இதுதான் துய சக்தியா முதல்வரே.. அதிமுகவின் ஊழல் பெருச்சாளிகள்.!

Advertisements

தி.மு.க ஒரு தீய சக்தி, த.வெ.க ஒரு தூய சக்தி.- இதுதான் தமிழக முதல்வர் விஜய் தேர்தல் பிரசாரங்களில் அதிகம் பயன்படுத்திய வசனம். ஊழல் இல்லாத, கரைபடியாத கரங்களிடம் ஆட்சியை ஒப்படையுங்கள் என மக்களிடம் பிரசாரம் செய்து ஆட்சியைப் பிடித்திருக்கும் தமிழக வெற்றிக் கழகம், ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான அ.தி.மு.க புள்ளிகளை அதன் அமைச்சரவையில் அமரவைக்க ஆயத்தமாகிறது. பதவியேற்ற அமைச்சர்களுக்கு இலாகா ஒதுக்கப்பட்டிருக்கும் சூழலில், அடுத்தகட்ட பட்டியலில் அ.தி.மு.க-வினர் இடம்பெற அதிக வாய்ப்பிருப்பதாகச் சொல்லப்படுகிறது.

2026 சட்டமன்றத் தேர்தலில் களமிறங்கிய தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களில் வென்று, காங்கிரஸ், கம்யூனிஸ்ட்டுகள், வி.சி.க., ஐ.யூ.எம்.எல் என 121 உறுப்பினர்களின் ஆதரவைப் பெற்ற ஆட்சி அமைத்தது. பிறகு, சட்டமன்றத்தில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பின்போது அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் உத்தரவை மீறி 25 அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்கள் த.வெ.க ஆட்சிக்கு ஆதரவளித்தனர்.

த.வெ.க ஆட்சிக்கான ஆதரவு 144-ஆக எகிறியது. அதைத் தொடர்ந்து, வாக்கெடுப்பில் த.வெ.க அரசுக்கு ஆதரவளித்த எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம், சி.விஜயபாஸ்கர் உள்ளிட்ட அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்களை விஜய் அமைச்சரவையில் இடம்பெறவைக்க விருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆகையால்தான் தமிழக அரசின் முக்கியமான துறைகளாகக் கருதப்படும் வீட்டு வசதி, மதுவிலக்கு, உயர்கல்வி, போக்குவரத்து, பத்திரப்பதிவு, பால்வளம் உள்ளிட்ட துறைகள், த.வெ.க-வின் சீனியர்களுக்கு வழங்கப்படவில்லை.

108 தொகுதிகளில் மட்டும் வென்ற விஜய், காங்கிரஸ் மற்றும் பிற கட்சிகளின் ஆதரவைப் பெற்று தமிழக முதல்வராகப் பொறுப்பேற்றார். பெரும்பான்மை எண்ணிக்கையான 118-க்கு மிக நெருக்கமான எண்ணிக்கையிலான எம்.எல்.ஏ-க்களே தமிழக வெற்றிக் கழகத்துக்கு இருப்பதால் ஓரிருவர் பின்வாங்கினாலும் ஆட்சி கவிழும் அபாயம் இருக்கிறது. அதைப் போக்க த.வெ.க சீனியர் ஒருவர் மூலம் அ.தி.மு.க-வை உடைத்து, அந்தக் கட்சி எம்.எல்.ஏ-க்களின் ஆதரவு பெறப்பட்டிருக்கிறதோ என்ற கேள்வி தமிழக அரசியல் களத்தில் நிலவுகிறது.

அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடியிக்கு எதிராக எம்.எல்.ஏ-க்களைத் திரட்டியிருக்கும் சி.வி.சண்முகம், எஸ்.பி. வேலுமணி ஆகியோரை விஜய் சந்தித்தார். ஸ்டாலின், சீமான், அன்புமணி, வைகோ எனக் கட்சித் தலைமைகளைச் சந்தித்த விஜய், இவர்களை ஏன் சந்திக்க வேண்டும்… அப்படியென்றால், ஆட்சிக் கவிழ்ப்பு அபாயத்தைத் தவிர்க்கப் பேச்சுவார்த்தை நடத்தி, அ.தி.மு.க-வை உடைத்திருக்கிறதா தமிழக வெற்றிக் கழகம்.

குறிப்பாக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட்டுகள், வி.சி.க., ஐ.யூ.எம்.எல் எம்.எல்.ஏ-க்களால் பெரும்பான்மை எண்ணிக்கை கிடைத்த பின்னரும், நேர்வழியில் வராத அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்களின் ஆதரவைப் பெறுவது ஏன் இப்படி, அடுக்கடுக்கான கேள்விகள் எழுகின்றன. சி.வி.சண்முகம், எஸ்.பி. வேலுமணி தரப்பின் எம்.எல்.ஏ-க்களை விஜய் சந்தித்த நேரமும் கவனிக்கவேண்டியிருக்கிறது. நம்பிக்கை வாக்கெடுப்புக்கு முன் தினம், அந்த 25 எம்.எல்ஏ-க்களை நேரில் சந்தித்தார் தமிழ்நாடு முதல்வர் விஜய். வாக்கெடுப்பு முடிந்த பின்னர், அந்தக் குழுவுக்கு அமைச்சரவையில் இடமளிக்கப் பேச்சுவார்த்தை நடக்கிறது.

ஆக, அ.தி.மு.க கொறடா உத்தரவை மீறிய எம்.எல்.ஏ-க்களின் ஆதரவைப் பெற்று, அவர்களுக்கு அமைச்சரவையில் விரைவில் இடம் கொடுக்கவிருக்கிறது த.வெ.க. விஜய் மேற்கொள்ளும் அரசியல் முழுக்க முழுக்க சந்தர்ப்பவாதம் தான். ஆட்சிக்கு வருவதற்கு முன்பு அ.தி.மு.க-வை பா.ஜ.க தலைமையில் செயல்படும் ஓர் அணியாகக் குற்றம் சாட்டினார். ஊழலை ஒழிப்பேன்; மக்கள் பணத்தில் ஒரு ரூபாய் கூடத் தொடமாட்டேன்; யாரையும் ஊழல் செய்ய விட மாட்டேன் எனப் பதவியேற்கும்போதே உத்தரவாதமும் அளித்தார்.

ஆனால், முதல்வர் விஜய்யின் அமைச்சரவையில் இடம்பெறப்போகும் அ.தி.மு.க முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி. வேலுமணி, விஜயபாஸ்கர் உள்ளிட்டவர்கள் மீது எண்ணற்ற லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குகள் இருக்கின்றன..சென்னை, கோவை மாநகராட்சிகளின் ஊழல்களில் ரூபாய்.98 கோடி குற்றப்பத்திரிகை தயாராக இருக்கிறது. அறப்போர் தொடுத்த ஸ்மார்ட் சிட்டி, எம்.சாண்ட் ஊழல் புகார்களில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி மீது எப்.ஐ.ஆர் மட்டும் போட்டுவிட்டு குற்றப்பத்திரிகை தயார் செய்யாமல் தி.மு.க அரசு தனது காலத்தை முடித்தது.

எஸ்.பி.வேலுமணி மீது பதிவு செய்யப்பட்ட சொத்துக் குவிப்பு வழக்கில் எப்.ஐ.ஆர் மட்டும் போட்டுவிட்டு அதன் மீதும் இன்று வரை குற்றப்பத்திரிகை தயார் செய்யப்படவில்ல. இதற்காக அறப்போர் இயக்கம் தொடர்ந்து நீதிமன்றங்களில் போராடி முதல் புகாரில் குற்றப்பத்திரிகை வரையிலும், இரண்டாம் புகாரில் எப்.ஐ.ஆரும் பதியவைத்தது.தி.மு.க அரசும், மத்திய பா.ஜ.க அரசும் முன்னாள் அமைச்சர் வேலுமணியை அவர் மீதான ஊழல் குற்றச்சாட்டுக்களில் இருந்து காப்பாற்றியது போல, புதிய அரசையும் காப்பாற்றப் போகின்றனவா… அல்லது, `ஊழல் ஒழிப்பு என்பது சொல் அல்ல செயல் என்று நிரூபிக்க விருக்கின்றனவா… இதற்கிடையில், த.வெ.க தலைவர் விஜய்யோ, எஸ்.பி. வேலுமணிக்கு என்ன இலாகா கொடுக்கலாம் என்ற ஆலோசனையில் இருக்கிறார் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

த.வெ.க அமைச்சரவையில் அ.தி.மு.க-வை அமர்த்தும் முன்னெடுப்புக்கு எதிர்ப்பு தெரிவித்திருக்கும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளர் ரவிக்குமார், அ.தி.மு.க பொதுச் செயலாளராக இருக்கும் பழனிசாமிக்கு, கட்சியின் கொறடாவை நியமிக்கும் அதிகாரம் உண்டு. அவரால் வழங்கப்படும் கொறடா உத்தரவை, கட்சியின் எம்.எல்.ஏ-க்கள் பின்பற்ற வேண்டும். எனவே, கட்சித் தலைமையின் உத்தரவுக்கு மாறாக, த.வெ.க அரசுக்கு ஆதரவாக வாக்களித்த 25 எம்.எல்.ஏ-க்களும், அரசியலமைப்பின் 10-வது அட்டவணையின்கீழ் தகுதிநீக்க நடவடிக்கைகளை எதிர் கொள்ளவேண்டும்.

அத்தகைய எம்.எல்.ஏ-க்களை அமைச்சரவையில் சேர்க்க முதல்வர் விரும்பினால், அரசியலமைப்பு ரீதியாக நேர்மையான வழி என்னவெனில், அவர்கள் முதலில் தங்களது உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு, பின்னர் அதிகார பூர்வமாக த.வெ.க-வில் இணைந்து, இடைத் தேர்தலைச் சந்திக்கலாம் என்று தெரிவித்திருக்கிறார்.. என்ன செய்யப்போகிறார் முதல்வர் விஜய்..

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *