
வருகின்ற சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு பாஜகவின் – வேட்பாளர்கள் குறித்து எடப்பாடியிடம் ஆலோசனைகள் மேற்கொள்வதற்கு சென்னை வந்த பியூஷ் கோயல் அரசியல் சார்ந்தும் , தவெக விஜய் சார்ந்தும் பல செய்திகளை செய்தியாளர்கள் சந்திப்பின்போது பேசினார்..
குறிப்பாக பாஜகவுக்கு தொகுதி பங்கீடு செய்ததைத் தொடர்ந்து மயிலாப்பூரில் பிரச்சாரம் மேற்கொண்ட அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியுடன் தமிழிசையும் இருந்தார்.
அந்தத் தொகுதி பாஜகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், தமிழிசைதான் வேட்பாளாரா எனும் கேள்வி எழுந்த நிலையில், அதனை பாஜக தலைமை அறிவிக்கும் என தமிழிசை பதில் கொடுத்தார்.
இந்தச் சூழலில் பாஜக வேட்பாளர்கள் தேர்வு குறித்து ஆலோசனை மேற்கொள்ள பியூஷ் கோயல் தமிழ்நாட்டிற்கு வருகை தந்துள்ளார். அப்போது வேட்பாளர்கள் பட்டியல் இரண்டு தினங்களில் முடிவாகி அறிவிக்கப்படும் எனத் தெரிவித்தார்.
தொடர்ந்து விஜய் தொடர்பான கேள்விக்கு பதில் அளித்து பேசிய அவர், “தமிழ்நாட்டின் மக்கள், கலாச்சாரம், அரசியல் பற்றிய முழுமையான புரிதல் விஜய்க்கு இருப்பதாக தெரியவில்லை.
எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதா ஆகியோர் மக்களுக்காக பல ஆண்டுகள் உழைத்து, அரசியல் அனுபவம் பெற்று முதலமைச்சரானார்கள். ஆனால் , விஜய் தனது கனவு உலகில் இருக்கிறார் என நினைக்கிறேன்.
அவர் தனது ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக இருக்கிறார். ஆனால், அது வாக்குகளாக மாறாது. விஜயகாந்த், கமல் போன்றுதான் விஜய்யும். அவர் மூன்று முதல் நான்கு தொகுதிகளுக்கு மேல் வெல்ல வாய்ப்பில்லை என்றே நினைக்கிறேன்” எனத் தெரிவித்தார்…



