விஜய்யை வைத்து காங்கிரஸ் ஆடும் ஆட்டம்..! உடையும் ‘இந்தியா’ கூட்டணி..!

Advertisements

தமிழகத்தில் த.வெ.க தலைவர் விஜய்யை முன்னிறுத்தி காங்கிரஸ் ஆடும் அரசியல் ஆட்டம், தேசிய அரசியலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதன் விளைவாக காங்கிரஸ் இல்லாத மூன்றாவது அணியை உருவாக்க எதிர்க்கட்சிகள் தயாராகி விட்டன.  இது தொடர்பாக  விளக்கமான செய்தியைப் பார்க்கலாம்

நடந்து முடிந்த தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றது. ஆனால், ஆட்சியமைக்க பெரும்பான்மை இல்லாமல் தவித்துக் கொண்டிருந்த தவெகவுக்கு முதலில் கை கொடுத்தது காங்கிரஸ். இதற்கு என்ன காரணம் என்று கூறிய காங்கிரஸ் கட்சி,

 “தமிழகத்தில் பாஜக வந்துவிடக்கூடாது என்பதற்காகவே இந்த முடிவை எடுத்திருக்கிறோம்” என்கிற விளக்கத்தை கொடுத்தது.  ஆனால், “ இரண்டு அமைச்சரவை இடங்களுக்கு ஆசைப்பட்டு முதுகில் குத்திவிட்டதாக திமுகவினர் கொதிக்கிறார்கள். மேற்கு வங்க தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு எதிராக  காங்கிரஸும், இடது சாரிகளும் தனித்தனியாக  போட்டியிட்டன.
இதேபோல் பஞ்சாபிலும், டெல்லியிலும், கேரளாவிலும் தனித்தனியாக வரிந்து கட்டிக் கொண்டு தேர்திலில் போட்டியிட்டன. அப் போதே கூட்டணி உடைந்து விட்டதாக அரசியல் பார்வையாளர்கள் கருத்துத் தெரிவித்தனர். அந்த விரிசல் மெல்ல மெல்ல அதிகமாகி இப்போது சுக்கு நூறாகும் நிலைக்கு இந்தியா கூட்டணி வந்துவிட்டது.
இதன் காரணமாக தேசிய அளவில் ‘இண்டியா’ கூட்டணிக்குள் இருக்கும் கட்சிகள் தங்களுக்குள் இருக்கும் பிணைப்புகள் என்ன என்பது குறித்து கேள்விகளையும் அய்யங்களையும் எழுப்பி வருகின்றன. 2026 தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணியில் இருந்த காங்கிரஸ், தேர்தல் முடிந்தவுடன்  தனிப் பெரும்பான்மை கிடைக்காத த.வெ.கவுக்கு ஆட்சி அமைக்க கைக் கொடுத்தது. ஆனால் கூட்டணி தர்மத்தை மதிக்காமல் மாற்று அணிக்கு தாவிச் சென்று ஆதரவு தெரிவித்த

காங்கிரஸ் மீது திமுகவினர் கடும் கோபத்தில் உள்ளனர்.  காங்கிரஸ் குறித்து சமூக வலைதளங்களில் திமுகவினர் கடுமையாக வசை பாடிக் கொண்டிருக்கிறார்கள் . இந்த நிலையில்தான், நாடாளுமன்ற மக்களவையில் தங்களது எம்.பி.க்கள் அமரும் இடத்தை மாற்றி அமைக்கக் கோரி திமுக தரப்பில் சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு கனிமொழி கடிதம் எழுதினார்.
அதேநேரத்தில் மேற்கு வங்கம், கேரளா போன்ற மாநிலங்களில் பிராந்திய கட்சிகளும் காங்கிரஸும் எதிரெதிராக மோதிக்கொண்டாலும், தேசிய அளவில் கூட்டணியில் நீடிப்பதைப் போல தமிழகத்திலும் தொடரலாம் என காங்கிரஸ் கணக்கு போட்டது. ஆனால், நாடாளுமன்றத்தில் கூட காங்கிரஸுடன் ஒட்டி அமர திமுகவுக்கு விருப்பம் இல்லாத அளவுக்கு  பகை அதிகரித்துவிட்டது.

இதுதொடர்பாக, திமுக எம்பி கனிமொழி சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு எழுதிய கடிதத்தில் “ மாறிவரும் அரசியல் சூழல்களின் காரணமாகவும், காங்கிரஸுடனான கூட்டணி முடிவுக்கு வந்துவிட்டதாலும், அவையில் அவர்களுக்கு அருகில் அமர்வது சரியல்ல என குறிப்பிட்டுள்ளார்.

திமுக உறுப்பினர்கள் தங்களது கடமைகளை சரியாகச் செய்ய ஏதுவாக தனியாக அமரும் வசதி செய்து தரப்பட வேண்டும்” என கனிமொழி கடிதத்தில் தெரிவித்துள்ளார். மம்தா பானர்ஜி போன்ற தலைவர்கள் ‘இண்டியா’ கூட்டணியை மீண்டும் பலப்படுத்த முயன்று வரும் வேளையில், இந்த விரிசல் காங்கிரஸுக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்தில் சமாஜ்வாடி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் கொல்கத்தா சென்று மம்தா பானர்ஜியை சந்தித்ததுடன், ஸ்டாலின் மற்றும் மம்தாவுடன் இருக்கும் படங்களைப் பகிர்ந்து, “கடினமான காலங்களில் ஒருவரை ஒருவர் கைவிடுபவர்கள் நாங்கள் அல்ல” என எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். இது காங்கிரஸுக்கு விடுக்கப்பட்ட மறைமுக எச்சரிக்கையாகவே பார்க்கப்படுகிறது.

இதுகுறித்து தங்கள் கருத்தை தெரிவித்துள்ள இண்டியா கூட்டணி தலைவர்கள், “பாஜகவை வீழ்த்த எதிர்க்கட்சிகள் ஒன்றாக இருக்க வேண்டிய நேரத்தில், கூட்டணி கட்சிகளுடன் காங்கிரஸ் முரண்படுவதாக குற்றம் சாட்டி வருகின்றனர். மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜி,  ஜம்மு காஷ்மீரில் உமர் அப்துல்லா, ஜார்கண்ட் ஹேமந்த் சோரன், டெல்லி அரவிந்த் கேஜ்ரிவால், உத்தரபிரதேசத்தில் அகிலேஷ் யாதவுடன் என பல்வேறு தலைவர்களுடன் காங்கிரஸ் மோதல் போக்கை கடைபிடித்து வருவதாக விமர்சனம் எழுந்துள்ளது.

இப்போது திமுகவுடனும் காங்கிரஸ்  முரண்பட்டு நிற்கிறது. இதனால் காங்கிரஸ் இல்லாத ஒரு மூன்றாவது அணியை உருவாக்க மற்ற எதிர்க்கட்சிகள் தயாராகி  வருகின்றன.முன்பெல்லாம் இண்டியா கூட்டணியின் தலைமைப் பொறுப்பை மாநிலக் கட்சிகளின் தலைவர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தால், காங்கிரஸுக்கு ஆதரவாக திமுக நிற்கும். தற்போது அதுவும் இல்லாமல் ஆகிவிட்டது” என்றனர்.

இதுகுறித்து காங்கிரஸ் வட்டாரங்கள் கூறுகையில், “தமிழகத்தில் மதவாத சக்திகள் கால் பதிப்பதைத் தடுப்பதற்காகவே இந்த கருத்தியல் மாற்றம் என வெளியில் சொன்னாலும், உண்மையில் திமுக கூட்டணியில் இருந்து வெளியேற காங்கிரஸ் நீண்ட நாட்களாகவே சமயம் பார்த்துக் கொண்டிருந்தது.

மேலும், திமுக கூட்டணியில் தங்களுக்கு உரிய மரியாதை கிடைப்பதில்லை என்றும், ஆட்சி மற்றும் அதிகாரத்தில் பங்கு தர திமுக மறுப்பதாகவும் காங்கிரஸின் அடிமட்டத் தொண்டர்கள் தொடர்ந்து தலைமைக்கு அழுத்தம் கொடுத்து வந்தனர்.இதன் விளைவாகத்தான் இந்த விலகல். மேலும் தமிழக அரசியலின் எதிர்காலம் இனி விஜய் தான் என்பதால் அவருடன் கூட்டணி அமைத்து,  ஆட்சி, அதிகாரம் என சுகம் காணலாம் என  காங்கிரஸ் கட்சியினர் விரும்புவதாக கூறப்படுகிறது.

இதற்கிடையில் சமீபத்தில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் பேசிய ராகுல் காந்தி, “நாட்டில் ஆர்எஸ்எஸ், காங்கிரஸ் ஆகிய இரு வேறு கொள்கைகள் மட்டுமே பிரதானமாக உள்ளன. மற்ற கட்சிகளால் இவற்றை எதிர்த்து போரிட முடியாது.  இறுதியில் காங்கிரஸ்தான் பாசிச சக்திகளை வீழ்த்தும்” என மற்ற கட்சிகளை மறைமுகமாகத் தாக்கி ராகுல்காந்தி பேசி பரபரப்பை ஏற்படுத்தினார்.
தமிழகத்தில் தொடங்கியுள்ள இந்த ‘விஜய்-காங்கிரஸ்’ என்ற புதிய அரசியல் அத்தியாயம், தேசிய அரசியலின் சதுரங்க ஆட்டத்தை மாற்றிக் காட்டுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்..
Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *