
ரோட்டர்டாம் சர்வதேச திரைப்பட விருது 2025-க்கான மிக உயரிய விருதாகக் கருதப்படும் NETPAC விருதினை வெற்றிமாறன் தயாரித்துள்ள ‘Bad Girl’ திரைப்படம் வென்றுள்ளது.
இயக்குநர் வெற்றிமாறனிடம் உதவி இயக்குநராக இருந்த வர்ஷா பாரத் இயக்கியுள்ள திரைப்படம் ‘Bad Girl’. இந்தப் படத்தை வெற்றிமாறன் மற்றும் அனுராக் காஷ்யப் இணைந்து தயாரித்துள்ளனர்.
படத்துக்கு அமித் திரிவேதி இசையமைத்துள்ளார். படத்தில் அஞ்சலி சிவராமன், சாந்தி பிரியா, ஹ்ரிது ஹாரூன், Teejay அருணாசலம், சஷாங்க் பொம்மிரெட்டிப்பள்ளி, சரண்யா ரவிச்சந்திரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
இந்தப் படத்தின் டீசர் அண்மையில் வெளியாகி விவாதங்களை ஏற்படுத்தியது. டின்ஏஜ் பெண் ஒருவரின் மன ஓட்டங்களையும், காதலையும், உணர்வுகளையும் வெளிபடுத்தும் விதமாக இருந்த டீசரில், பாலியல் உணர்வுகள் சார்ந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் விவாதங்களை எழுப்பின.
இந்நிலையில் இந்தப் படம் ரோட்டர்டாம் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டு பார்வையாளர்களின் வரவேற்பை பெற்றது.
இதையடுத்து, ரோட்டர்டாம் திரைவிழாவில் வழங்கப்படும் உயரிய விருதான NETPAC (Network for the Promotion of Asian Cinema) விருது வழங்கப்பட்டுள்ளது. இந்த விருது தமிழ் சினிமாவுக்கு கிடைத்த அங்கீகாரமாகப் பார்க்கப்படுகிறது.
