நடிகர் கமல்ஹாசனின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிப்பில் இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில், நடிகர் சிவகார்த்திகேயன், நடிகை சாய் பல்லவி நடித்த, ‘அமரன்’ திரைப்படம் தீபாவளி அன்று வெளியானது.
மறைந்த ராணுவ வீரர் மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கையை மையமாக வைத்துத் தயாரிக்கப்பட்டுள்ள இப்படத்தில், முகுந்த் வரதராஜன் கதாபாத்திரத்தில் சிவகார்த்திகேயனும், முகுந்தின் மனைவி இந்து ரெபேக்கா கதாபாத்திரத்தில், சாய் பல்லவியும் நடித்துள்ளனர்.
‘அமரன்’ படத்தைப் பார்த்துவிட்டுச் சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவியின் நடிப்பை பலதரப்பினரும் பாராட்டி வருகின்றனர். சினிமா பிரபலங்கள் பலரும் இப்படக்குழுவை நேரில் அழைத்தும் பாராட்டினர்.
திரையரங்குகளில் வெளியாகி மக்களின் பெரும் ஆதரவுடன் வசூலில் சாதனை படைத்த ‘அமரன்’ அடுத்த மாதம் 5 அல்லது 11-ந்தேதி ஓடிடியில் வெளியாக உள்ளது.
இந்நிலையில், அமரன் பட இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமியை சந்தித்த நடிகரும், தமிழக வெற்றிக்கழகத் தலைவருமான விஜய் அழைத்துப் பாராட்டி உள்ளார். அப்போது விஜய், கொஞ்சம் முன்னாடி வந்திருந்தா நாம ஒரு படம் பண்ணிருக்கலாம். I Am Very Proud Of You எனக் கூறியுள்ளார். அரசியலில் முழுவதுமாக ஈடுபட்டுள்ள விஜய், வினோத் இயக்கத்தில் ‘விஜய் 69’ படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.