
ஈரோட்டில் நடைபெற்ற தமிழக வெற்றி கழக மக்கள் சந்திப்பு கூட்டத்தில் நடிகரும் அதன் தலைவருமான விஜய் ஆவேசமாக பேசினார் திமுக ஒரு தீய சக்தி தவெக ஒரு தூய சக்தி என மாறி மாறி குரல் கொடுத்தார். அதோடு மட்டுமல்ல முதல் முறையாக போது மேடையில் அதிமுக வையும் தாக்கி பேசினார். விஜயின் ஆவேசமான பேச்சு தமிழக அரசியல் களத்தில் விபரீதமான முடிவுகளை ஏற்படுத்தியிருக்கிறது.
தேர்தல் களத்தில் விஜய் சரியான பாதையில் பயணிக்கிறாரா? என்ற சந்தேகத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது.விஜயின் பேச்சு தொடர்பாக எடப்பாடி பழனிச்சாமி ஒரு பக்கமும் மு க ஸ்டாலின் ஒரு பக்கமும் தீவிர ஆலோசனை நடத்தி இருக்கிறார்கள் . இதன் பின்னணி குறித்து ஜெம் தொலைக்காட்சி வழங்கும் சிறப்பு செய்தி தொகுப்பை இப்போது பார்க்கலாம்.
தமிழக வெற்றி கழகத் தலைவர் விஜய் ஈரோடு பெருந்துறையில் நடந்த மக்கள் சந்திப்பு கூட்டத்தில் பேசும்போது அண்ணா எம்ஜிஆர் பெயரை பயன்படுத்த கூடாது என்று யாரும் சொல்வதற்கு உரிமை இல்லை. அவர்கள் தமிழகத்தின் சொத்து எம்ஜிஆரும் ஜெயலலிதாவும் திமுகவை தீய சக்தி என்று சொன்னது உண்மைதான். அண்ணன் செங்கோட்டையன் நம்முடன் வந்து சேர்ந்தது நமக்கு பெரிய பலம் அவரைப் போல் இன்னும் நிறைய பேர் சேர இருக்கிறார்கள். அவர்களுக்கு உரிய அங்கீகாரத்தை கொடுப்போம் என்றார் .
இது மட்டுமல்லாமல் திமுக ஒரு தீய சக்தி தவெக தூய சக்தி வருகிற தேர்தலில் திமுகவுக்கும் தமிழக வெற்றிக்கழகத்திற்கும் தான் போட்டி. களலத்தில் இல்லாதவர்கள் பற்றி எல்லாம் நான் பேச விரும்பவில்லை என்று விஜய் காரசாரமாக பேசினார். விஜய் பேசும் ஒவ்வொரு மேடைகளிலும் திமுகவுக்கும் , தமிழக வெற்றிக்கழகத்திற்கும் தான் போட்டி என்று பேசி வருவது அதிமுகவை அவர் அவமானப்படுத்துவதாகவே பார்க்கப்படுகிறது.
அதாவது போட்டிகளத்தில் அதிமுக அறவே இல்லை என்கிற ரீதியில் பேசி வருகிறார் . தற்பொழுது அண்ணா எம்ஜிஆர் ஜெயலலிதா ஆகியோர் எங்களுக்கும் உரிமையானவர்கள் என்ற கருத்தை தெரிவித்து இருக்கிறார். அது மட்டுமல்லாமல் செங்கோட்டையன் போல் இன்னும் பலர் கட்சியில் இணைவார்கள் என்றும் அவரது பேச்சு அனைத்தும் அதிமுகவுக்கு எதிராக கிளம்பி இருக்கிறது .
அதிமுக தரப்பில் மறந்தும் கூட விஜய்யை விமர்சனம் செய்வதில்லை . ஆனால், விஜய் சமீபகாலமாக அதிமுகவை மறைமுகமாக சீண்டி வருகிறார். தொடர்ந்து வரக்கூடிய மக்கள் சந்திப்பு கூட்டங்களிலும் இரண்டு திராவிட கட்சிகளுக்கும் எதிராக விஜய் பேசுவார் என தெரிகிறது . தற்பொழுது விஜயின் இந்த பேச்சு அதிமுக வட்டாரத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது.
அதிமுக தலைமை நிர்வாகிகள் ஏன் தமிழக வெற்றி கழகத்திற்கு பதிலடி கொடுக்காமல் அமைதி காத்திருக்கிறார்கள் என அதிமுக தொண்டர்கள் மனம் கொதிக்க தொடங்கி இருக்கிறார்கள் . இது அல்லாமல் அதிமுகவிலிருந்து யாரும் தமிழக வெற்றி கழகத்தில் இணைய போவதில்லை என்ற சூழ்நிலையில் பொது மேடையில் இன்னும் நிறைய பேர் வருவார்கள் என விஜய் சும்மா கொளுத்தி போடுகிறார் என்கிறார்கள் அதிமுகவினர் .
விஜய்யின் பேச்சு குறித்து அதிமுகபொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி முன்னாள் அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தினார் . முன்னதாக அதிமுகவுடன் தமிழக வெற்றி கழகம் கூட்டணி சேரலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவியதால் அதிமுக தரப்பில் இருந்து யாரும் நடிகர் விஜய் குறித்தோ தமிழக வெற்றி கழகம் குறித்தோ தாக்கிப் பேசவில்லை . தற்பொழுது அவர் பொது மேடையிலேயே அதிமுகவுக்கு எதிராக பேசத் தொடங்கி இருக்கிறார்.
இது பற்றி எடப்பாடி பழனிச்சாமி ஆலோசனை செய்த போது தற்பொழுது அதிமுகவில் போட்டியிட விருப்பமனு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. அந்த பணிகள் முடிவடையட்டும் அதன் பிறகு விஜய் பற்றி யோசிக்கலாம் என கருத்து தெரிவித்திருக்கிறார் .
இதுகுறித்து முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் கருத்து தெரிவிக்கும் பொழுது, விஜய் தனது கட்சி தொண்டர்களுக்கு நம்பிக்கை ஊட்டுவதற்காக சில விஷயங்களை பேசுகிறார்.
அதனை நாங்கள் பெரிது படுத்த விரும்பவில்லை. அதிமுகவில் இருந்து இன்னும் பலர் தமிழக வெற்றிக்கழகத்தில் இணைவார்கள் என்று அவர் பேசி வருகிறார். ஆனால் இதுவரை யாராவது அங்கு போய் சேர்ந்தார்களா அவரை நம்பி யாரும் போக மாட்டார்கள் . விஜய் பாதை தவறி செல்கிறார். முதலில் தனது தொண்டர்களை நம்பி கட்சியை தொடங்கினார். தற்பொழுது மாற்றுக் கட்சி தலைவர்களை எதிர்த்து பேசுவதன் மூலம் வேறு அரசியல் களத்திற்கு மாறி இருக்கிறார் என தெரிவித்துள்ளார் .
இதற்கிடையே திமுக தரப்பிலும் முதலமைச்சர் மு க ஸ்டாலின் முக்கிய அமைச்சர்களுடன் விஜய் பேச்சு குறித்து ஆலோசனை நடத்தியிருக்கிறார் . இந்த ஆலோசனையின் போது விஜய் பேச்சால் திமுகவுக்கு நஷ்டம் எதுவும் இல்லை. அவர் விவரம் தெரியாமல் பேசுகிறார். தற்பொழுது அவர் அதிமுக பற்றி பேசி வருவதால் அது அதிமுகவிற்கு தான் பலவீனமாகும். அது மட்டுமல்லாமல் திமுகவின் வாக்கு வங்கி ஒருபோதும் மாறாது என்கிற ரீதியில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றிருக்கிறது .
இதுவல்லாமல் தற்பொழுது விஜய்யின் பேச்சுக்கு பதிலடி எதுவும் தர வேண்டாம். அதிமுகவும் தமிழக வெற்றி கழகமும் இனி ஒருவரை ஒருவர் மோதிக் கொள்வார்கள் என்றும் ஆலோசனை கூட்டத்தில் கருத்து தெரிவிக்கப்பட்டு இருக்கிறது . இதற்கிடையே விஜய் பேச்சு குறித்து அரசியல் பார்வையாளர்கள் புதுவிதமான கருத்து ஒன்றை தெரிவிக்கிறார்கள். அதாவது, திமுகவிற்கு எதிராக பேசினால் திமுக மீது அதிருப்தி உள்ளவர்கள் வாக்கு தனக்கு கிடைக்கும் என அவர் குறி வைக்கிறார். அதே சமயத்தில் அதிமுகவையும் தாக்கி பேசுகிறார் .
இதே வேளையில் அதிமுகவும் திமுகவுக்கு எதிராக பிரச்சாரம் செய்து வருகிறது . வழக்கமாக திமுகவுக்கு எதிரான கருத்து உள்ளவர்கள் அதிமுகவிற்கு வாக்களிக்கும் பட்சத்தில் தற்பொழுது அந்த வாக்கு வங்கிகள் அதிமுக தமிழக வெற்றி கழகம் என இரண்டாக பிரிகிறது. இதன் மூலம் அதிமுகவும் வெற்றி பெற முடியாது. தமிழக வெற்றி கழகமும் வெற்றி பெற முடியாது என்ற சூழ்நிலை தான் ஏற்படும் . எனவே விஜய்யின் பேச்சு திமுகவுக்கு தான் லாபம் என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள் .


