Vijay TVK:தேர்தல் ஆணையத்தில் பகுஜன் சமாஜ் கட்சி புகார் மனு!

Advertisements

யானை சின்னத்தை, விஜய் முறைகேடாக தனது கட்சி கொடியில் பயன்படுத்தியதாக பகுஜன் சமாஜ் கட்சி குற்றம்சாட்டியுள்ளது.

சென்னை:நடிகர் விஜய் தமிழக வெற்றிக்கழகம் என்ற பெயரில் புதிய அரசியல் கட்சியை கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கினார். வரும் 2026-ம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டசபை தேர்தலில் தமிழக வெற்றிக்கழகம் போட்டியிட இருக்கிறது. இதற்கான முன்னெடுப்புகளை விஜய் தீவிரமாக மேற்கொண்டு வருகிறார்.

கட்சிக்கு 2 கோடி உறுப்பினர்களை சேர்க்கும் பணிகளும் முழு வீச்சில் நடந்து வருகிறது. அடுத்த மாதம் (செப்டம்பர்) 22-ம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் கட்சியின் முதல் மாநாட்டை பிரமாண்டமாக நடத்தவும் அவர் திட்டமிட்டுள்ளார்.

அதற்கு முன்பாக, கட்சி கொடியை அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சி சென்னை கிழக்கு கடற்கரை சாலை பனையூரில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் கடந்த 22 -ம் தேதி நடந்தது. இந்த நிகழ்ச்சியில் அக்கட்சியின் கொடியை நடிகர் விஜய் அறிமுகம் செய்து வைத்தார். அந்தக் கொடி சிவப்பு, மஞ்சள் என இரு வண்ணங்களில் மத்தியில் 2 போர் யானைகள் வாகை மலருடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், பகுஜன் சமாஜ் கட்சிக் கொடியில் ஏற்கனவே யானை சின்னம் பயன்படுத்தப்பட்டு வருவதாக அந்தக் கட்சியின் மாநிலத் தலைவர் பி. ஆனந்தன் எதிர்ப்பு தெரிவித்திருந்தார். பகுஜன் சமாஜ் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட யானை சின்னத்தை அசாம், சிக்கிம் தவிர வேறு எந்த மாநில கட்சிகளும் பயன்படுத்தக் கூடாது என்று தேர்தல் ஆணையம் சட்டத்திருத்தம் கொண்டு வந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார். மேலும், கட்சிக் கொடியில் இடம்பெற்றிருந்த யானைகளை அகற்றவில்லை என்றால் சட்ட ரீதியாக எதிர்கொள்வோம் என்றும் ஆனந்தன் தெரிவித்திருந்தார். இந்த நிலையில், பகுஜன் சமாஜ் தரப்பில் தேர்தல் ஆணையத்திடம் நடவடிக்கை கோரி மனு அளிக்கப்பட்டுள்ளது.

மனுவில்,

அம்பேத்கரின் கொள்கைகளை மக்களிடம் எடுத்துக் கூறி மக்களின் நம்பிக்கையும், வாக்குகளையும் பெற்று அங்கீகாரம் பெற்ற கட்சியாகும். எங்களது தேர்தல் சின்னமான யானை சின்னத்தை இந்தியா முழுக்க நாங்கள் கொடியிலும், தேர்தல் சின்னமாகவும் பயன்படுத்தி வருகிறோம். நீலக் கொடியும், யானை சின்னமும் பகுஜன் சமாஜ் கட்சியின் தேசிய அடையாளமாகும்.

யானை சின்னமானது அம்பேத்கர் தேர்ந்தெடுத்து தேர்தலில் போட்டியிட்ட சின்னமாகும். யானை சின்னத்துக்கு பகுஜன் சமாஜ் கட்சிக்கும் உணர்வுபூர்வமாக வரலாற்று உறவு உள்ளது. தற்போது தமிழகத்தில் புதிதாக கட்சித் தொடங்கியிருக்கும் விஜய் தனது கொடியை அறிமுகம் செய்தார். அதில், எங்களின் தேசிய அங்கீகாரம் பெற்ற யானை உருவம் இடம்பெற்றுள்ளது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் எந்த பதிலும், நடவடிக்கையும் விஜய் எடுக்காமல் இருக்கிறார். அரசியல் நாகரீகம் இல்லாமலும், சட்டவிரோதமாக ஒரு அங்கீகரிக்கப்பட்ட தேசிய கட்சியின் சின்னத்தை பயன்படுத்திய விஜய் மீது நடவடிக்கை எடுத்து அவரது கொடியில் உள்ள யானை சின்னத்தை அகற்ற வழிவகை செய்ய வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *