
தமிழக அரசியல் களத்தில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் பொறுப்பேற்றுள்ள முதல்வர் விஜய், தனது முதல் கோப்பில் கையெழுத்திட்ட விசயங்கள் விவாதப் பொருளாகி உள்ளன. அது தொடர்பான செய்தியைத் தான் விரிவாகப் பார்க்கப் போகிறோம்…
விஜய்யின் தேர்தல் பிரச்சாரத்தில் முன்வைக்கப்பட்ட மிக முக்கியமான வாக்குறுதிகளில் ஒன்றான. “இலவச மின்சாரம்” தொடர்பான அரசாணை வெளியாகி உள்ளது. இந்த அறிவிப்பு மக்களிடையே வரவேற்பையும் அதே சமயம் விவாதங்களையும் கிளப்பியுள்ளது.
சரி அந்த வாக்குறுதி என்ன? யதார்த்தம் என்ன? 2026 தேர்தல் களத்தில் “அனைவருக்கும் 200 யூனிட் இலவச மின்சாரம்” என்ற முழக்கத்தை நடிகர் விஜய் முன்வைத்தார். ஆனால், அவர் பதவியேற்ற நாளில் வெளியிட்ட அரசாணைபடி, 500 யூனிட் வரை மின்சாரம் பயன்படுத்துபவர்களுக்கு மட்டுமே இந்த 200 யூனிட் இலவச மின்சார சலுகை பொருந்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம், நடுத்தர மற்றும் ஏழை எளிய குடும்பங்கள் அதிகளவில் பயனடைவார்கள் என்பது அரசின் வாதமாக உள்ளது. ஒரு வீட்டில் இரு மாதங்களுக்கு 500 யூனிட்டிற்குள் பயன்பாடு இருந்தால், அவர்கள் முதல் 200 யூனிட்டிற்கு கட்டணம் செலுத்தத் தேவையில்லை. 300 யூனிட்டுகளுக்கு மட்டும் பணம் செலுத்தலாம். இது பல குடும்பங்களின் மின்சாரச் சுமையைக் கணிசமாகக் குறைக்கும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.
அந்த அறிவிப்பில் உள்ள மற்றொரு முக்கிய அம்சம் என்னவென்றால், இந்த அறிவிப்பு 500 யூனிட்டிற்கு மேல் மின்சாரம் பயன்படுத்துபவர்களுக்குப் பின்னடைவாக அமைந்துள்ளது. இதுவரை தமிழகத்தில் அமலில் இருந்த நடைமுறைப்படி, எவ்வளவு யூனிட் பயன்படுத்தினாலும், உதாரணத்துக்கு 2 ஆயிரம் யூனிட் மின்சாரம் நாம் பயன்படுத்தினாலும் முதல் 100 யூனிட் இலவசமாக வழங்கப்பட்டு வந்தது.
ஆனால், நடிகர் விஜய் அரசின் உத்தரவுப்படி, 500 யூனிட்டைத் தாண்டி மின்சாரம் பயன்படுத்துபவர்களுக்கு இனி அந்த 100 யூனிட் இலவச மின்சார சலுகையும் கிடையாது. அதாவது, 501 யூனிட் பயன்படுத்தும் ஒரு பயனாளி, மொத்த யூனிட்டிற்கும் கட்டணம் செலுத்த வேண்டிய நிலை ஏற்படும் என்று சமூக ஊடகங்களில் விமர்சனம் எழுந்தது. இதையடுத்து, இந்தச் சட்டத்தில் விஜய் கையெழுத்திட்ட சில மணி நேரத்தில், தமிழ்நாடு அரசு விளக்கம் அளித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கு.
அதாவது 500 யூனிட்டுக்கு மேல் மின்சாரம் நுகரப்பட்டால் 200 யூனிட் மின்சாரம் இலவசம் கிடையாது என்றும், ஆனால் 100 யூனிட் இலவச மின்சாரம் தொடரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த “கட்-ஆஃப்” முறை, அதிக மின்சாரம் பயன்படுத்தும் வீடுகளுக்கு கூடுதல் நிதிச்சுமையை ஏற்படுத்தும் என அஞ்சப்படுகிறது. குறிப்பாக கோடைக் காலங்களில் ஏசி போன்ற சாதனங்களைப் பயன்படுத்தும் நடுத்தர வர்க்கத்தினர் 500 யூனிட்டைத் தாண்டும் போது, இந்த இலவச சலுகையை முற்றிலும் இழக்க நேரிடும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.
இது நடுத்தரவர்க்கத்தினரிடையே கோபத்தை ஏற்படுத்தியிருக்கு. எதற்காக இந்த நிபந்தனை? என்றால் மின்சாரத்தை சிக்கனமாகப் பயன்படுத்துபவர்களை ஊக்குவிக்கவும், வசதி படைத்தவர்கள் அதிக மின்சாரம் பயன்படுத்தும் போது அவர்களுக்கு மானியம் வழங்குவதைத் தவிர்க்கவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் சொல்கிறார்கள்.
இருப்பினும், “அனைவருக்கும்” என்று வாக்குறுதி அளித்துவிட்டு, இப்போது “பயன்பாட்டு வரம்பு” நிர்ணயம் செய்திருப்பது அரசியல் ரீதியாக விமர்சனங்களைச் சந்தித்து வருகிறது. எதிர்க்கட்சிகள் இதனை “மக்களுக்கு வைக்கப்பட்ட செக்” என்று விமர்சிக்கத் தொடங்கியுள்ளன.
அதேபோல் முதல்வர் விஜய்யின் மற்ற முக்கிய கையெழுத்துகள் என்னவென்று பார்க்கலாம்…. மின்சார அறிவிப்பு ஒருபுறம் விவாதிக்கப்பட்டாலும், முதல்வர் விஜய் கையெழுத்திட்ட மற்ற இரண்டு கோப்புகள் பாதுகாப்பு மற்றும் சமூக நலன் சார்ந்த முக்கிய நடவடிக்கைகளாகப் பார்க்கப்படுகின்றன.
அதேமாதிரி, பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்கவும், பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் பிரத்யேகமாக ‘வேலுநாச்சியார் அதிரடிப்படை’ உருவாக்கப்பட உள்ளது. வீரமங்கை வேலுநாச்சியாரின் பெயரில் அமையும் இந்த படை, மாநிலம் முழுவதும் பெண்களின் பாதுகாப்பிற்கு அரணாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழகத்தில் இளைஞர்களைச் சீரழிக்கும் போதைப்பொருள் புழக்கத்தை முற்றிலுமாக ஒழிக்க ‘போதைப்பொருள் தடுப்புப் படை’ அமைக்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இது சமூகத்தின் எதிர்கால நலன் கருதி எடுக்கப்பட்ட மிக முக்கியமான நடவடிக்கையாக பேசுறாங்க.
முதல்வர் விஜய் போட்ட முதல் கையெழுத்துகள் அதிரடியாகவும், அதே சமயம் விவாதப் பொருளாகவும் மாறியுள்ளன. 200 யூனிட் இலவச மின்சாரம் பலருக்கு நிம்மதி அளித்தாலும், 500 யூனிட் என்ற வரம்பு வரும் நாட்களில் பெரும் விவாதங்களை உருவாக்கும்.. எவ்வாறாயினும், வேலுநாச்சியார் படை மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகள் மாநிலத்தின் பாதுகாப்புப் பாதையில் ஒரு புதிய மைல்கல்லாக அமையும் என்பதில் ஐயமில்லை.



