
பிரபல திரைப்பட நடிகரும் தே.மு.தி.க. தலைவருமான விஜயகாந்த் நவம்பர் மாதம் 18-ந்தேதி உடல்நலக்குறைவு காரணமாக நந்தம்பாக்கத்தில் உள்ள மியாட் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.
சில வாரங்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின் பூரண குணமடைந்து வீடு திரும்பி இருந்தார். இருமல், சளி மற்றும் தொண்டை வலி பாதிப்பு அவருக்கு இருந்த நிலையில், வழக்கமான மருத்துவ பரிசோதனைக்காகவே விஜயகாந்த் சென்றுள்ளதாக தேமுதிக தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டு இருந்தது.
இந்த நிலையில் கடந்த டிசம்பர் மாதம் 11ஆம் தேதி விஜயகாந்த் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். இது தொடர்பாக மியாட் மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், சென்னை மியாட் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த திரு.விஜயகாந்த் அவர்கள் பூரண குணம் அடைந்து இன்று வீடு திரும்பினார் என தெரிவிக்கப்பட்டு இருந்தது.
பின்னர் கடந்த டிசம்பர் 14-ஆம் தேதி நடைபெற்ற தேமுதிக பொதுக்குழு கூட்டத்தில் கலந்து கொண்ட விஜயகாந்த், அக்கட்சியின் நிறுவனத் தலைவராகவும், அவரது மனைவி பிரேமலதா விஜயகாந்த் தேமுதிக பொதுச்செயலாளராகவும் பொறுப்பேற்றனர். இந்நிலையில், மீண்டும் அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளதால் சிகிச்சைக்காக மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இது குறித்து தே.மு.தி.க. தலைமை கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், அவர் மிக நன்றாகவே இருக்கிறார். சமீபத்தில் சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய விஜயகாந்த்திற்கு பொதுவான பரிசோதனை செய்ய வேண்டி மருத்துவர்கள் அறிவுறுத்தலின் பேரில் தற்போது மருத்துவமனை வந்துள்ளார். இதனால் பொதுமக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை. அதேசமயம் வீணான வதந்திகளை முன்பு பரப்பியது போல் பரப்ப வேண்டாம் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் பரிசோதனை முடிந்து நாளை மறுநாள் வீடு திரும்புவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.



