுகள் பழமைவாய்ந்த கலை, வரலாற்றுச் சின்னங்களான சிற்பங்களை, கிராம மக்கள் உரிய முறையில் பாதுகாக்க வேண்டும் என்றும் வரலாற்று ஆர்வலர் கோ.செங்குட்டுவன் வலியுறுத்தினார்.



